Header Ads



கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுவிற்சர்லாந்து (முழு விபரம்)


கொரோனா காரணமாக சுவிற்சர்லாந்து அரசு பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. 

26 மாநிலங்களில் ஒவ்வொரு சட்டமும் நோய்தடுப்பு நடவடிக்கையும் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஆகவே குறைந்தது 22. 01. 2021 வரைக்குமாவது சீரான பொது விதிகளை சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்த நடுவனரசு முனைப்புக்காட்டிவந்திருந்தது.

11. 12. 2020 நடுவனரசின் கணக்கெடுப்பின்படி 5136 மக்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்கள். 106 நோயாளர்கள் (கோவிட் -19)தொற்றுக்கு ஆளாகி இந்நாளில் இறந்துள்ளனர்.

11. 12. 2020 வெள்ளிக்கிழமை எதிர்பார்த்தபடி நடுவனரசு பேர்ன் மாநிலத்தில் 14.00 மணி முதல் ஒன்றுகூடி இவ்வறிவித்தல்களை வெளியிட்டுள்ளது.

இரவு 19.00 மணிமுதல் காலை 06.00 மணிவரை உணவகங்கள், கடைகள், அங்காடிகள் (Migros மீக்கிறோ, Coop கோப் உட்பட) மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள், அருங்காட்சியகங்கள், நூல் நிலையங்கள் மூடப்படவேண்டும்.

ஞாயிறு அன்று அனைத்துக் கடைகளும் பூட்டப்படும். தங்குவிடுதியின் உணவகம் மற்றும் எரிபொருள் நிலையம் 23.00 மணிவரை திறந்திருக்கலாம். ஆனால் எரிபொருள் நிலையத்திலும் ஞாயிறுகளில் எரிபொருள் அல்லாத பிற பொருட்கள் விற்கலாகாது.

நடன விடுதிகள் மூடப்படவேண்டும்.

ஞாயிறு மற்றும் பொதுப்பண்டிகை நாட்களில் உணவகங்கள் 19.00 மணவரை திறந்திருக்கலாம். 24.12.20 மற்றும் 31.12.20 ஆகிய நாட்களக்கு 01.00 மணிவரை அனுமதி அளிக்கப்படுகின்றது.

தனியார் இடங்களில் இரு வீடுகளைச் சேர்ந்தவர்களாயின் ஆகக்கூடியது 10 ஆட்கள் மட்டுமே ஒன்றுகூடலாம். பண்டிகைகாலத்தில் 24.12 முதல் 26.12 வரையும் மற்றும் 31. 12. அன்றும் விலக்கு அளிக்கப்படும்.

இம் முடக்கத்தில் இருந்து சமய விழாக்களுக்கும் பாராளுமன்ற பொதுக்கூட்டங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துப் பொது மற்றும் தனியார் விழாக்கள் தடைசெய்யப்படுகின்றது.

பாடசாலையில் பண்பாட்டு நிகழ்வுகள் முழுமையாகத் தடைசெய்யப்படுகின்றது. பார்வையாளர்களுடன் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளும் தடைசெய்யப்படுகின்றது.

இத்தடைகள் யாவும் 22. 01. 2021 வெள்ளிக்கிழமை வரை செல்லுபடியாகும்.

பனிசறுக்கும் திடல்கள், மருந்தகங்கள், சமூகநிலையங்கள், எரிபொருள்நிரப்பு நிலையம், பொதுவெளியில் திறந்த சந்தை என்பனவிற்கு பொது முடக்கத்தில் விலக்கு அளிக்கப்படுகின்றது.

விரும்தோம்பல் துறையில் உணவகங்களுக்கு வழங்கப்படும் தடையில் இருந்து தங்கு விடுதிகளுக்கும் அதனுடன் கூடிய உணவகங்களுக்கும் 23.00 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்படுகின்றது.

உயர்கல்வி நிலையங்களில் இணையவழிக்கல்வி நடைமுறைக்கு வருகின்றது.

சமய நிகழ்வுகளில் ஆகக்கூடியது 50 மக்கள் வரை பங்கெடுத்துக்கொள்ளலாம் என நடுவன் அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதும் இதில் மாநில அரசுகள் வரையறைகளை அறிவிக்கலாம்.

எடுத்துக்காட்டாக பேர்ன் மாநிலத்தில் 15 மக்கள் வரைமட்டுமே சமய நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு கோவிலும் தமக்குரிய காப்பமைவினை வரைந்து வைத்திருக்க வேண்டும். அதில் தற்போதைய நடைமுறைகள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனிவகை முடக்கம்

12. 12. 2020 சனிக்கிழமை தொடக்கம் 19.00 மணிமுதல் உணவகங்கள் மூடவேண்டும். பல மாநிலங்கள் 21.00 மணியை முன்மொழிந்தபோதும் நடுவனரசு 19.00 மணி வரை மட்டும் திறந்திருக்காலம் என உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது நடுவனரசின் ஆணையாக பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சுவிஸ் முழுவதும் உணவகங்கள் 12. 12. 2020 சனிக்கிழமை முதல் 22. 01. 2021 வெள்ளிக்கிழமை வரை 19.00 மணிக்குமேல் திறந்திருக்கலாகாது.

விரைவுணவங்கள் (ரேக்கவே) மட்டும் 23.00 மணிவரை திறந்திருக்கலாம். இங்கும் மாநிலங்கள் தமது தனிச் சட்டத்தை அறிவிக்கலாம். எடுத்துக்காட்டாக பேர்ன் மாநிலத்தில் 21.00 மணியுடன் விரைவு உணவகங்களும் மூடப்படவேண்டும்.

