Header Ads



பயங்கரவாதி சஹ்ரானின் பயிற்சிமுகாம் பற்றி கூறியவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் வழங்கிய சாட்சியம்


2018 மே மாதத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பயிற்சி முகாம் குறித்து தகவல் வழங்கிய ஒருவரை நுவரெலிய பொலிஸ் அதிகாரிகள் மௌனமாக்க முயன்றதாக சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் இந்த சாட்சியம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியாவைச் சேர்ந்த டி.டி.இலிசிங்க என்பவரே இதனை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் பல அமைப்புக்களைச் சேர்ந்த புலனாய்வாளர்கள் தம்மை சந்தித்து, சஹ்ரானின் பயிற்சி முகாம் பற்றி எதையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயிற்சி முகாமில் சஹ்ரான் மற்றும் தேசிய தௌஹீத் அமைப்பின் வழிகாட்டியான நௌபர் மௌலவி ஆகியோர் முகாமில் பங்கேற்றதாக சாட்சி கூறியுள்ளார்.

2018 மே 05 ஆம் திகதி அன்று நான்கு வெள்ளை வான்களில் நுவரெலியவின் தக்ஷிலா ஹாலிடே விடுதிக்கு குழு ஒன்று வந்ததாகவும், அந்தக் குழு ஒருபோதும் அந்த விடுதியின் வளாகத்தை விட்டு வெளியேறவில்லை என்றும் சாட்சி கூறியுள்ளார்.

தக்ஷிலா ஹொலிடே இன் தமது வீட்டிற்கு அருகில் இருந்தது, மற்ற சுற்றுலாப் பயணிகளைப் போலல்லாமல் வந்திருந்தவர்கள் ஒருபோதும் விடுதியை விட்டு வெளியேறவில்லை, மேலும் அவர்கள் இரவில் மின்சார விளக்குகளை அணைத்துவிட்டதாகவும் சாட்சி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விடுதியின் உரிமையாளர்களிடம் தாம் வினவியபோது, வந்திருப்பவர்களுடன் தமிழில் பேச முடியும் என்பதால் தம்மை தேடிப்பார்க்குமாறு கூறியதாக சாட்சி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து தாம் அந்த விடுதிக்கு செல்லும்போது ஒரு உரையாடலைக் கேட்டதாக சாட்சி தெரிவித்தார்.

இந்த விடுதியில் பணத்தையும் ஆயுதங்களையும் வைத்திருப்பது பாதுகாப்பானது அல்ல, எனவே அவற்றை மீண்டும் காத்தான்குடிக்கு மாற்ற வேண்டும்.

அதற்கு பதிலளித்த அப்துல்லா என்பவர் ஆயுதங்களை கொண்டு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று கூறியதாக சாட்சியான இலசிங்க ஆணைகுழுவிடம் தெரிவித்தார்.

இதன் பின்னர் 119 என்ற தொலைபேசி இயக்கத்துக்கு அழைத்தபோதும் நுவரெலிய பொலிஸ் நிலையத்தில் எவரையும் அணுக முடியவில்லை என்றும் சாட்சி கூறினார்.

பின்னர் அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தரவின் தொடர்பு எண்ணை பெற்று அவரை தொடர்பு கொண்டதாக தமக்கு நினைவிருக்கிறது என சாட்சி தெரிவித்தார்.

அவரின் அறிவுறுத்தலின்படி மஹிந்த திசாநாயக்க என்ற பொலிஸ் அதிகாரியை தொடர்பு கொண்டபோது, ​​நுவரெலிய பொலிஸார் விரைவில் அந்த இடத்திற்கு வருவார்கள் என்று கூறினார்.

இருப்பினும், அன்று மாலை 4.30 மணியளவில் பொலிஸின் சிற்றூந்து ஒன்று வந்தது, எனினும் அவர்களால் எவரையும் கைது செய்ய முடியவில்லை, என்று சாட்சி கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு எஸ்.ஐ. இந்திரஜித் மற்றும் நுவரெலியா பொலிஸை சேர்ந்த இரண்டு அதிகாரிகள் தமது வீட்டிற்கு வந்து சந்தேகநபர்களைக் கைது செய்யத் தவறியதை ஏற்றுக்கொண்டதாக சாட்சி மேலும் கூறினார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக மற்றவர்களுக்கு எதையும் வெளிப்படுத்த வேண்டாம் என்றும் அவர்கள் தம்மிடம் அறிவுறுத்தியதாக சாட்சி தெரிவித்தார்.

இதனை மீறி விடயங்களை வெளியிட்டால் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தம்மை கொலை செய்து விடும் என நுவரெலிய பொலிஸார் அச்சறுத்தியதாக சாட்சி தெரிவித்தார்.

ஆனால் ஐ.எஸ்.ஐ.எஸ் நிச்சயமாக தம்மை கொலை செய்யாது பொலிஸ் அதனை செய்யும் என தாம் கூறியதாக சாட்சியான இளசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.