ஐ.நா. கூட்டத்தொடர் தீர்மானமிக்கது - முஸம்மில்
நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம்மாதம் இடம்பெறவுள்ள 46வது கூட்டத்தொடர் தீர்மானமிக்கதாக அமையும். மனித உரிமை ஆணையாளர் இதுவரை இராணுவத்தினருக்கு எதிராகவே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
ஆனால் தற்போது அரசாங்கத்துக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இலங்கை தொடர்பில் அவர் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
30 வருட கால யுத்தம் முழு நாட்டுக்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. பாரிய போராட்டத்திற்கு மத்தியில் யுத்தம் 2009 மே மாதம் 19 ஆம் திகதி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
2009 மே மாதம் 27 ஆம் திகதி இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் முதலாவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயத்தை பொறுமையாக கையாண்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக முன்வைக்கப்டபட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயும் 5 சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கி மெக்ஷவெல் பரணகம ஆணைக்குழுவை நியமித்தார்.
2014 பெப்ரவரி மாதம் 23 ஆம் திகதி பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் குற்றங்கள் ஏதும் இடம்பெறவில்லை என்றும், சர்வதேச யுத்த கோட்பாடுகளுக்கு அமைய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளது என்றும் பரணமக ஆணைக்குழுவின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் உள்ள தவறான நிலைப்பாட்டை திருத்த அரசாங்கம் முயற்சித்த வேளை 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
கடந்த அரசாங்கம்புலம் பெயர் அமைப்புக்களுக்கும், அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களுக்கும் முன்னுரிமை வழங்கியது.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30.1 பிரேரணைக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரச தலைவர்களுக்கும், நாடாளுமன்றுக்கும் அறிவிக்காமல் இணை அனுசரனை வழங்க இணக்கம் தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சர்வதே அமைப்புக்களின் நோக்கங்கள் நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தப்பட்டன.
அரசியல் நோக்கங்களை கொண்டு பாதுகாப்பு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் சிறைப்படுத்தப்பட்டார்கள். நாட்டுக்கு எதிராக செயற்பட்டதால் கடந்த அரசாங்கத்தை மக்கள் புறக்கணித்தார்கள்.
நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேச அமைப்புக்களுக்கு அடிபணிய போவதில்லை என்று ஜனாதிபதி தெளிவாகவும், அழுத்தமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட 30.1 பிரேரணையில் இருந்து அரசாங்கம் விலகிக் கொண்டமை முதற்கட்ட செயற்பாடாகும். இம்மாதம் இடம் பெறவுள்ள 46வது கூட்டத்தொடர் தீர்மானமிக்கமாக காணப்படும்.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுமேந்தி போராடியதன் இலக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் பிரேரணைகள் ஊடாக புலம்பெயர் அமைப்புக்களுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிக்கிறார்.
யுத்தக்குற்றங்கள் இடம்பெறவில்லை என சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் மனித உரிமை ஆணையாளர் கவனம் செலுத்தவில்லை. குற்றச்சாட்டுக்கள் பொய் என்பதை இம்முறை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்றார்.
Post a Comment