சுகாதார அமைச்சர் அலான் பெர்சே நடுவனரசு அறிவித்திருப்பது உச்சவரம்பு நடவடிக்கைகள் ஆகும். மாநில அரசுகள் விரும்பின் தமது தொற்று விகிதத்திற்கு ஏற்ப நடவடிக்கையினை மேலும் இறுக்கலாம் என அறிவித்தார்.

எடுத்துக்காட்டாக கிறவ்புந்தன் மாநிலம் உணவகங்களுக்கும் முழுக் கடையடைப்பினை அறிவித்துள்ளது.

இந்நடவடிக்கை உரிய நற்பலனை அளிக்காவிடின் முழுமையான முடக்கத்தை சுவிற்சர்லாந்து அரசு அறவிப்பது தவிர்க்க முடியாது போகும் எனவும் சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

உணவகம் திறக்கும் நேரத்திற்கு விலக்கு

தொற்றுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஊர்களுக்கு இந்நேரக்கட்டுப்பாடுளில் இருந்து மாநில அரசு விலக்குகளை அளிக்க அதிகாரம் உண்டு.

24 மற்றும் 31 டிசம்பர் நாட்களுக்கு மட்டும் முடக்கம் தளர்த்தப்பட்டு மறுநாள் 01.01.2021 அதிகாலை 01.00 மணிமுதல் முடக்கம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

பொது இடங்களில் ஆகக்கூடியது 15 ஆட்கள்

பொது இடங்களில் இதுவரை இருந்ததுபோல் ஆகக்கூடியது 15 ஆட்டகள் ஒன்றுகூடலாம். ஆகக்கூடியது 10 ஆட்கள் கூடலாம்.

முதலில் ஐவர் மட்டும் தனியார் இடங்களில் ஒன்றுகூடலாம் எனும் தனது இறுக்கமான விதியில் இருந்து நடுவனரசு சற்றுத் தளர்த்தி 10 உறுப்பினர்கள் வரை தனியிடங்களில் ஒன்றுகூட தனது இசைவினை அளித்துள்ளது.

இதன்படி தனிப்பட்ட இல்ல விழாக்களில் ஆகக்கூடியது 10 உறுப்பினர்கள் ஒன்றுகூடலாம். ஆனால் இரு குடும்பங்களுக்கு மேலாகா ஒன்றுகூட வேண்டாம் எனும் கோரிக்கையினையும் நடுவனரசு முன்வைத்துள்ளது.

தனியார் மற்றும் பொது விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை

இதன்பொருள் சனிக்கிழமை முதல் அனைத்துப் பொது நிகழ்வுகளும் இடைநிறுத்தப்படும்.

சமய விழாக்களுக்கும், குடும்பவட்டத்தில் இறுதிச்சடங்கிற்கும், அரசியல் ஒன்றுகூடலிற்கும், பாராளுமன்ற ஒன்றுகூடல்களுக்கு இம் முடக்கத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2.5 பில்லியன் ஒதுக்கீடு

முதலில் இடப்பட்ட 1.5 பில்லியன் செலவுத்திட்டத்தை மேலும் அதிகரித்து 2.5 பில்லியனாக சுவிஸ் அரசு இன்று அறிவித்துள்ளது. இத்தொகையைக் கொண்டு இழப்பீடுகளும் கடினநிலை உதவிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் சந்திப்பின் நிறைவில் சுவிஸ் அதிபரும் சுகாதார அமைச்சரும் மக்களிடம் அரசின் நடவடிக்கையினை முழுமையாக ஒழுகவேண்டினர். மக்கள் செய்யவேண்டியது ஒன்றுதான் மாலைப் பொழுதுகளில வீடுகளில் இருங்கள்.

இது கடினம்தான், ஆனாலும் பொறுமைகாத்திருங்கள். மகுடநுண்ணுயிரின் இயலறு தோற்றாக தடுப்பூசி மட்டுமே அமையும் என தமது நம்பிக்கையினை நடுவனரசின் அமைச்சர்கள் முன்வைத்தனர்.

இதைவிட மேலும் முடக்கம் தேவையா என்பதை தீர்மானிப்பது நாம் அல்ல. நோயின் தொற்றுவிகிதமும், நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்கும் முறையும் ஆகும் என்றார் சுகாதார அமைச்சர்.

விருந்தோம்பல் துறை 600 முதல் 800 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை இழக்கலாம் எனக் கணிப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். நத்தார் காலம் விருந்தோம்பல் துறைக்கும் மாலைநேர வியாபாரத்திற்கும் நடுவமாகும்.

இதன் இழப்பு பெரிது. இதனை நாம் அறிவோம் என்றார். மாநில அரசுகள் இந்நடவடிக்கையால் பாதிப்படையும் நிறுவனங்களுக்கு உரிய உதவிகளைக் விரைந்து கிடைக்க செய்யும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பால் ஏற்படும் சுவிஸ் அரசின் கடன் சுமை 25 முதல் 30 பில்லியன் சுவிஸ்பிராங் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் இக்கடனை மீளளித்து சுவிசின் வரவுசெலவுத்திட்டம் வழமைக்கு திரும்ப 2025 வரை ஆகலாம் என ஊகம் தெரிவித்தார். ஆனாலும் இன்றுவரை பல விடயங்கள் இன்னும் பதிலறியப்படாது உள்ளது ஆகவே அறுதியாக இப்போது எதனையும் கூறமுடியது என்றார்.

பரிசோதனை

இன்றைய காலத்தில் நாளொன்றிற்கு 30,000 பரிசோதனைகள் சுவிஸ் முழுவதும் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் பேரிடர் முகாமைத்துவ அதிகாரி பத்திறிக் மத்திஸ் தெரிவித்தார்.

தொகுப்பு சிவமகிழி

No comments

Powered by Blogger.