Header Ads



ரஞ்சனின் பாராளுமன்ற உறுப்புரிமையை, ரத்துசெய்ய முடியாது - ஹர்ஷ டி சில்வா


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -13- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு நீதிமன்றினாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச் செயல் ஒன்றை மேற்கொண்டு அதற்கு தண்டனை விதிக்கப்பட்டாலே நாடாளுமன்ற உறுப்புரிமை இழக்கப்படும் என அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிலும் அந்த தண்டனைக்காலம் ஆறு மாதங்கள் கடந்ததன் பின்னரே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்புரிமையை குறித்த தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

எனினும், ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நீதிமன்றத்தை அவமரியாதை செய்த குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குற்றச்செயலுக்கு குறைந்தபட்ச தண்டனைக் காலம் எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த சட்ட வாதத்தின் பிரகாரம் ரஞ்சன் ராமநாயக்க நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் இது குறித்து சட்ட ரீதியான வாதங்கள் முன்வைக்கப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஓர் சட்டத்தரணி கிடையாது எனவும் எனவே சட்ட விவகாரங்களில் திடமான எதனையும் குறிப்பிட முடியாத போதிலும் ஊகங்களை கூற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.