Header Ads



பஸ் விபத்தில் 13 பேர் காயம் (படங்கள்)


நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதி, நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில், இன்று (22) பகல் இடம்பெற்ற பஸ் விபத்தில், 13 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலையிலிருந்து தலவாக்கலைப் பகுதிக்கு, மரண வீடு ஒன்றுக்குச் சென்ற பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது. 

மேற்படி பஸ், ரதல்ல குறுக்கு வீதியில் வைத்து முன்னேச் சென்ற பவுஸருடன் மோதி இழுத்துச் சென்று மண்மேட்டில் மோதுண்டு இவ்வாறு பஸ் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது. 

பஸ்ஸில் 18 பேர் பயணித்துள்ளதுடன், இதில் 13 பேர் பலத்தக் காயங்களுடன் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக, பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துத் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.கணேசன், ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ், டி.சந்ரு




No comments

Powered by Blogger.