Header Ads



உடல்களை அடக்க ஆதரவாகவும், சன்ன பெரேராவின் நடவடிக்கையை எதிர்த்தும் 8 பேர் இராஜினாமா செய்ததை அரசு மறைக்கிறது


- வீரகேசரி -

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஆராய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் தொழிநுட்ப குழு ஒருதலைப்பட்சமாகவே  தீர்மானங்களை மேற்கொண்டுவருகின்றது. அதனாலேயே அதன் அங்கத்துவர்களாக இருந்த 8 பேர் இராஜினாமா செய்திருக்கின்றனர். என்றாலும் அரசாங்கம் அவர்களின் ராஜினாமாவை மறைத்துவருகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று -02- செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஆராய சுகாதார அமைச்சினால் ஆரம்பமாக நியமிக்கப்பட்ட வைத்தியர் சன்ன பெரேரா தலைமையிலான தொழிநுட்பகுழுவில் இருந்து வைத்தியர்கள் மற்றும் நிபுணர்கள் என 8 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

தொழிநுட்ப குழு கடந்த வாரம் கூடியபோது, கொவிட்டில் மரணிப்பவர்களை அடக்கம் மற்றும் தகனம் செய்ய சர்வதேச நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கியிருக்கும் வழிகாட்டலின் பிரகாரம் அனுமதிக்கவேண்டும் என இவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

என்றாலும் மற்றும் சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில் வைத்தியர் சன்ன பெரேராவும் அடக்கம் செய்ய தற்போதைக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து, அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். அத்துடன் தற்போது நாட்டில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது. இந்த நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் இதுதொடர்பாக ஆராயலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வைத்தியர் சன்ன பெரேரா தலைமையிலான ஒருசிலரின் ஒருதலைப்பட்டசமான நடவடிக்கையை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என தெரிவித்தே குறித்த 8 பேரும் தங்களின் ராஜினாமா கடித்தினை அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருக்கின்றனர்.

அத்துடன் தொழிநுட்ப குழுவில் இருந்து 8 பேர் ராஜினாமா செய்த விடயத்தை அரசாங்கம் மறைத்து வருகின்றது. அரசாங்கத்தின் இந்த தொழிநுட்ப குழு அரசாங்கத்துக்கு தேவையான முறையிலேயே தீர்மானங்களை மேற்கொண்டு வருவதாக நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தெரிவித்திருக்கின்றோம். இந்த குழுவில் சட்ட வைத்தியர்களே அதிகம் இருக்கின்றனர். வைரஸ் தொடர்பாக ஆராய சட்ட வைத்தியர்களுக்கு முடியாது. அதுதொடர்பான அறிவு அவர்களுக்கு இல்லை. 

மேலும் கொவிட்டில் மரணிப்பவர்களை அரசாங்கம் பலவந்தமாக தகனம் செய்ய எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதே நாடுகள் அரசாங்கத்தை வன்மையாக கண்டித்திருக்கின்றன. இந்நிலையில் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இதுதொடர்பாக அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டிய நிலை ஏற்படும். அதனால் தற்போது அரசாங்கம் தடுமாற்றத்தில் இருக்கின்றது. 

இதற்கு முன்னர் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் உலமா சபை உறுப்பினர்களை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பி, எமக்கான ஆதரவை பெற்றுக்கொண்டனர்.  இந்த முறை அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.