நமது Mp க்களின் சுயநல அரசியலே, கட்டாய ஜனாஸா எரிப்புக்கு பிரதான காரணம்
- Dr. Anpudeen Yoonus Lebbe -
ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமைகள் என்று ஒன்று உள்ளது. இலங்கைவாழ் முஸ்லிம் மக்களுக்கும் அந்த அடிப்படை உரிமைகள் உள்ளன. இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பில் தனிமனிதனின் அடிப்படை உரிமைகள் உள்வாங்கப்பட்டுள்ளன, அதற்குள் இந்த நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் முஸ்லிம்களும் உள்வாங்கப்பட்டு இருக்கிறார்கள். ஒரு மனிதன் இறந்ததன் பிற்பாடு எவ்வாறு அவனுடைய உடல் கண்ணியமான முறையில் அகற்றப்பட வேண்டும் என்பது அவனுடைய அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நன்மை கருதி மறுக்கப்பட வேண்டும் என்றால் அதற்கு தகுந்த காரணங்களை ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும்.
இன்று இந்த நாட்டில் தனி நபரின் கடைசி உரிமையான அவரின் உடலை அடக்கம் செய்தல் என்ற அடிப்படை உரிமை எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் மறுக்கப்பட்டு கட்டாய தகனம் நடைபெறுகிறது. கட்டாயத்தகனத்திற்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்து அதை உரிய முறையில் நிறுவி இதுவரையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் பேசியதாகக் தெரியவில்லை. உலக சுகாதார நிறுவனம் அடக்கம் செய்யலாம் என்று கூறி இருக்கிறது, உலக நாடுகள் அனைத்தும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள், நிலத்தடி நீர் (ground water), நிலநீர் மட்டம் (water table) நமது நாட்டைவிட உயர்வாக உள்ள நாடுகளிலும் அடக்கம் செய்கிறார்கள் என்ற பொதுவான வசனங்களைக்தான் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேசுகிறார்கள் ஆனால் பொதுவான கருத்துக்களைக் கொண்டு உண்மைக்கு புறம்பாக பேசுபவர்களை தோற்கடிக்க முடியாது. அவ்வாறு தோற்கடிக்க வேண்டுமாயின் அவர்களால் மறுக்க முடியாத உண்மையை ஆதாரங்களுடன் சரியான முறையில் நிறுவும் போது மட்டும்தான் அவர்களை தோற்கடிக்க முடியும்.
அரசாங்கம் கூறுகின்றது அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு இல்லை ஆனால் தொழில்நுட்பக் குழு (technical committee) அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை என்று. இதன் உண்மைத்தன்மை என்னவென்று அனைவரும் அறிந்ததே.
தொழில்நுட்பக் குழு கூறுகின்ற பிரதான இரண்டு காரணங்கள் என்னவென்றால் 1. நிலத்தடி நீர் (ground water) அல்லது நிலநீர் மட்டம் இலங்கையில் உயர்வாக காணப்படுவதாகவும் 2. இலங்கை வாழ் மக்கள் கிணற்று நீரையே குடிநீராக பாவிக்கிறார்கள் என்றும். Covid-19ஆல் பாதிக்கப்பட்ட உடல்களை அடக்கம் செய்யும் போது மேற்கூறிய இரண்டு பிரதான காரணங்களினால் Covid-19 virus இன் தொற்று அதிகரிக்கும் என்ற வாதத்தை முன்வைத்திருக்கின்றார்கள். இது முற்றிலும் விஞ்ஞானத்திற்கு எதிரான வாதமாகும் ஏனென்றால் இறந்த உடல்கள் (எந்தக் காரணங்களாக இருந்த போதிலும்) அண்டியுள்ள சூழலை மாசுபடுத்தாது எவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட வேண்டும் என்று விஞ்ஞானரீதியில் ஆராய்ந்து உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) வழிகாட்டியுள்ளது (Guidelines). அதன் அடிப்படையில்தான் இறந்த எந்த உடல்களும் அடக்கம் செய்யப்பட வேண்டும் அதேபோன்று அடக்கம் செய்யப்படும் இடமும் அமையவேண்டும் (Burial ground/Cemetery/Graveyard).
தொழில்நுட்பக் குழுவின் கருத்துப்படி அடக்கம் செய்யமுடியாது என்றால் எந்த உடல்களையும் அடக்கம் செய்ய முடியாது அல்லது அடக்கம் செய்ய முடியும் என்றால் எந்த உடல்களையும் அடக்கம் செய்ய முடியும், Covid-19 இனால் இறந்த உடல்கள் விதிவிலக்காக முடியாது ஏனெனில் நிலத்தடி நீருக்கோ அல்லது நிலத்திற்கோ தெரியாது இது Corona virus (கொறோணா வைரஸ்) அல்லது வேறு ஏதாவது வைரஸ், Bacteria, Fungus, etc என்று. அதுமட்டுமல்ல, தொழில்நுட்ப குழு அடக்கம் செய்வதற்கு எதிராக எந்த விஞ்ஞானரீதியான விளக்கத்தையும் முன்வைக்கவும் இல்லை.
