Header Ads



முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக தமிழர்கள் குரல் கொடுப்பதைப்போன்று, தமிழர் உரிமைகளுக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும்


- M. A. Sumanthiran -

எமது கோரிக்கைகள் நியாயமானது. அதனை சில சிங்களவர்களும் விளங்கிக்கொண்டுள்ளனர்! 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக 'சட்டஹன' எனும் சிங்கள வானலையில் ஒலிபரப்பப்பட்ட காணொளியில் சுருக்கம் தமிழில் வருமாறு:

"தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அநேக தரப்பினர் சேர்ந்து மாபெரும் கவனயீர்ப்பு பாத யாத்திரை ஒன்றினை ஆரம்பித்திருந்தனர். கிழக்கின் பொத்துவில் தொடங்கி வடக்கின் பொலிகண்டி வரை 5 நாட்களுக்கு இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சுதந்திர தினமாகிய 4ம் திகதி இப்பேரணி காத்தான்குடியினை வந்தடைந்த போது அங்கு பெருமளவிலான முஸ்லீம் மக்களின் பங்களிப்பினை கண்டு நாம் வியப்படைந்தோம். கடும் மழையினையும் பொருட்படுத்தாது இந்த நடைபயணம் தொடர்ந்தது. 

காத்தான்குடியில் சுதந்திர தினமன்று திரு. M.A. சுமந்திரன் அவர்கள் முக்கியமான கருத்தினை பதிவு செய்திருந்தார். 'எண்ணிக்கையில் குறைவாயிருக்கும் ஒரே காரணத்திற்காக எமது வேண்டுகோள்களுக்கு செவிமடுக்காதிருப்பதேன்?' தமிழ் பேசும் மக்கள் என்றவகையில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக  உறவுகள் இணைந்து எமது உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்' என  தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் அநேகர் இக்கருத்தினை முன்வைத்தபோதும்  செயற்படுத்தவில்லை. தொடர்ந்தும் அவர் முஸ்லீம் சமூகத்தினரை தமிழ் மக்களோடு இணைந்து செயலாற்ற அழைப்பினை விடுத்திருந்தார். முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக தமிழ் மக்கள் குரல் கொடுப்பதைப்போன்று தமிழர் உரிமைகளுக்காக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தார். 

இப்பேரணியில் ஜனாஸா எரிப்பு, மலையக மக்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளம், தமிழ் மக்களுக்கெதிரான மனித உரிமை மீறல் மற்றும் காணாமல் போன உறவுகளுக்கான நீதி போன்ற தமிழ் பேசும் சமூகங்கள் அனைத்தினதும் பல்வேறு கோரிக்கைகள்  முன்வைக்கப்பட்டதனால் தான்  இப்பேரணி முக்கிய வரலாற்று நிகழ்வாக திகழ்கின்றது.

பல்வேறு காரணங்களால் தமக்குள் பிளவுபட்டிருந்த தமிழ் பேசும் சமூகம் இப்போராட்டத்தில் ஒன்றிணைந்திருக்கின்றது. சுதந்திரத்தின் பின்பதான தேசிய அரசியல் சிறுபான்மையினரை எதிரிகளாக காண்பித்தே பெரும்பான்மை மக்களின் ஆதரவினை நாடிவந்துள்ளது. இதனால் தான் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இன்று தமது உரிமைகளுக்காக தாங்களே குரல்கொடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலையக தமிழர் என அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து பயணிக்குமா ? இவர்களுக்கு பெரும்பான்மை சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட அங்கங்கள் தமது ஆதரவினையும் வழங்குமா? இவற்றிற்கான பதில் சாதகமானதாக அமையுமாயின், இலங்கை ஜனநாயகத்தோடு கூடிய சமாதானமான நாடக முன்னேற வழிவகுக்கும். அவ்வாறில்லாது  இவற்றினை தொடர்ச்சியாக புறக்கணித்தும் இப்போராட்டங்களை அடக்கியாள முற்பட்டால் முன்பிருந்ததைவிடவும் பாரதூரமான வன்முறை கலாச்சாரத்தினை நாம் எதிர்நோக்க நேரிடலாம்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் சுதந்திர தினத்தினை கருப்பு நாளாக, அமைதியான முறையில் அனுஷ்டித்தனர். "சுதந்திரம் என்பது பெரும்பான்மை சமூகத்திற்கு மட்டும் தானா?" என்ற கேள்வியோடு அவர்கள் இதனை முன்னெடுத்தனர். 

சிலர் இதனை 'புலிகள் மீண்டும் உருவாகின்றனர்' என்றோ, 'பயங்கரவாதிகள் தலை தூங்குகின்றனர்' என்றோ, 'கிளர்ச்சிக்காரர் உருவாகின்றனர்' என்றோ அடையாளப்படுத்த கூடும். ஆயினும் இவ்வாறான அகிம்சை ரீதியான போராட்டங்களை மேற்கொண்டு எந்த மக்கள் கூட்டமும் தமது உரிமைகளை கோர ஜனநாயக வழியில் இடமுண்டு. இவற்றுக்கு செவிசாய்க்காது முடக்க முயல்வதே ஆயுத போராட்டங்களுக்கு வழிவகுக்கும். 

எனவே அவ்வாறு அவர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளாது அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்கள் எந்த இனத்திற்கும் எதிரானவர்களோ, எந்த இனமும் தமக்கு கீழே இருக்க வேண்டுமென்றோ கோரவில்லை மாறாக பெரும்பான்மை சமூகத்தினரை போன்று சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதனையே கோருகின்றனர்.  

இப்போராட்டத்தினை தடுக்க காவல்துறை அநேக மாவட்டங்களில் நீதிமன்ற தடையினை கோரி நின்றது, இது ஜனநாயக வழியில் கோரிக்கையினை முன்னெடுக்காது ஆயுதத்தினை மறுபடி ஏந்த வைப்பதற்காகவா?"

No comments

Powered by Blogger.