நாடு திரும்புவோர் வீடுகளில் மேலும் 14 நாள் இருக்க வேண்டுமா..?
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட செயன்முறையை 28 முதல் 14 நாட்களாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை இன்று -11- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
புதிய முறையின் கீழ், வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு இலங்கையர் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அதன் முடிவில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்படாதவிடத்து, முன்பு நடைமுறையில் இருந்தவாறு அவர் மேலும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என இராணுவத் தளபதி கூறினார்.
இதேநேரம், எதிர்வரும் வாரங்களில் சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்க பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போது வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் அனைவரும் விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் 14 நாட்கள் தமது வீடுகளிலும் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment