Header Ads



கொரோனா மரணத்தில் சந்தேகம், மீளாய்வு மனு தாக்கல் - சட்டமா அதிபரை மன்றில் தோன்றுமாறு கட்டளை


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்ததாக கூறப்படுகின்ற சம்மாந்துறையைச் சேர்ந்த நபரின் மரணம் தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கட்டளை எதுவும் பிறப்பிக்கப்படாமல், தவிர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

80 வயது நிரம்பிய குறித்த நபர் நோய்வாய்ப்பட்டு, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2020-12-10 ஆம் திகதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து, அன்றைய தினமே கொழும்பு ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் மூலம் கொண்டு செல்லும் வழியில் அவர் மரணமடைந்திருந்தார். அதனைத் தொடர்ந்து மீளவும் அஷ்ரப் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, பிரேத அறையில் அவரது ஜனாஸா வைக்கப்பட்டுள்ளது.

இதுவே கிழக்கு மாகாணத்தில் பதிவான முதலாவது கொவிட் தொற்று மரணம் என சுகாதாரத்துறையினரால் அறிவிக்கப்பட்டது. இதனால் அவரது ஜனாஸாவை, நல்லடக்கத்திற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது தந்தையின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதால் மரண விசாரணை நடத்துமாறு இவ்வைத்தியசாலையில் கடமையாற்றும் அவரது புதல்வியான வைத்தியர் இவ்வைத்தியசாலையின் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனை வைத்திய அத்தியட்சகர் சம்மாந்துறை பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். இதையடுத்து பொலிஸார் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இவ்விடயமாக மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதனை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றமானது, கல்முனை நீதவான் நீதிமன்றுக்கு பாரப்படுத்தியிருந்த நிலையில், இவ்வழக்கு திங்கட்கிழமை (04) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, மரணித்தவரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி முஹைமீன் காலித் தலைமையிலான சட்டத்தரணிகள், குறித்த நபரின் மரணத்திற்கான காரணம் தொடர்பில் கண்டறிவதற்காக மரண விசாரணையை மேற்கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி, தமது வாதங்களை முன்வைத்த அதேவேளை, அத்தகைய விசாரணைக்கான அவசியம் எமக்கு எழவில்லை எனவும் அந்த உடலத்தை தகனம் செய்வதற்கு அனுமதிக்குமாறும் பொலிஸாரினால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இரு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த நீதவான், மரண விசாரணைக்கு உத்தரவிட முடியாது எனவும் அதேவேளை உடலத்தை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்க தமக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவித்து, நீதிமன்றம் தவிர்ந்து கொண்டுள்ளது.

இதையடுத்து, மரணித்தவருக்கு சார்பாக சட்டத்தரணி முஹைமீன் காலித் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவொன்றினால் கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பான நிலைப்பாட்டை புறத்தொதுக்கும்படியும் மரண விசாரணைக்கு கட்டளையிடுமாறும் கோரியே இம்மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனு கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி ஸ்ரீனித்தி நந்தசேகரன் முன்னிலையில் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணி முஹைமீன் காலித் உள்ளிட்ட சட்டத்தரணிகள், குறித்த நபரின் மரணம் தொடர்பில் மரண விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சமர்ப்பணங்களை முன்வைத்து, வாதிட்டனர். 

இவர்களது வாதங்களில் திருப்தியுற்ற நீதிபதி அவர்கள், பிரதிவாதிகளான சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை எதிர்வரும் 2021-01-21 ஆம் திகதியன்று மன்றில் தோன்ற அறிவித்தல் விடுக்குமாறு கட்டளையிட்டார்.

சட்டத்தரணிகளான எம்.மனார்தீன், அஸாம் ருஸ்தி, கதீப் அஹமட், இயாஸ்தீன், கமால் அஹமட், றிப்கான், ஜௌபீர்கான், றஸீன் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

கடந்த திங்கட்கிழமை (04) கல்முனை நீதவான் நீதிமன்றத்தினால் மரண விசாரணைக்கு உத்தரவிடப்படாத விடயத்தை சுட்டிக்காட்டி, சுகாதாரத்துறையினர் கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையின் பிரேத அறையில் இருக்கின்ற குறித்த நபரின் ஜனாஸாவை தகனம் செய்வதற்கு அன்றைய தினம் முயற்சி எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.