தெற்காசியாவின் மிக நீளமான “நீர்ப்பாசன சுரங்கப்பாதை” நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்
28 கி.மீ நீளமுள்ள தெற்காசியாவின் மிக நீளமான “நீர்ப்பாசன சுரங்கப்பாதை” நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) முற்பகல் அனுராதபுரம், பலுகஸ்வெவவில் ஆரம்பித்து வைத்தார்.
5,000 குளங்களை புனரமைக்கும் 'நீர்ப்பாசன சுபீட்சம்' திட்டத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் இந்த சுரங்கப்பாதை நிர்மாணிக்கப்படுகிறது. மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் 6 வது மற்றும் இறுதி திட்டமாக வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மொரகஹகந்த மற்றும் களு கங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை ரஜரட்டவுக்கு கொண்டுசெல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இது சூழல் நட்பு அபிவிருத்தி திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மொரகஹகந்த மற்றும் களு கங்கை நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீர் 65 கி.மீ கால்வாய் வழியாக யகல்ல வரை கொண்டு செல்லப்படுகிறது. கால்வாய் நிர்மாணிக்கும் போது 03 சரணாலயங்களை கடந்து செல்ல வேண்டும். இதன் போது சூழல் மற்றும் வனவிலங்குகளுக்கு சேதம் ஏற்படாமல் தடுக்கும் வகையிலேயே இந்த நீர்ப்பாசன சுரங்கம் அமைக்கப்படுகிறது. எலஹெர கொந்துருவெவவில் ஆரம்பிக்கும் இந்த சுரங்கம் பலுகஸ்வெவ மகமீகஸ்வெவவில் முடிகிறது.
ஆறு ஆண்டுகளில் நிறைவுசெய்யப்பட திட்டமிடப்பட்டிருந்த வட மத்திய மாகாண பிரதான கால்வாய் திட்டத்தை நான்கு ஆண்டுகளில், 2025 க்குள் நிறைவுசெய்ய ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். இலங்கை அரசாங்கம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் நிதியளிக்கப்பட்ட இத்திட்டத்தின் சுரங்கப்பாதைக்கான மொத்த செலவு 244 மில்லியன் அமெரிக்க டொலர்களாக்கும்.
வட மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் வறுமை மற்றும் சிறுநீரக நோய்க்கு நீர் பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது. இந்த திட்டம் நிறைவடைந்த பின்னர், வட மத்திய மாகாணத்தில் உள்ள 13 பிரதேச செயலக பிரிவுகளில் வாழும் 25,000 குடும்பங்கள் பயனடைவார்கள். 1200 சிறிய குளங்களுக்கு நீர் வழங்குவதன் மூலம் இரண்டு போகங்களிலும் 43,000 ஹெக்டேர் காணிகளில் பயிர் செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
“நீர்ப்பாசன சுபீட்சம்” வட மத்திய மாகாண பிரதான கால்வாய் நீர்ப்பாசன சுரங்கப்பாதை நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் அங்குரார்ப்பண விழா அனுராதபுரம், மஹாமீகஸ்வெவவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இன்று முற்பகல் சுப நேரத்தில், மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்துடன் நினைவுப் பலகையை திறைநீக்கம் செய்து ஜனாதிபதி அவர்கள் திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
ஆரம்ப கால மன்னர்களின் வழியை பின்பற்றி வானத்திலிருந்து விழும் மற்றும் கடலை சென்றடையும் நீரை வயல் நிலங்களின் பயிர்செய்கைக்காக பயன்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று இந்த நிகழ்வில் உரையாற்றிய நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
'சுபீட்சத்தின் நோக்கு“ கொள்கைத் திட்டத்தை யதார்த்தமாக்கும் வகையில் ரஜரட்டைக்கு இதுவரை கனவாக இருந்த குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் வட மத்திய மாகாண பிரதான கால்வாய் வழியாக கிடைப்பதன் மூலம் மக்கள் வாழ்க்கைக்கு வளம் சேர்த்திருப்பதாக மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள் மற்றும் குடியேற்றங்கள், பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
மூன்று நிகாயக்களையும் சேர்ந்த மகா சங்கத்தினர், அமைச்சர்கள், நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன உள்ளிட்ட இராஜாங்க அமைச்சர்கள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் மக்கள் பிரதிநிதிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.02.05
He think this Rajapakse want to stay on power forever that´s a reason always bhudist monks are presenting infront every covner.
ReplyDelete