சூப்பர் முஸ்லிம் என்ற அமைப்பு குறித்த எச்சரிக்கை - பொருப்பு வாய்ந்தோரே இது உங்களின் கவனத்திற்கு...!!
ஆனால் சூப்பர் முஸ்லிம் என்றதோர் அமைப்பின் தவறான வழிநடாத்தல்கள் குறித்து தொடரான பல உரைகள் மற்றும் கட்டுரைகள் ஊடாக தவ்ஹீத் ஜமாத்தினர் பல்முனை விழிப்பூட்டல் பிரச்சாரங்களை செய்து வருகின்றோம். சமூக வலைத்தளங்களை பயன் படுத்துவோர் இந்நிகழ்ச்சிகளை தாராளமாக கண்டிருப்பீர்கள்.
அதனூடாக எம் சமூகத்தின் உயர் மட்டங்களுக்கும் இச்செய்தியை கொண்டு சென்றுள்ளோம். ஏகத்துவவாதிகள் எதை செய்தாலும் குறையை மட்டும் தேடி விமர்சனப் பார்வையுடன் பார்ப்பதால் சமூகத்தின் நலவிற்காக ஏகத்துவவாதிகள் எத்திவைக்கும் செய்திகள்கூட உரியவர்களது சிந்தனைகளை சென்றடைவதில்லை.
ஸஹ்ரான் செய்தியில்கூட ஸஹ்ரானுக்கு எதிராக பல மேடைப் பிரச்சாரங்களை வெளிப்படையாக முன்னெடுத்தவர்கள் தவ்ஹீத்வாதிகளே. ஸஹ்ரானின் மிலேச்சத்தனமான தாக்குதலுக்குப் பின்னர் துரதிஷ்டவசமாக தவ்ஹீத்வாதிகளின்மீதே குற்றமும் வந்து விழுந்தது. இது திருடனை பிடிக்கச் சென்றவனையே திருடனாகப் பிடித்தமைக்கு ஒப்பான நிலையாகும்.
சிங்களப் பத்திரிகையில் இன்று சூப்பர் முஸ்லிம் பற்றி வெளிப்படையாக வந்துள்ளது. அதனுள் அமையப் பெற்றுள்ள தகவல்களது உண்மைதன்மை பற்றி நாமறியோம். எனினும் சூப்பர் முஸ்லிம் குறித்து ஏகத்துவவாதிகள் எவ்வளவோ எடுத்துப்பேசியும் எழுதியும் எச்சரிக்கை செய்தும் பொருப்புமிக்க யாரும் பொருப்புணர்வோடு கண்டு கொண்டதாக இல்லை.
பொருப்புமிக்கவர்களால் இவ்விடயம் குறித்து விழிப்பூட்டப் பட்டிருந்தால் சிங்களப் பத்திரிகையில் இச்செய்தி இடம் பெறாது தவிர்த்திருக்கலாம். நடந்தது நடந்து விட்டது. நடக்கும்வரை கண்டும் காணாததுபோல் இருந்து நடந்தபின் அறிக்கைவிடும் நிலையை கைவிட்டு; சூப்பர் முஸ்லிம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த சமூகத்தின் பொருப்புவாய்ந்தவர்கள் உடனடியாக முன்வர வேண்டும்.
சொந்தப் பிரச்சினைகளையும், கொள்கை பிரச்சினைகளையும் பழி வாங்குவதற்காக இதுபோன்ற நிலைகளை பயன் படுத்தும் அதிமுட்டால் தனமான அறிவீனத்தை துறந்து சமூகத்தின் நலன் காக்க முன் வரவேண்டும். முஸ்லிம்கள் பற்றிய தவறான கண்தோட்டத்தால் மீளவும் இத்தீவு ஸ்தம்பிதம் அடைவதற்கு முன்னர் இதன் உண்மை தன்மையை ஆய்ந்தறிந்து அரசுக்கும் மக்களுக்கும் தெளிவு படுத்த வேண்டிய தார்மீக பொருப்பு அகில இலங்கை ஜம்இய்யாவுக்கும், முஸ்லிம் அலுவல்கள் திகை்களத்துக்கும் உள்ளதென்பதை சமூகப் பற்றுடன் முன் வைக்கிறேன்.