நிலத்தடி நீரை புவியியல் ஆராய்ச்சியின் (Geological studies) படி இரண்டாக பிரிக்கப்படுகிறது 1. Unsaturated zone (நிறைவுறா மண்டலம்) 2. Saturated zone (நிறைவுற்ற மண்டலம்). நிறைவுற்ற மண்டலத்தின் (Saturated zone) மேற்பரப்பைதான் Water table (நிலநீர் மட்டம்) என்று கூறுவது. Unsaturated zone இல் உள்ள இடைவெளிகளில் முற்றுமுழுதாக நீர் இருக்காது, நீருடன் சேர்ந்து காற்றும் இருக்கும், இதனால்தான் இதை Unsaturated zone என்று கூறப்படுகிறது மாறாக Saturated zone இல் உள்ள இடைவெளிகள் முற்றாக நீரால் நிரம்பியிருக்கும்.
கிணற்றில் இருந்து நீர் அகற்றப்படும் போது கிணற்று நீர்மட்டம் குறைவடையும், அதை நிலத்தடி நீர் ஈடுசெய்யும். இங்கு கொண்டு வரப்படுகின்றன நீர் Saturated zone இல் இருந்து கொண்டு வரப் படுகின்றதே தவிர Unsaturated zone இல் இருந்து கொண்டு வரப்படுவதில்லை காரணம் Saturated zone இல் உள்ள இடைவெளிகள் முற்றாக நீரால் நிரம்பியுள்ளதால் அந்த நீரால் உருவாக்கப் படுகின்ற நீர் அழுத்தம் அங்குள்ள நீரை ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு உட்பட்ட கிணறுகளுக்குள் தள்ளுவதற்கு போதுமானது அதேநேரம் Unsaturated zone இல் காணப்படுகின்ற இடைவெளிகள் நீராலும் காற்றாலும் நிரம்பியுள்ளதால் அங்கு Capillary force (புழை விசை) எனப்படும் ஒருவகையான விசை உருவாக்கப்பட்டு அந்த விசை அங்குள்ள நீரை அந்த இடைவெளிக்குள் மிகவும் இறுக்கமாக பிடித்துக்கொள்கின்றது இதனால் கிணற்று நீர்மட்டம் குறைவடையும் போது Unsaturated zone இல் உள்ள நீரால் அதை ஈடுசெய்ய முடியாது.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல் என்ன கூறுகின்றது என்றால் உடல் புதைக்கப்பட்ட வேண்டிய இடம் Unsaturated zone அதாவது 1.5m நில நீர்மட்டத்திற்கு (Water table) மேலாகவும் 1m தரை மேற்பரப்பு (Ground surface) கீழாகவும் 50m குடிநீர் பகுதிக்கு அப்பாலும் அடக்கம் செய்யப்பட வேண்டும். ஒரு மனிதன் எவ்வாறு இறந்தாலும் அடக்கம் செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய முறை இதுதான். இதன் பொருள் என்ன?
1. புவியியல் ஆராய்ச்சியின் (Geological studies) படி Unsaturated zone இல் உள்ள நீர் கிணற்று நீருடன் கலக்காது ஆகவே இதை குடிநீராக பயன்படுத்த வாய்ப்பு இல்லை.
2.Saturated zone இல் உள்ள நீர் கிணற்று நீருடன் கலக்கும் அதனால் தான் Saturated zone இருந்து (or water table) 1.5m உயர்வாக Unsaturated zone இல் அடக்கம் செய்ய கூறப்பட்டுள்ளது அதாவது எந்த சந்தர்ப்பத்திலும் இறந்த உடல்களில் உள்ள கிருமிகள் நிலத்தடி நீருடன் சேர்த்து விடக்கூடாது என்பதற்காக, Covid-19 virus இதற்க்கு விதிவிலக்கு அல்ல, அனைத்து கிருமிகளுக்கும் பொதுவானது.
3.குடிநீர் கிணற்றில் இருந்து 50m க்கு அப்பால் புதைக்கப்பட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது காரணம் அனைத்தையும் தாண்டி ஒரு சிறியளவு கிருமிகள் ஏதாவது ஒரு காரணத்தால் (அதிக மழைவீழ்ச்சி) நிலத்தடி நீரை சேர்ந்து விட்டாலும், 50m க்கு அப்பால் உள்ள குடிநீர் கிணற்றில் சேராது காரணம் மண், கற்கள் அனைத்தும் இயற்கையான வடிகட்டியாகும் (Natural filters).
