Header Ads



தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராகப் போராடிய என்னை பொலிசார் தாக்கினர் – வியாழேந்திரன்


(கனகராசா சரவணன்)

தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எங்களைத் தாக்கிய பொலிசார் எம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்தின் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று திங்கட்கிழமை (11) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் அமைச்சர் உள்ளிட்ட 5 பேரும் ஆஜராயினர். இதன்போது வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

இதன் பின்னர் அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பலபேர் உயிரிழந்தனர். அந்த குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சோந்த தற்கொலைக் குண்டுதாரியான ஆசாத்தின் உடற்பாகத்தை கள்ளியன்காடு இந்து மயானத்தில் பொலிசார் புதைத்தனர்.

இந்து மயானத்தில் எமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்த பயங்கரவாதியை புதைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது மக்களின் பிரதிநிதிகளான நாங்கள் அவ்விடம் சென்று புதைக்கப்பட்ட அந்த உடற்பாகத்தை தோண்டி எடுத்குமாறு மக்களுடன் சேர்ந்து குரல் கொடுத்தவேளை பொலிஸார் எங்களை பெண்கள் என்றும் பாராது மிக மோசமாக பலமாகத் தாக்கினார்.

அந்த அடிப்படையில் செல்வி மனோகரன், அனோஜன், சுசிலா, றொஸ்மன் ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டவர்கள் மீதும் என்னையும் சேர்த்து மொத்தமாக 5 பேருக்கு எதிராக பொலிசார் வழக்குத் தாக்குதல் செய்தனர்.

இருந்தும் மக்கள் போராட்டம் வெற்றி பெற்றது. அந்தப் போராட்டத்தின் பிற்பாடு நீதிமன்றம் புதைக்கப்பட்ட உடற்பாகத்தை தோண்டி எடுத்து காத்தான்குடி பிரதேசத்தில் புதைத்தது. ஆனால் அந்தப் போராட்டத்தில் மக்களுடன் இணைந்து ஈடுபட்டதாக தொடர்ச்சியாக நீதிமன்றத்திற்கு வழக்கிற்கு வந்து செல்கின்றோம்.

அதேவேளை பொலிஸார் பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளனர். எது எவ்வாறாயினும் நீதி தர்மம் வெல்லும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என்றார்.


No comments

Powered by Blogger.