அத்துடன் உலமாக்கள் தன்னைசூழ என்ன நடக்கிறது என்பதை ஆய்வு செய்து சமூகத்துக்கு தெளிவு கொடுப்போராக தம்மை ஆக்கிக் கொள்ள முன்வர வேண்டும். வெறுமனே கிதாபுகளில் உள்ளவைகளை மட்டுமே குத்பா செய்யாமல் தன் சமூகத்தின் சமகால யதார்த்தம் அறிந்து செயலாற்றுவது மிக அவசியம். நானறிந்தவரை இந்த சூப்பர் முஸ்லிம் தொடர்பாக தவ்ஹீத் ஜமாத் தவிர்ந்த வேறு யாரும் கண்டு கொள்ளவுமில்லை. மக்களுக்கு தெளிவு படுத்தவுமில்லை. இந்நிலை மாற வேண்டும். சரியான பாதைகளை பிரச்சாரம் செய்து வழிநடாத்தும் அதேவேளை தவறான பாதைகளை தெளிவு படுத்தி நேர்வழியில் மக்களை நிலைக்கச் செய்வதும் உலமாக்களின் கடமையாகும். தயவு செய்து இது பிற அமைப்புக்களை குறை கூறும் செய்தியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். யதார்த்தத்தை கூறியுள்ளேன். நீங்களே சுய விசாரனை செய்து பாருங்கள். மனசாட்சி பதில் கூறும்.
இச்சமூகம் பல்முனை வியூகங்களால் சூழப்பட்ட ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகிறது. நாமோ இன்னும் எம்மை மாற்றிக் கொள்ள தயாரற்று வரட்டு வாதங்களுக்குள்ளும் சதிவலைகளுக்குள்ளும் சிக்குண்டு கிடக்கிறோம். இந்நிலை கண்ணாடி அறைக்குள் இருந்து கல்லெறிவதற்கு ஈடானதாகும்.
பொருப்பு வாய்ந்தோரே பல்லாண்டு காலமாக எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் உங்களால் இச்சமூகத்தை ஒரணியில் திரட்ட முடியாமல் போயுள்ளமை உங்களது அறிவு, ஆளுமை, சமயோசித குறைவையே காட்டுகிறது. இனியும் இப்படி இருக்காதீர்கள். சுயநலன்களை மறந்து சமூகத்துக்காக நாட்டுக்காக பொது நலத்தோடு வாழ முன்வாருங்கள்.
குறிப்பு:- முடிந்தளவு சுருக்கமாக எழுதியுள்ளேன். இச்சாமானியனின் கருத்தில் உண்மை இருப்பின் சமூகத்துக்காக ஏற்று மேற்படி பத்திரிகைச் செய்தியை ஆய்ந்தறிந்து உண்மைத் தன்மை என்னவென்பதை நாட்டு மக்களுக்கும் அரசுக்கும் அவசரமாக தெளிவு படுத்துங்கள். ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பதுபோல் தெளிவு படுத்தலின் தாமதம் தெளிவு படுத்தலையே அவசியமற்றதாக்கி விடலாம்.
✋🏻மேலும் இவ்விடயம் ஜனாஸா எரிப்பு குறித்த முன்னெடுப்புகளை மறக்கடிக்காதிருக்கட்டும்.
அல்லாஹ் இச்சமூகத்தை சத்தியத்தில் ஒன்றினைக்கச் செய்து படைத்தவனுக்கு கட்டுப்பட்டு, நாட்டுக்கு விசுவாசமானவர்களாக வாழச் செய்வானாக.
அபூ ஸுமையா.
13-12-2020
Politics plays a game .we will see more groups like this in the future .it is all about politics..take care
ReplyDelete