ஒரு வருடத்திற்கும் அதிகம் விளக்கமறியலில் இருந்த அஜித் பிரசன்ன பிணையில் விடுதலை
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கின் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்த குற்றச்சாட்டில் கொழும்பு மேலதிக நீதவானால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேலதிக நீதவான் நீதிமன்றம் விதித்த விளக்கமறியல் உத்தரவிற்கு எதிராக அஜித் பிரசன்ன தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த தேவிகா அபேரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் 5 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீரப்பிணைகளில் சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.
பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள அஜித் பிரசன்ன ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதிகள் குழாம் நிபந்தனை விதித்துள்ளது.
இதன் பின்னர் வழக்கு தொடுநருக்கோ சாட்சியாளர்களுக்கோ இடையூறு ஏற்படும் வகையில் செயற்படுவதில்லையென சந்தேகநபரான ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன பிரமாணப்பத்திரத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்.
Post a Comment