Header Ads



இம்ரான் - ஜனாதிபதி இடையே பேசப்பட்டது என்ன..? வெளியாகியது அறிக்கை


இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகைதந்த பாகிஸ்தான் பிரதமரை ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் வரவேற்றனர்.

ஜனாதிபதி அவர்களும் பாகிஸ்தான் பிரதமரும் இருதரப்பு உறவுகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.

இரு நாடுகளிலும் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

விவசாயிகளுக்கு அதிக வருமானத்தையும் நுகர்வோருக்கு நிவாரண விலையையும் வழங்கும் வகையில் விவசாய பொருளாதாரத்தை மேம்படுத்துவதே தங்களது குறிக்கோள் என்று தலைவர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் விவசாய பொருளாதாரம் இலங்கையின் பொருளாதாரத்துடன் மிகவும் ஒத்திருக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

இலங்கையின் ஏற்றுமதி துறையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மேம்பாடு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் ஜனாதிபதி அவர்களும் பாகிஸ்தான் பிரதமரும் கவனம் செலுத்தினர்.

கோவிட் தொற்றுநோய் ஒழிப்புடன் இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி அவர்கள், இரு நாடுகளினதும்  சுற்றுலாத் துறை முன்னேற்றத்திற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்து தெரிவித்தார்.

தொழில்நுட்ப அறிவு பரிமாற்றம் உட்பட பல துறைகள் குறித்து தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தும் ஷா மெஹ்மூத் குரேஷி, வர்த்தக நடவடிக்கைகள் குறித்த பிரதமரின் ஆலோசகர் அப்துல் ரசாக் தாவூத், பிரதமரின் வெளிவிவகார நடவடிக்கைகளுக்கான விசேட உதவியாளர் புகாரி சையத் சுல்பிகார், பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளர் சொஹைல் மெஹ்மூத், இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) மொஹமட் சாட் கட்டக், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2021.02.24

No comments

Powered by Blogger.