பாத்திமா பஜீகா நீக்கம் - தயாசிறிக்கு இடைக்காலத் தடை
- அஸ்லம் எஸ்.மௌலானா -
ஏறாவூர் நகர சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் பாத்திமா பஜீகாவின் அங்கத்துவத்தை முடிவுறுத்தியதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம், அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுக்கு ஆரதவளித்து, அவரது தேர்தல் முகவராக செயற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் திருமதி அலியார் பாத்திமா பஜீகாவின் கட்சி அங்கத்துவம் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவால் நீக்கப்பட்டிருந்தது.
இச்செயல் சட்டமுரணான செயல் என்று கட்டளையிடக்கோரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றில் பஜீகா வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கு, கொழும்பு மாவட்ட நீதிபதி ரஸான்த கொடவெல முன்னிலையில் இன்று (11) எடுக்கப்பட்டபோது, வழக்காளி சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர், கனிஷ்ட சட்டத்தரணி எம்.ஐ.எம்.ஐனுள்ளாஹ் மற்றும் சட்டத்தரணி ஆனந்த குலவன்ஸ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரின் வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, குறித்த வழக்காளியின் அங்கத்துவம் நீக்கப்பட்டதானது முதற்தோற்ற பார்வையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கும் இயற்கை நீதிக்கும் முரணானது என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டு, வழக்காளியை கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கிய தீர்மானத்தை இடைநிறுத்தி கட்டானை வழங்கினார்.
இவ்வழக்கு எதிர்வரும் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் நீதிமன்றுக்கு ஆஜராகுமாறு மேற்படி பிரதிவாதிகள் இருவருக்கும் அழைப்பாணை அனுப்புமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர முதலாவது பிரதிவாதியாகவும் தெரிவத்தாட்சி அலுவலகர் ஆர்.சகீலன் இரண்டாவது பிரதிவாதியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Post a Comment