நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தவேண்டும் - தலதா அத்துக்கோரள
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
நீதிமன்ற சுயாதீனத்தன்மையை பாதுகாக்க நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதனை தொடர்ந்து பாதுகாக்கவேண்டும்.
எமது காலத்தில் நீதிமன்றம் சுயாதீனமாக இருந்ததால்தான் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு நாட்டின் ஜனாதிபதியாக முடியுமாக இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் முன்னாள் நீதிஅமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நீதி மற்றும் தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2015 இல் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்கள் எம்மிடம் அபிவிருத்தியை கேட்கவில்லை. மாறாக இல்லாமல் போயிருந்த நீதிமன்ற சுயாதீன நீதிமன்றத்தை ஏற்படுத்துமாறே தெரிவித்தனர்.
ஏனெனில் 2015க்கு முன்னர் நீதிமன்ற தீர்ப்புகள் எவ்வாறு இருந்தன என்பது மக்களுக்கு தெரியும். பிரதம நீதியரசர் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு ஒரு நாளில் அவரை வீட்டுக்கு அனுப்பிய வரலாறு எமக்கு இருக்கின்றது. வரலாற்றில் ஒருபோதும் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றதில்லை.
அதேபோன்று நாட்டின் ஊடக சுதந்திரம் முற்றாக இல்லாமல் பாேயிருந்தது. ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள். அதனால் சிரேஷட ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்றனர். அதேபோன்று ஊடக நிறுவனங்கள் எரியூட்டப்பட்டன. அந்த நிலைமையை மாற்றியமைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம்.
19ஆம் திருத்தம் மேற்கொண்டு 10 சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தோம். அதன் மூலம் அரச திணைக்களங்கள் சுயாதீனமாக இயங்க நடவடிக்கை எடுத்தோம்.
நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க, அரசியலமைப்பு சபையை ஏற்படுத்தி அதன் மூலம் பிரதான நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்தோம்.
அரசியலமைப்பு சபையில் ஆளும், எதிர்க்கட்சி, சிறிய கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் பிரதிநிதிகளை அதில் உறுப்பினர்களாக நியமித்தோம். நீதிமன்ற சுயாதீனத்தை உறுதிப்படுத்தியதால்தான் கோத்தாய ராஜபக்ஷ்வுக்கு இன்று நாட்டின் ஜனாதிபதியாக இருக்க முடிகின்றது.
Post a Comment