Header Ads



பன்முக ஆளுமை கொண்ட இளைஞர், மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார்


தென் மாகாண முன்னாள் ஆளுநர், முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாக்காரின் பேரனும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வருமான ஆதில் லண்டனில் ஸ்கூல்ஒப் ஏகொனமிக் இன் பொலிடிக்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில் சமகாலஅரசியல் பற்றி பட்டப்படிப்பை மேற்கொள்ளவதற்காக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி சென்றார்.

மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்காருக்கு பிரித்தானிய தூதரகம் வழங்கிய ஒரு வருட புலமைப் பரிசிலைப் பெற்றே அவர் உயர் கல்விக்காக அங்கு சென்றார். ஒரு வருட கால கற்கை நெறியை மேற்கொள்வதற்காக சென்ற இந்த இளைஞர் ஒரு மாத காலம் கல்வி கற்றுக் கொண்டிருந்த நிலையில் இவ்வுலகை விட்டு பிரிந்து விட்டார்.2016 ஆம் ஆண்டுஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி அவர் லண்டனில் காலமானார்.

கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் ஆசியா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற அவர் பாடசாலையில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கி பரிசில்களையும் பெற்றுக் கொண்டார். பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் நன்மதிப்பை பெற்றுக் கொண்ட இவர், லண்டன் எல்.எல்.பி பட்டம் பெற்று இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பாடசாலை கல்வியை பூர்த்தி செய்த பின்னர் சமூகசேவையிலும் தனது தந்தையின் அரசியல் பணிகளிலும் ஒத்துழைத்தார்.

இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் சமூக பணிகளுக்கு இளைஞர் ஆதில் பக்கபலமாக நின்று செயல்பட்டார். அனைவரினதும் நன்மதிப்பை சிறுவயது முதல் பெற்றுக் கொண்டார். அத்தோடு முஸ்லிம் நாடுகளில் தூதுவர்களுடன் நெருங்கிய தொடர்பினை வைத்திருந்ததோடு அவர்களினதும் நன்மதிப்பை பெற்றவராக திகழ்ந்தார்.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கு இந்த இளைஞர் உரமூட்டினார். அதற்காக இளைஞர்கள் மத்தியில் பாரிய பிரசாரப் பணியில் ஈடுபட்டார்.

அவர் அந்த இயக்கத்தின் செயல்பாடுகளில் வழங்கிய பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராட்டத்திற்கு என்றும் அவர் உட்சாகமூட்டியதோடு பலஸ்தீன தூதரகத்துடன் மிக நெருங்கிய தொடர்பினை வைத்திருந்தார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் வளர்ச்சியிலும் அதிக பங்களிப்புச் செய்தவர் மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார்.

தேசிய ஐக்கியத்தை, நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப இந்த இளைஞர் துடிதுடிப்புடன் செயல்பட்டார்.

தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் முன்னேற்றத்திற்கு பின்னால் இருந்து பாரிய பங்களிப்பை செய்தார். இந்த நிலையம் நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப மேற்கொள்ளும் பாரிய வேலைத் திட்டங்களுக்கு அவரது தந்தையுடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினார். இளைஞர் ஆதில் பாக்கீர் மாக்கார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தெரிவானார். ஆளும் கட்சி,எதிர்க் கட்சிஅரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருந்த இவர் எல்லாஅரசியல்வாதிகளாளும் மதிக்கப்பட்டார்.

இளம் சட்டத்தரணி மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்காருக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வாய்ப்புக் கிட்டியது. அங்கு ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் மிக்கஉரை இன்றும் எமதுகாதுகளில் கேட்ட வண்ணம் உள்ளது.

அடக்கம் நல்ல பண்புகள்,பிறருக்கு உதவி செய்தல்,கருணை,பெரியோரை மதித்தல், இனிய சுபாவம் ஆகிய மனிதநேய பண்பும் பன்முக ஆளுமையும் கொண்ட மர்ஹூம் ஆதில் சமூக உணர்வுள்ள ஓர் இளைஞர். அவரது இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.

- பீ.எம். முக்தார் -

No comments

Powered by Blogger.