Header Ads



3 உப ஜனாதிபதிகள் சிறுபான்மையினர், தேசிய பட்டியலில் 25 வீதம் சிறுபான்மை இன பிரதிநிதித்துவம் - ம.ம.மு.


சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளில் மலையக மக்கள் முன்னணி குறிப்பிட்டுள்ளதுஇலங்கையின் புதிய அரசியல் யாப்பிற்கான முன்மொழிவுகளை மலையக மக்கள் முன்னணி நேற்று -21- கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியல் நிபுணர் குழுவிடம் கையளித்துள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் இந்த ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த முன்மொழிவுகளில் பின்வரும் முக்கிய விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

*இலங்கையில் பிரதான நான்கு தேசிய இனங்களாக சிங்களவர்கள் இலங்கைத் தமிழர்கள் மலையக தமிழர்கள் முஸ்லிம்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்படுவதோடு பரங்கியர், ஆதிவாசிகள், மலாயர் ஏனைய சிறு சமூகங்களும் இலங்கையின் மக்கள் என குறிப்பிடப்பட வேண்டும்.

*சிறுபான்மை இனங்களினது அடையாளங்களை பாதுகாத்தல் அவர்களுடைய கலாசார, சமய மரபுகளை பாதுகாத்தல் மற்றும் தொல் பொருள் சான்றுகளை பாதுகாத்தல் என்பன குழு உரிமைகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

*நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தொடரப்பட வேண்டும்.அதே நேரம் இலங்கையில் சிறுபான்மை இனத்தை சார்ந்த ஒருவர் ஒருநாளும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட முடியாது.

எனவே இலங்கையின் சிறுபான்மை இனங்களான வடகிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்களுக்கு அவர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மூவினங்களுக்கான உப ஜனாதிபதிகள் மூவர் பாராளுமன்றத்தில் சிறுபான்மையினர் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட வேண்டும்.

*பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் தேசிய பட்டியல் உறுப்பினர்களில் 25 வீதத்தினராவது மூன்று சிறுபான்மை இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்களாக இருக்க வேண்டும்.

*மலையக தமிழர்கள் வாழ்கின்ற பெருந்தோட்ட பிரதேசங்கள் பொது நிர்வாக கட்டமைப்பிற்குள் முழுமையாக உள்வாங்கப்பட்டு அக்குடியிருப்புகள் கிராமங்களாக அங்கீகரிக்கப்பட்டு நாட்டின் கிராமிய முறைமைக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இவை உட்பட இன்னும் பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா நிருபர்

No comments

Powered by Blogger.