Header Ads



ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை - 8 மாதங்களாக அவர் மனைவி, பிள்ளையைக் கூட பார்க்கவில்லை - சுமந்திரன்


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலை நாட்டப்படுவதில் நீண்டகாலமாக இழுத்தடிப்புகளே காணப்பட்டு வருகின்றன. இலங்கையின் நீதித்துறை சுயாதீனம் இல்லை என்பது ஆட்சி செய்தவர்களும் ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனத்தில் இருந்தே வெளியாகிவிட்டது.

அதனால் தான் இந்த நாட்டில் இடம்பெற்ற மோசமான குற்றங்கள், சர்வதேச சட்டங்களை மீறும் குற்றங்கள் பல நடந்துள்ளன. இதன் காரணமாகவே சர்வதேச நீதிமன்ற தலையீட்டை கொண்ட சர்வதேச விசாரணைகளை கேட்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் இன்று (09) சபையில் தெரிவித்தார்.

அரசாங்கங்கள் உருவாகும், வீழும். ஆனால் நீதிமன்ற சுயாதீனம் பலமானதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நாட்டில் நீதிமன்ற சுயாதீனம் உறுதியானதாக இல்லை என்பது சபையில் பேசியவர்களின் கருத்தில் தெரிகிறது. இது ஆரோக்கியமான ஒன்றல்ல.

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்தும் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்பட்டும் வருகிறது. இது குடியுரிமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இன்று வரையில் நீட்டிக்கப்படுகின்றது.

அண்மைக்கால நடவடிக்கைகளை கருத்தில் கொண்டாலும் கூட சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் எழுகின்ற நேரங்களில் எல்லாம் நீதி அமைச்சர் டுவிட்டர் மூலமாக கருத்துக்களை கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அவரால் அதனை மாத்திரமே செய்ய முடியும். முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகள் குறித்த பிரச்சினை எழுந்த நேரமும் அதனையே அவர் செய்தார்.

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்தும் இன்னமும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இதற்கு அண்மைக்கால உதாரணமாக ஒன்றை கூறுகின்றேன், சட்டதரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு நியாயம் கிடைக்கவில்லை, அவர் குற்றத்துடன் தொடர்புபட்டவர் என்ற சாட்சியம் இருந்தால் அவருக்கு எதிரான நேரடியான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்க முடியும். ஆனால் ஏன் நீண்ட காலமாக அவரை தடுத்து வைத்துள்ளீர்கள். அவர் ஒரு பாடசாலையையுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றத்தை முன்வைத்தீர்கள், ஆனால் அந்த பாடசாலை இன்னமும் இயங்கிக் கொண்டுள்ளது, அதனுடன் தொடர்புபட்ட எவரும் கைது செய்யப்படவில்லை.

8 மாதங்களாக அவருக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்படவில்லை, அவர் தனது மனைவி பிள்ளையைக் கூட பார்க்கவில்லை. அதையும் தாண்டி அவர் ஒரு சட்டத்தரணி, அவரை எவ்வாறு இவ்வளவு மோசமாக நடத்த முடியும் என்றார்.

1 comment:

  1. யாரூ நீதி அமைச்சர்?
    அவரு என்ன ராஜபக்‌ஷாகளுக்கு சமையல் வேலையா பண்ணுரார்?

    ReplyDelete

Powered by Blogger.