Header Ads



இலங்கையில் உருவான சுதேச கொரோனா மருந்து, வெற்றியளித்தால் மேற்கத்திய மருந்துக்கு பெரும் சவாலாகும் - வாசுதேவ


(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா தொற்றை அழிக்க தயாரிக்கப்பட்டுள்ள சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும்  சவாலாக அமையும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொரோனா தொற்று தொடர்பாக கேகாலையைச் சேர்ந்த மருத்துவர் தம்மிக பண்டார கண்டுபிடித்த மருந்துக்கு எதிராக தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்

கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள சுதேச மருந்துப் பாணி தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றால் நாம் சோர்வடைய கூடாது. குறித்த மருந்துக்கு ஏதேனும் நம்பகத்தன்மையும் உண்மையான மதிப்பும் இருந்தால், அது நாட்டின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

எஹெலியகொட வல்கம சுதேச மருந்து உற்பத்தி நிலையத்திலும்  மருத்துவர் தம்மிக தயாரித்துள்ள மருந்துக்கு சமனான வகையில் பாணி வகையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.  அதுவும் கொரோனா நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு சாதக பிரதிபலன் கிடைத்துள்ளமை எனக்கு அறியக்கிடைத்துள்ளது. 

எனினும் இந்த மருந்துகளை இரண்டு முறையில் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட வேண்டும் மற்றும் மருந்தின் அறிவியல், பகுப்பாய்வு மற்றும் ரசாயன சோதனை மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

அத்துடன் இந்த மருந்துகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு பிரசாரத்தை அடக்க வேண்டும். இதற்காக, நல்ல நம்பிக்கையுடன் செயற்படும் ஒருவர் முன் வந்து இந்த மருந்து தொடர்பான உண்மைகளை நாட்டிற்கு முன்வைக்க வேண்டும். இதுபோன்ற சுதேச மருந்தை நாம் உற்பத்தி செய்தால், மிகச் சிறிய நாடாகிய நாம் உலகை வெல்ல முடியும் என்பதில் சந்தேகமில்லை.

அத்துடன் இந்த மருந்து வெற்றியடைந்தால்,  மேற்கத்திய மருத்துவம் மற்றும் மருத்துவர்கள் இதற்கு பெரும்  சவாலாக இருக்கும். சர்வதேச அழுத்தங்கள் வரும். இதற்காக ஏகாதிபத்தியவாதிகளின் சதித்திட்ட செல்வாக்கும் வரும். இது போன்ற மருந்துகளால் கொரோனா நோயாளிகளை குணப்படுத்த முடியும் என்றால், தடுப்பூசிகள் போன்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு இது அச்சுறுத்தலாக இருக்கும். அப்படியானால், தடுப்பூசி தயாரிக்கும் நாடுகளால் இந்த மருந்துக்கு ஒரு பெரிய சதித்திட்டம் தீட்டப்பட வாய்ப்பில்லாமல் இல்லை.உலகில் எந்தவொரு போட்டி சூழ்நிலையிலும், உலகில் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் திறன்களை  உறிஞ்சிக்கொள்வார்கள் அல்லது அடக்க முற்படுவார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை இந்த சுதேச மருத்துவத்தில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். சுதேச வைத்தியமும் விஞ்ஞான ரீதியான மருத்துவ முறைமை என அரசு நம்புகின்றது. அதனால்தான் உள்ளூர் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரிகள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் சுதேச மருத்துவம் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

எனவே சமூக ஊடகங்களில் மருத்துவர் தம்மிக்கவின் தகைமைகள் பற்றி பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விடயத்தை பற்றிய அவரது அறிவு ஒரு விடயம், அவர் பெற்ற தகவல்களின் அடிப்படையில் அவர் தொகுத்த மருந்து மற்றொரு விடயம், இரண்டையும் குழப்பிக்கொள்ள  வேண்டிய அவசியமில்லை. மருந்தில் உள்ள நன்மை தீமைகளை பார்ப்பதல்லாமல் மருந்தை தயாரித்தவரின் தகவல்களைப் பார்ப்பது தவறானதாகும் என்றார்

1 comment:

  1. மருந்தை உருவாக்கிய வருக்கும் சவாலாக அமையும்

    ReplyDelete

Powered by Blogger.