ஜனாஸாக்களை எரிப்பது முஸ்லிம்களுக்கு, எதிரான திட்டமிட்ட ஒடுக்குமுறை - அவுஸ்திரேலிய செனட் சபையில் உரை
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவது குறித்து சுட்டிக்காட்டி அவுஸ்திரேலிய கீறின்ஸ் கட்சி செனெட்டர் ஜனெட் ரைஸ் உரையாற்றியுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் பார்வையிட்டுள்ளோம் அது இலங்கை கடந்தகால வன்முறைகளுக்கு தீர்வை காணதவறியதால் மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் ஆபத்து அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது என செனெட்டர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வருடகாலத்தில் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் ஆழமாகியுள்ளமை அரசசெயற்பாடுகளில் இராணுவமயப்படுத்துதல் இனதேசியவாத கருத்துக்கள் சிவில் சமூகத்தினர் கண்காணிக்கப்படுதல் போன்ற கவலை தரும் போக்குகள்தீவிரமடைந்துள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இரண்டு விடயங்கள் குறித்து குறிப்பாக சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கட்டாய தகனத்;திற்கு உட்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக தாங்கள் பெருந்துயரிற்கு உள்ளாகியுள்ளதாக பல சமூக உறுப்பினர்களிடமிருந்தும் குழுக்களிடமிருந்தும் நாங்கள் அறிந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்குமாறாகவும் முன்னெடுக்கப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல்களை தகனம் செய்யவேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்யாததை கருத்தில் கொள்ளும்போது இது மேலும் கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் இது முஸ்லீம் மக்களிற்கு எதிரான குறிப்பிட்ட ஒடுக்குமுறை போல தோன்றுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
நான் யாழ்ப்பாணத்தில் பல்கலைகழக வளாகத்திற்குள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் எனவும் செனெட்டர் தெரிவித்துள்ளார்.
ஆகவே என்னுடன் தொடர்பில் உள்ள இலங்கை சமூகத்தின் உறுப்பினர்களே அங்கு நடைபெறுவது குறித்து நீங்கள் கடும் கவலை கொண்டுள்ளீர்கள் என்பதை நான் அறிவேன், நாங்கள் இலங்கை அரசாங்கத்தை மனித உரிமைகளை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தை குறிப்பாக வெளிவிவகார அமைச்சரை இராஜதந்திர அளவிலும் அமைச்சரவை அளவிலும் இது குறித்த கரிசனைகளை எழுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment