Header Ads



வாழ்வின் அர்த்தங்களை தேடியபோது, இஸ்லாம் நோக்கி அழைத்து செல்லப்பட்டேன் - டாக்டர். ஜாக்கி இங்


டாக்டர். ஜாக்கி இங் (Jackie Yi-Ru Ying), இன்றைய அறிவியல் உலகின் தலைச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக போற்றப்படுபவர். சிங்கப்பூரை சேர்ந்த சீனரான இவர், தன்னுடைய 34-ஆவது வயதில் இஸ்லாமை தழுவியவர். 35 வயதில் அமெரிக்க MIT பல்கலைக்கழகத்தில் பணியில் அமர்ந்தபோது, இக்கல்வி நிறுவனத்தின் மிக இளம் வயது பேராசிரியர் என்ற பெருமையை பெற்றார். 

சிங்கப்பூர் அரசின் கீழ் இயங்கும் ஆய்வு நிறுவனமான IBN-ன் முதல் நிர்வாக இயக்குனர் என்ற பெருமையையும் பெற்றவர் டாக்டர் இங். உயிர் பொறியியல் (Bio-Engineering) மற்றும் மிக நுண்ணிய தொழில்நுட்பத்தில் (Nano technology) சிறப்பு நிபுணத்துவம் பெற்றுள்ள சகோதரி இங், தன் கண்டுபிடிப்புகளுக்காக 150-திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளை பெற்றவர். இதில் 50-த்திற்கும் மேற்பட்டவை மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. 

இவருடைய கண்டுபிடிப்புகள் பிரம்மிப்பூட்டுபவை. மிக மலிவான விலையில் உமிழ்நீர் மூலம் டெங்கு நோய் தொற்றை கண்டுபிடிக்கும் முறைகள், இன்சுலின் ஊசி சிரமம் இல்லாமல் நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வழிமுறைகள், மின்கலம் (Battery) திறனை நீண்ட காலத்திற்கு அதிகரிக்கும் யுக்திகள் என இவருடைய அறிவியல் பங்களிப்புகளின் பட்டியல் நீள்கிறது. தன்னுடைய செயல்பாட்டிற்காக பல உயரிய விருதுகளை பெற்றுள்ள டாக்டர் இங், நீண்ட கால ஆய்விற்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றவர்.   

சகோதரி இங் கூறுகிறார், "நம் சிறு வயதில் இருந்தே வாழ்வின் அர்த்தங்கள் குறித்து நாம் பேசியிருப்போம், தேடியிருப்போம். அப்படியான தேடலே என்னை இஸ்லாம் நோக்கி அழைத்து சென்றது. முதல் முறை குர்ஆனை படித்தபோதே, இது மிக ஸ்பெஷலான நூல் என்பதை புரிந்துக்கொண்டேன். இஸ்லாம் மிக எளிமையான மார்க்கமாகும். இதனை புரிந்துக்கொண்டு அதன்படி செயல்படுவதில் எனக்கு கடினம் இருந்ததில்லை.  

இஸ்லாம் கல்வியை தேட சொல்கிறது, காரணம், கல்வி சமுதாயத்திற்கு பயனளிக்கக்கூடியது,  மேலும் இறைவனின் இருப்பை உணர்ந்துக்கொள்ளவும் கல்வி உதவுகிறது. உதாரணத்திற்கு, நாங்கள் பயோ-இன்ஜினியரிங் துறையில் பணியாற்றுகிறோம். உயிரியலின் சிக்கலான தன்மைகளை அறிந்துக்கொள்ள இத்துறை உதவுகிறது. சில நேரங்களில், உயிரினங்களின் சிக்கலான உடல்கட்டமைப்பை எங்களால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதே நேரம் இத்தகைய கட்டமைப்பை வியந்து போற்றுகிறோம். இவையெல்லாம் தற்செயலாக உருவாக வாய்ப்பிருக்கிறதா? இறைவனின் இருப்பை இவையெல்லாம் உறுதி செய்கின்றன"

பெற்றோர்களின் செயல்பாடு எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு, பிள்ளைகளின் அறிவுத்தேடலை ஊக்கப்படுத்துவது முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும் என்கிறார் டாக்டர் ஜாக்கி இங். 


1 comment:

  1. சகோதரி டாக்டர் ஜாக்கி இங் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக
    சகோதரி டாக்டர் ஜாக்கி இங் கூறும் " இஸ்லாம் மிக எளிமையான எளிமையான மார்க்கமாகும், இஸ்லாம் கல்வியை தேடச்சொல்கிறது" அற்புதமாக சொல்கிறார் ஆனால் பரம்பரை முஸ்லிம்கள் இஸ்லாத்தை பால்படுத்தும் வேலையை மிக கட்சிதமாக செய்கிறார்கள் இது தான் மிக கசப்பான உண்மை இலங்கையில் அ.இ.ஜ.உ மற்றும் பல உலமாக்கள்,சில இயக்கங்களும்,அமைப்புகளும் மிக மிக கட்சிதமாக செய்கிறார்கள் இது தான் மிகவும் கசப்பான உண்மை

    ReplyDelete

Powered by Blogger.