Dr சாபியை கைது செய்தமையே தான் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கான முக்கிய காரணம்
நேற்று (10) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியம் அளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்ட போது அவருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் அரசியல் தொடர்பு இருந்தாகவும் மேலும் அவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிலிருந்து பணம் வழங்கப்பட்டதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்திற்கு மேலதிகமாக குருணாகல் மாவட்டத்திலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் தீவிரமாக செயற்பட்டதாகவும், ஏப்ரல் 21 தாக்குதலுக்குப் பின்னர் குருணாகல் மாவட்டத்தில் சுமார் 226 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சாட்சியமளித்தார்.
அப்போது ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம், உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த குருணாகல் கெகுனுகொல்ல கிராமம் சஹ்ரான் ஹாசிமின் மனைவியின் கிராமம் என்று உங்களுக்கு கீழ் இருந்த புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனரா என வினவினர்.
அதற்கு பதிலளித்த கித்சிறி ஜயலத், புலனாய்வுத் துறையினர் அவ்வாறான எந்த தகவலையும் வழங்கவில்லை எனவும், ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னரே சஹ்ரான் குறித்து அறிந்துக் கொண்டதாகவும் கூறினார்.
அப்போது ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் அவரிடம், கெகுனுகொல்ல கிராமத்திற்கு அருகில் குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து தாக்குதலுக்கு முன்னர் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் என்ற வகையில் நீங்கள் அறிந்து வைத்திருந்தீர்களா? என வினவினர்.
இதற்கு பதிலளித்த அவர், ´இல்லை நீதிபதியவர்களே, எந்த வித தேடுதல் குறித்தும் அறிந்திருக்கவில்லை´ என பதிலளித்தார்.
மேலும் தாக்குதலுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் கைதுகள் குறித்தும் அவர் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார்.
´ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் அறுவர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் அறிய முடிந்தது. அவர்களில் இருவரை விரைவாக கைது செய்ய எனது தலைமையிலான அதிகாரிகளுக்கு முடிந்தது. 45 க்கு அதிகமான முக்கியமான புலனாய்வு தகவல்கள் எனக்கு கிடைத்திருந்தன. அதில் விசேடமான ஒருவரை கைது செய்ய என்னாள் முடிந்தது. அவரை கைது செய்த பின்னர் பல தரப்பிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தன, அந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் நான் புத்தளம் பகுதிக்கு மாற்றப்பட்டேன்.´ என கூறினார்.
அப்போது ஆணைக்குழு ´யார் அந்த முக்கியமான நபர் என வினவியது.
´வைத்தியர் சாபி சிஹாப்தீன், குருணாகல் வைத்தியசாலையில் மகப்பேற்று வைத்தியராக இருந்தவர்´ என பதிலளித்தார்.
ஆணைக்குழு அதிகாரிகள் மீண்டும் அவரிடம் ´குறித்த வைத்தியருக்கு ஏதேனும் அரசியல் தொடர்பு இருந்தா? என வினவினர்
ஆம் நீதிபதியவர்களே, அவருக்கும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கும் இடையில் அரசியல் தொடர்பு இருந்ததுடன் மேலும் அவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிலிருந்து பணம் வழங்கப்பட்டதாகவும் புலனாய்வு தகவல்கள் கிடைத்தன. அதன் காரணமாக அவர் விசாரணை நடத்தி சட்டநடவடிக்கை எடுக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியிருந்தேன். ஆனால் சந்தேக நபரை கைது செய்த பின்னர் நான் இடமாற்றம் பெற்றேன் என அவர் சாட்சியம் அளித்தார்.
Post a Comment