4.இவைகள் அனைத்தையும் தாண்டி கிருமிகள் கிணற்று நீருடன் சேரும் என்றால் அது கொறோணா வைரஸ் (Corona virus) மாத்திரம் சேரும் என்று பொருள் அல்ல, இறந்த உடல்களில் உள்ள அனைத்து கிருமிகளும் (Bacteria, fungus, Viruses, etc) சென்றடையும். மனித உடலில் இயற்கையாகவே பல வகையான கிரிமினல்கள் உள்ளன அதேபோன்று பலவகையான தொற்று நோய்களாலும் வேறு காரணங்களாலும் மனிதர்கள் மிருகங்கள் இறக்கின்றன. இறந்த உடல்கள் அனைத்தும் இறந்து சற்று நேரத்தில் decompose (அழுகுதல்/சிதைவடைதல்) ஆக தொடங்கிவிடும், புதைத்ததன் பிற்பாடு மண்ணில் உள்ள உயிரினங்களும் சிதைவு அடைவதை ஊக்குவிக்கும்.
தொழில்நுட்பக் குழு கூறுகின்ற விடயங்கள் உண்மையென்றால் தினமும் சிறிய நோயிலிருந்து பெரிய நோய்வரை இலங்கை வாழ் மக்கள் அவதியுற வேண்டும் காரணம் தினமும் பல்வேறு இடங்களில் இறந்த உடல்கள் (கொறோணாவால் இறந்த உடல்களை தவிர்த்து) புதைக்கப்படுகின்றன.
இலங்கையில் பெரும்பாண்மை யான பகுதி உலர் மண்டலம் (Dry zone) சிறுபான்மையான பகுதிதான் ஈரமான மண்டலம் (Wet zone). உலர் மண்டலத்தில் நிலத்தடி நீர் வேறுபட்ட ஆழங்களில் உள்ளன அதாவது 5mரை விடவும் ஆழமான பகுதிகள் நிறைவாக உள்ளன. இங்கு அடக்கம் செய்வதற்கு தேவையான நிலத்தடி நீரின் ஆழம் 2.5m மட்டுமே. இதனை உறுதிப் படுத்துவதுதான் நீர்வளவியலாளர்களின் (Hydrogeologists) கடமையே தவிர வைரஸ் ஐப் பற்றி பேசுவது அவர்களின் தொழில் அல்ல.
இங்கு எழுகின்றன பிரச்சினை என்னவென்றால் ஒரு பக்கம் இங்கு எடுக்கப்பட்டு இருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பாகவும் நமது அடிப்படை உரிமைக்கு எதிராகவும் இருக்கின்றன, மறுபுறத்தில் சரியான தரவுகளையும் ஆதாரங்களையும் உரிய முறையில் உரிய இடங்களில் சமர்ப்பிர்ப்பதற்கோ அல்லது பிழையான விடையங்களை சரியென்று விவாதிப்பவர்களிடம் சரியான தரவுகளையும் ஆதாரங்களையும் முன்வைத்து உண்மைத் தன்மையை நிரூபித்து பேசுவதற்கு உரிய பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்யவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர்களாக, பொறியாளர்களாக, வழக்கறிஞர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் திறமைசாலிகளாக மொழி வளம் உடையவர்களாக தனக்கு வழங்கப்பட்ட பாராளுமன்ற கதிரையின் அர்த்தத்தை புரிந்து நேர்மையாக செயல் படக்கூடியவர்கள் எந்தெத் துறையைச் சேர்ந்தவராகவும் இருக்கமுடியும் ஆனால் அவ்வாறானவர்களை மக்கள் தெரிவு செய்யாததும் ஒரு காரணம் இன்று இந்த நிலை நீடிப்பதற்கு. இதற்கான சிறந்த உதாரணம் நேற்று (10/12/2020) பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அங்கு வந்திருந்த வைத்தியர்கள் Covid-19 virus இறந்த உடல்களில் 36 நாட்கள் உயிர் வாழும் என்று கூறக் கேட்டிருந்தார்கள். இதற்கு எந்த பதில்களோ பதில்கேள்விகழோ எமது தரப்பிலிருந்து அந்த இடத்தில் வரவில்லை ஆனால் அந்த இடத்தில் நமது கல்முனையின் காவலன் இருந்தார், முஸ்லிம் காங்கிரஸ் கோட்டையில் ஓட்டை போட்டவன் என்று பெருமையாக பேசித்திரிந்த முன்னைநாள் ஊடகவியலாளரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் இருந்தார், Covid-19 ஒரு தடுமல் காய்ச்சல் என்று கூறியவரும் அங்கு இருந்தார். இதுதான் இன்றைய நிலை.
இங்கு நான் சில ஆதாரணங்களை மட்டும்தான் கூறி இருக்கின்றேன். இதுபோன்ற பல விடயங்கள் அடக்கம் செய்வதற்கு ஆதாரமாக உள்ளன. நான் கடந்த வாரம் வெளியிட்ட ஆங்கிலக் கட்டுரையில் இன்னும் பல விடயங்களையும் ஆதாரங்களுடன் கூறியிருக்கிறேன், முடியுமானால் அதையும் வாசியுங்கள்.
Can you give the link for the English article written by you last week?
ReplyDelete