அறிஞர் அகார் முஹம்மதின் பேஸ்புக்கில், வெளியாகியுள்ள உருக்கமான பதிவு
- Ash-Sheikh Agar Muhammed -
இந்தப் புகைப்படம் எதேச்சையாக இன்று (17-02-21) என் கண்ணில் பட்டது. இது மிகச் சாதாரண ஒரு புகைப்படம். ஆனால் என்னைப் பொறுத்தவரை எனது வாழ்வில் மறக்கவே முடியாத தருணத்தை நினைவூட்டும் புகைப்படம்.
எல்லோரும் போல தமது குடும்ப வாழ்வின் முதலிரவை நினைவில் வைத்திருப்பர்; அவ்வப்போது நினைவு கூரவும் செய்வர். முதலிரவைப் போலவே அனைவரது குடும்ப வாழ்விலும் ஓர் இறுதி இரவும் உண்டு என்பது உண்மையல்லவா?
எனது குடும்ப வாழ்க்கையின் இறுதி இரவில் க்லிக் செய்யப்பட்ட ஒரு ஃபோட்டோ தான் இது. முதலிரவு தெரிந்து வருவது; இறுதி இரவோ தெரியாமல் வருவது. நானும் இந்த ஃபோட்டோ பிடிக்கப்பட்ட அந்த இரவை இறுதி இரவாக தெரிந்திருக்கவில்லை; தெரிந்திருக்க வாய்ப்பில்லையல்லவா?!
ஒவ்வொரு 'முதலு'க்கும் ஒரு 'முடிவு'- 'இறுதி'யும் இருக்கின்றது; ஆனால் அந்த முடிவு எப்போது வரும் என்பது தான் எவருக்கும் உறுதியாகத் தெரியாதது. இந்த விதி, விதிவிலக்கில்லாமல் படைக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்துக்கும் ஏற்புடையவொன்று.
இந்த உண்மையை எப்போதும் மனதிற் கொண்டு வாழ முடியுமென்றிருந்தால் வாழ்வு சீராகவும் சிறப்பாகவும் இருக்கும். குறிப்பாக குடும்ப வாழ்க்கை சுகமாகவும் சுமுகமாகவும் இருக்கும்; வழியனுப்பும் போது கவலை இருந்தாலும் கைசேதம் இருக்காது. இல்லாதபோது வாழ்நாள் முழுக்க கவலையோடு கைசேதமும் குற்ற உணர்வும் கொல்லாமல் கொல்லும்.
இந்தவகையில் அவர் ஒரு பாக்கியசாலி; தனது கணவரின் திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்த ஒரு பெண் சுவனம் நுழைவார் என்பது நபி வாக்கு. இந்த வாக்குக்கு சொந்தக்காரராக இருக்கும் தகுதியை அவர் பெறுவார் என நான் நம்புகின்றேன்; கணவனின் திருப்தியை முழுமையாகப் பெற்ற நிலையிலேயே அவர் தனது வாழ்வை முடித்துக் கொண்டார் என்பதற்கு நான் சாட்சி சொல்கின்றேன்.
அவர் தாருல் பனாவிலிருந்து தாருல் பகாவுக்கு பயணித்து கடந்த அக்டோபர் மாதத்தோடு நான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவரது நினைவில் நான் வாழ்ந்தாலும் அவரை நினைத்து நான்கு வரிகள் எழுத வேண்டும் என நான் நாடியபோதெல்லாம் என்னால் நேற்றுவரை எழுத முடியாமல் போய்விட்டது. இந்த வரிகளை எழுத நான்கு ஆண்டுகள் கழிய வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட காயமது.
اللهم اغفر لها وارحمها وعافها واعف عنها وأكرم نزلها ووسع مدخلها واغسلها بالماء والبرد والثلج ونقها من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس!
அவருக்காக நீங்களும் துஆ செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். எனது முடிவும் ஹுஸ்னுல் காத்திமாவாக அமைய துஆ செய்யுங்கள் உறவுகளே!
வாசிப்போருக்கு ஒரு படிப்பினையாக அமையட்டும் என்பதற்காகவே இந்தப்பதிவும் பகிர்வும்.
"Allahumagfirlaha warhamha"
ReplyDelete