என்னைச் சுற்றும் கபன் சீலையின் ஓரத்தைக் கிழித்து, என் வீட்டில் இன்று கட்டியிருக்கிறேன்..!
என்னைச் சுற்றும் கபன் சீலையின் ஓரத்தைக் கிழித்து நான் என் வீட்டில் இன்று கட்டியிருக்கிறேன். புதுவருடம் பிறக்கும் வரைக்கும் இக்கொடி என் வீட்டில் தொங்கும். எனது உடல் கபனால் சுற்றப்படும் உரிமையும், மண்ணில் புதைக்கப்படும் உரிமையும் எனக்கு இருக்கிறது என்று என்னை எரிக்க முற்படுபவர்களுக்குச் ச்சொல்வதற்காக. எனக்கு மச்சுப் பலகைதான் வேண்டும் சாம்பல் சட்டி அல்ல என்று சொல்வதற்காக. நான் படைக்கப்பட்ட மண்ணிலேயே புதைக்கப்படவேண்டும் என்பதற்காக.நீ எரிப்பதற்கு நாங்கள் ஒன்றும் உன் அடுப்பங்கரை விறகுக்கட்டை அல்ல.விதையாய்ப் புதையும் விருட்சம் என்பதற்காக.நாங்கள் மரமாய் வளர்பவர்கள் .மரக்கட்டையாய் எரிபவர்கள் அல்ல என்பதற்காக.எத்தனை கொடுங்கோலர்கள் வாழுமுரிமையை மறுத்திருக்கிறார்கள். கண்ணியமான சாவு மறுக்கப்படுவது இங்குதான்.
நண்பனே, உன் கவலையால் நெஞ்சு கனக்கும் கனதி எனக்குக் கேட்கிறது.
தாயே, உன் கண்களின் ஓரத்தில் கசியும் கண்ணீரும் எனக்குத் தெரிகிறது.
தந்தையே, நீ மண்ணுக்குள் மரணிக்க விரும்பும் பதைபதைப்பும் எனக்குக் கேட்கிறது.
ஏதாவது செய்ய வேண்டும் போல் இருக்கிறது. என்ன செய்வது என்று உனக்குத் தெரியாது.
போராட்டங்கள் ஆரம்பிக்கும் புள்ளி எதிர்க்கும் மனப்பான்மைதான். அந்தப் புள்ளியில்தான் நாம் அனைவரும் இன்று நிற்கிறோம். எதிர்ப்பைத் தெரிவிக்க ஆயுதமும் தேவையில்லை. மேடையும் தேவையில்லை.மோடியை விரட்ட காற்றூதிய கறுத்த பலூன் போதுமாக இருந்தது. சட்டத்தையே மாற்ற ஒரு துருக்கித் தொப்பி போதுமாக இருந்தது.
உன் கபன் சீலையைக் கட்டு.உன் வேலைத் தளத்து வாசலில் கட்டு.வீட்டு முற்றத்தில் கட்டு.பள்ளிவாயல்களில் கட்டு. வாகனங்களில் கட்டு.கணன்றெரியும் தீயை இந்தக் கபன் சீலை அணைக்கட்டும்.இந்த அமைதிப் போராட்டம் கல் நெஞ்சக்காரர்களுக்கு கனதியான ஒரு செய்தியைச் சொல்லட்டும்.எங்கும் வெள்ளை மயமாகட்டும்.
எரிக்கப்பட்டவர்களுக்காகவும், எரிக்கப்படப்போகும் உனக்காகவும், எதிர்ப்பைத் தெரிவிக்கும் உன் உணர்வுக்காகவும் உனது கபன் சீலையை உலகிற்குக் காட்டு.என்னைச் சுற்ற வேண்டியது வெள்ளைத் துணி உன் வெற்று நெருப்பல்ல என்று காட்டு.
ஒவ்வொரு வீட்டிலும் கபன் சீலைப் போராட்டம் தொடங்கட்டும். ஒவ்வொரு ஆத்மாவும் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கட்டும்.நீங்கள் கட்டும் ஒவ்வொரு சீலையும் உங்கள் எதிர்ப்பைக் காட்டும்.உங்கள் கபனும் ஒன்று.எனது கபனும் ஒன்று.வாழும்போதே எரிந்து சாகிறோம். சாகும் போதாவது புதைந்து சாவோம்.உங்கள் கபன் சீலையைக் கொண்டு உங்கள் போராட்டத்தை ஆரம்பியுங்கள்.
Post a Comment