Header Ads



பாரிய நெருக்கடியில் முஸ்லிம் ஊடகங்கள் - அமீன் வேதனை


நவமணி எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் நவமணியின் இன்றைய நிலை, நவமணியின் எதிர்காலத் திட்டங்கள் என நாம் எழுப்பிய கேள்விகளுக்கு நவமணி  பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம் அமீன் அவர்கள் பதில் அளிக்கும் போது…

கேள்வி: “நவமணி” பத்திரிகை எவ்வாறு உருவானது?

பதில்: இற்றைக்கு 25 வருடங்களுக்கு முன்பு இலங்கையில் யுத்தம் மும்முரமாக இருக்கும் போது முஸ்லிம் சமூகத்தின் கருத்துக்களை வெளி உலகிற்கு முன்வைக்கும் நோக்கிலே நவமணிப் பத்திரிகை உருவாக்கப்பட்டது. எம்.ரீ.எம்.றிஸ்வி, தாஹா முஸம்மில், எம்.பி.எம். அஸ்ஹர் ஆகிய மூவரும் இணைந்து ஒரு வாரப் பத்திரிகையாக நவமணியை 1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி ஆரம்பித்தனர்.

வாரப்பத்திரிகையாக நீண்ட காலம்  தொடர்ந்து வெளிவந்த நவமணி இலங்கை முஸ்லிம்களுடைய குரலாக, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுடைய குரலாக வெளிவந்தது.

முஸ்லிம்களுடைய விடயங்கள் மட்டுமல்லாமல் ஏனைய சமூகங்களுடைய குரலாகவும், மூன்று சமூகங்களையும் இணைக்கும் பாலமாகவும் தனது ஆரம்ப காலம் முதல் அது செயற்பட்டிருக்கின்றது. சில காலம் தொடரும்போது உங்களுக்கு தெரியும் பத்திரிகைகளைக் கொண்டு செல்வதற்கு விற்பனை மட்டும் போதுமானதாக அமையாது. அதற்கு விளம்பரம் இன்றியமையாதது. விளம்பரத்தைப் பெறுவதில் எதிர்நோக்கிய சவால்கள் காரணமாக நான் மேற்குறிப்பிட்ட மூவரினாலும் மட்டும் இப் பத்திரிகையைத் தொடர முடியவில்லை. அவ்வேளையிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்ற வகையில் நாங்கள் தலையிட்டு இந்தப் பத்திரிகை மூடப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கோடு சில முன்னேற்பாடுகளைச் செய்தோம்.

முஸ்லிம் தனவந்தர்கள், புத்திஜீவிகளைச் சந்தித்து பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தி, இந்தப் பத்திரிகையை எப்படியாவது தொடராக வெளியிட வேண்டும் என்பதை எடுத்துக்கூறினோம். அப்போது அதற்கு சமூகத்திலிருந்து  நல்ல பதில் கிடைத்தது. ஒருநாள் புனித நோன்பு அன்று கொழும்பிலே இருக்கின்ற பிரபல வர்த்தகருடைய

இல்லத்தில் நோன்பு திறப்பதோடு சேர்த்து ஒரு சிறு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, முஸ்லிம் தனவந்தர்கள், உலமாக்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். அங்கே நவமணியை தினசரியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்தப் பத்திரிகைக்கு பிரபல வர்த்தகர் ஒருவர் தினச்செய்தி என்று கூட பெயரையும் முன்வைத்தார்.

பலர் இந்தப் பத்திரிகைக்கு முதலீடு செய்வதற்கு முன்வந்தனர்.

25 பேர் தலா 10 லட்சம் வீதம் முதலீடு செய்வதற்கு முன் வந்தனர்.

துரதிஷ்டவசமாக அதன்பின்பு நாடு எதிர்நோக்கிய ஒரு நெருக்கடியான சூழ்நிலையாலும் அந்தக் காலகட்டத்தில் யாரோ ஒரு சக்தியால் முஸ்லிம் வர்த்தகர் கடத்தப்பட்டதாலும் சில பத்திரிகை நிறுவனங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டதாலும் எங்களோடு வந்து இணைந்து முதலீடு செய்ய வந்த பலரும் தாமாகவே விலகிக் கொண்டனர். அது எங்களுடைய துரதிஷ்டம்.

அந்த துரதிஷ்டத்திற்கு மத்தியில் நாங்கள் என்ன செய்வது?  ஒரு சிலர் பணத்தின் ஒரு பகுதியை தந்திருந்தனர். அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் தங்களுடைய பங்கைத் தர தயாராக இருந்தனர்.

நாங்கள்தான் சொல்லியிருந்தோம். நீங்கள் பணத்தை ஒரே நேரத்தில் தர வேண்டாம். எங்களுடைய வங்கியில் போட்டு வைப்பதை விட, அதை உங்களுடைய வியாபாரத்துக்கு பயன்படுத்துங்கள். எங்களுக்கு 1/4 பங்கை தந்தால் போதுமானது என்று. அப்படித் தந்த பலர் இருக்கின்றனர்.

சிலர் முழுத்தொகையையும் தந்திருந்தனர். அந்தத் தொகையை வைத்துக்கொண்டு நாங்கள் இந்தப் பத்திரிகையை முன்னெடுத்துச் சென்றோம். நாங்கள் ஆரம்பத்தில் திட்டமிட்டபடி ஒரு சிறப்பான கட்டமைப்போடும் ஒரு வர்த்தக முகாமைத்துவத்தோடும் செய்வதிலே எங்களுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன. ஆளணிகளைத் திரட்டுவதற்கு எங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட்டன. உதாரணமாக ஒரு மார்க்கெட்டிங் மெனேஜரை தெரிவுசெய்ய பலரை நாங்கள் அணுகினோம். நேர்முகப் பரீட்சைகள் வைத்தோம். எல்லோரும் வாகனத்துடன் லட்சக்கணக்கில் சம்பளம் கேட்கிறனர். நவமணியின் வருமானம் அப்படியானவர்களைச் சேர்த்துக்கொள்ள இடமளிக்கவில்லை.

இப்படியான நிலை காரணமாக நவமணி    தொடர்ந்து சிக்கலோடுதான் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் 24 வருடங்களை இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் கடத்தி இருக்கின்றோம். பல சவால்களை எதிர்நோக்கி இருக்கின்றோம். சமூகத்தின் குரலாக இருக்கும் போது ஒரு முறை யாரோ ஒரு குழு நவமணி அலுவலகத்துக்கு தீ வைத்து விட்டுச் சென்று விட்டார்கள். அதன் பின்னும் நாங்கள் எழுந்து நின்றோம். இப்படியான ஒரு பின்னணியில்தான் நவமணி தொடர்ந்து வந்திருக்கிறது. மர்ஹூம் அஸ்வருடைய மறைவுக்குப் பின் தினகரனில் முகாமைத்துவ ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற நான்

இப்பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றேன். அதிலிருந்து அதாவது 2008 இலிருந்து தொடராக நவமணியில் பணிபுரிந்து வருகிறேன்.  பல சவால்களையும் நாங்கள் எதிர்நோக்கி இருக்கின்றோம்.

கேள்வி: தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் யாவை?

பதில்:  நவமணியைத் தொடராகக் கொண்டு செல்வதற்கு எங்களிடம் அச்சகம் இல்லை. நாங்கள் பிற அச்சகங்களிலே தங்கி இருக்கின்றோம். இந்த முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில்  இது ஒரு பாரிய பின்னடைவு. எங்களுக்கென்று ஒரு பத்திரிகை அடிப்பதற்குக் கூட ஓர் அச்சகமில்லை. நாங்கள் வேறு யாரோ ஒருவரில் தங்கி இருக்கின்றோம். லேக் ஹவுஸ் நிறுவனத்திலே நாங்கள் தொடராக பத்திரிகையை அச்சடித்துக் கொண்டிருந்த வேளை, ஒரு சமயம் அளுத்கமை அனர்த்தம் சம்பந்தமாக பத்திரிகையில் வெளியிடுவதைப் பார்த்து இரவோடு இரவாக அந்தப் பதிப்பை நிறுத்தினர். இந்த நிலமை அன்று நமக்கென்று ஓர் அச்சகம் இல்லாததன் விளைவாக உருவானது.

கேள்வி: முஸ்லிம் சமூகத்திடமிருந்து, ‘நவமணி’ என்ன பங்களிப்பை தற்போது எதிர்பார்க்கின்றது?

பதில்: இப்பத்திரிகையைத் தொடர்வதற்கு போதிய விளம்பரங்கள் கிடைக்காமை. குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்பு வர்த்தக சமூகம் எதிர்நோக்கி இருக்கின்ற சவால்கள் அதிலும் விசேடமாக கொவிட்-19இன் பின்னர் எதிர்நோக்கி இருக்கின்ற சவால்கள் காரணமாக எங்களுக்கு விளம்பரங்களை பெற முடியாமல் இருக்கின்றது. அரசாங்கம் கொவிட்-19 க்குப் பிறகு தனியார் ஊடகங்களுக்கு வழங்குகின்ற விளம்பரங்களை நிறுத்தி இருக்கின்றன. அதற்கு முன்பு எங்களுக்கு  தொடராக சில அரச நிறுவனங்களிடமிருந்து விளம்பரங்கள் கிடைத்தன. அந்த விளம்பரங்களை வைத்துக் கொண்டுதான் எங்களுக்குத் தொடராக செலவு அதிகரிக்க அதிகரிக்க  சமாளித்துக் கொண்டு சென்றோம். இந்த பத்திரிகையின் அச்சு செலவு மட்டும் 40 ரூபாவுக்கு மேல் செலவிடப்படுகின்றது. அதனை நாங்கள் 30 ரூபாவிற்கு விற்பனை செய்கிறோம். முகவர்களுக்கு நாங்கள் ஆறு ரூபாய் கமிஷன் வழங்குகின்றோம். இதுவே எங்களுக்கு நஷ்டம். விளம்பரம் கிடைத்தால் மட்டும்தான் இந்தப் பத்திரிகையை எங்களுக்குத் தொடரமுடியும். இதுதான் இப்போது எங்களுக்கு இருக்கின்ற பெரிய பிரச்சினை. போதிய அளவில் ஆளணியினரைச் சேர்த்துக் கொள்வதற்கும் எங்களிடம் நிதி வசதி இல்லை. போதியளவு ஆளணியினரைச் செயற்படுத்தி அவர்களுக்கு ஊதியம் வழங்கினால் மட்டும்தான் அவர்களிடமிருந்து ஒரு சிறப்பான பங்களிப்பை எதிர்பார்க்கலாம். இந்தப் பத்திரிகையை இழுத்து மூடி விடக்கூடாது என்பதற்காக இப்போது நாங்கள் சமாளிப்பை மட்டும்தான் செய்கின்றோம். இந்த நிலைமையைச் சீர் செய்வதற்கு நாங்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகளை நடாத்தினோம். நாட்டில் இருக்கின்ற பொருளாதார நிலை காரணமாக எங்களுக்கு அவை வெற்றி பெறவில்லை. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களை செய்யலாம். ஒன்று இந்த பத்திரிகையை கூடுதலாக விலை கொடுத்து வாங்குவது. எனக்கு தெரியும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசத்தில் கூட பத்திரிகைகள் பெருமளவில் விற்பனையாவதில்லை. சில நேரங்களில் எங்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. சில விடயங்களை எங்களால் பிரசுரிக்க முடியாமல் இருக்கின்றது. ஆபாசமான விடயங்கள், கவர்ச்சியான விடயங்களை நாங்கள் வெளியிடுவதில்லை. அது எங்களுடைய பத்திரிகையின் கொள்கை. இஸ்லாமிய அடிப்படையில்தான் இந்த பத்திரிகையை வெளியிடுகின்றோம். ஆகவே அது ஒரு விடயம். அதுவும் எங்களுக்கு இருக்கின்ற முக்கியமானதொரு பிரச்சினை. இந்தப் பின்னணியில் நாங்கள் சொல்வது வர்த்தகர்கள் தொடராக விளம்பரங்களைத் தராவிட்டாலும் சுழற்சி அடிப்படையில் விளம்பரங்களை தந்து இந்த பத்திரிகை வெளிவருவதை உறுதிப்படுத்தலாம். உதாரணமாக X என்ற வர்த்தகர் இந்த வாரம் தந்தால் Y என்ற வர்த்தகர் அடுத்த வாரம் தந்தால் V என்ற வர்த்தகர் அதற்கு அடுத்த வாரம் தந்தால் இப்படி ஒரு சுழற்சி முறையாகத் தந்தால் அவற்றை வைத்து இந்தப் பத்திரிகையை தொடராக எங்களால் முன்னெடுக்க முடியும். அதிலே இரண்டு விடயம் இருக்கின்றது. ஒன்று சமூகத்துக்கான ஒரு பணி. மற்றையது அவர்களுடைய நிறுவனமும் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆகவே நாங்கள் பெரும் தொகையைக் கேட்கவில்லை. சாதாரணமாக பத்தாயிரம் ரூபா விளம்பரத்தை ஒரு வாரத்துக்கு 10 பேர் தந்தால் எங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரும். அப்போது செலவின் ஒரு பகுதியை சமாளிக்க முடியும். இதுதான் இன்று  இருக்கின்ற நிலைமை.

கேள்வி: இப்பத்திரிகையை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்ல என்னென்ன வேலைதிட்டங்களை (Projects) திட்டமிட்டிருக்கின்றீர்கள்?

பதில்: இது ஒரு லிமிடட் நிறுவனம். இந்நிறுவனம்  ஆரம்பத்திலே மூவரின் முயற்சியாக இருந்தது. இப்போது இது சமூகத்தின் முயற்சி. சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா உட்பட பல பிரபல பிரமுகர்களும் பணிப்பாளர் சபையிலே அங்கம் வகிக்கிறார்கள். நாங்கள் பங்குகளை விற்பனை செய்து இப்பத்திரிகையை மேலும் சில காலத்துக்கு தொடரச் செய்வதற்கான ஒரு முயற்சியை நாங்கள் இப்போது பரிசீலித்து வருகிறோம். அதற்கான பொது அறிவித்தலையும் மிக விரைவில் வெளியிட இருக்கிறோம். அப்படியான ஒரு முயற்சியை செய்து பார்ப்பதால் இப்பத்திரிகை மூடப்படுவதைத் தவிர்க்கலாம் என எண்ணுகிறேன்.

கேள்வி: முஸ்லிம் சமூகத்தில் ஊடகத்துறைக்கான ஈடுபாடு எவ்வாறுள்ளது?

பதில்: முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் எழுத்துத் துறையிலே ஊடகத் துறையிலே நிறைய ஆர்வம் இருக்கின்றது. ஆனால் சமூகம் இந்தத் துறையிலே முதலீடு செய்ய முன்வருவதில்லை. இந்த நாட்டிலே இன்று 50க்கும் மேற்பட்ட எப்.எம். வானொலிகள் இருக்கின்றன. ஒன்று கூட எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேவைகள் இருக்கின்றன. வரவர அதிகரித்து வருகின்றன. ஆனால், U TV யைத் தவிர ஒன்று கூட முஸ்லிம்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. U TV கூட எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்ற நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாக அறிகிறோம்.  இந்த நாட்டிலே பல பத்திரிகைகள் இருக்கின்றன. தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் மிகப்பெரும் இக்கட்டான காலப்பகுதியிலும் தங்களது பத்திரிகைகளை வெளியிட்டார்கள். யுத்தத்தின் மும்முரமான காலகட்டங்களில் வடக்குக்கு அச்சுத்தாள்கள் அனுப்பாத போது சுவர்களிலே எழுதி,  போஸ்டர் பேப்பர்களிலே ஒட்டி தங்கள் மக்களுக்கு அறிவூட்டினார்கள். இப்படி தமிழ் சமூகம் இந்த விடயத்திலே முன்மாதிரியாக இருக்கின்றது. இன்று அவர்களுக்கு கிட்டத்தட்ட 10 பத்திரிகைகள் இருக்கின்றன. அண்மையில் கூட ஒரு நிறுவனம் தமிழன் என்ற பெயரிலே ஒரு பத்திரிகை ஆரம்பித்திருக்கின்றது. ஆனால் முஸ்லிம் தனவந்தர்கள் இந்த விடயத்திலே உணர்வுமில்லை அக்கறையுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்பது எங்களுக்குப் புரியாமல் இருக்கின்றது. மர்ஹூம் அறிஞர் சித்திலெப்பை அவர்கள் 1883 ஆம் ஆண்டு முஸ்லிம் நேசனை ஆரம்பித்தார். அதன்பிறகு தினத் தபால் ஒரு தினசரியாக வந்தது. அதன் பிறகு சரியாக ஒரு பத்திரிகை வெளிவரவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் பத்திரிகைகள் வெளிவந்து இருக்கின்றன. ஆனால் இதன் பயணம் 2 வருடம் 3 வருடம் 5 வருடம் அப்படித்தான் இருக்கின்றன. இதனை நாங்கள் ஆய்வுகளிலே கண்டிருக்கின்றோம். தொடராக இன்று நவமணி மட்டும்தான் முஸ்லிம் சமூகத்தின் குரலாக கடந்த 24 வருடங்களாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக நவமணியை தினசரிப் பத்திரிகையாகக்கூட வாரத்துக்கு ஐந்து நாளும் வெளியிட்டோம். அதற்கும் எங்களுக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. குறைந்தபட்சம் இந்தப் பத்திரிகையை ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டிலும் வாங்க முடியுமாக இருந்தால் எங்களுக்கு அதுவே போதுமானதாக இருக்கும். அப்படி வாங்கினால் விளம்பரதாரர்கள் எங்களைத் தானாகத் தேடி வருவார்கள். அப்படியானதொரு நிலைமை எங்கள் முஸ்லிம் சமூகத்திலே இல்லை.

எனவே, இந்த சமூகத்துடைய செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு, இந்த சமூகத்தின் குறைகளைச் சொல்வதற்கு,  இந்த சமூகத்துடைய தேவைகளை வெளி உலகுக்கு சொல்வதற்கு, இந்த சமூகத்துடைய அபிலாஷைகளை ஏனைய சமூகத்துக்குச் சொல்வதற்கு எங்களுக்குப் பத்திரிகை ஒன்று இருப்பது மிக முக்கியமானது. இந்த நாட்டில் இருக்கின்ற வெளிநாட்டு தூதுவராலயங்கள், ராஜதந்திரிகள் முஸ்லிம் சமூகத்துக்கு என்ன நடக்கின்றது? முஸ்லிம் சமூகத்துடைய கருத்து என்ன? என்பது சம்பந்தமான, எமது சமூகம் தொடர்பான விடயங்களை மொழிபெயர்த்து அவர்களுடைய அரசாங்கங்களுக்கு அனுப்புகிறார்கள்.

கேள்வி: பல சவால்களுக்கும் மத்தியில் இந்த பத்திரிகையை எவ்வாறு தொடர்ந்தும் பிரசுரித்து வந்தீர்கள்?

பதில்: இந்த சமூகத்தினால் வெளியிடப்பட்ட மீள்பார்வை இன்று அச்சுப் பதிப்பு மூடப்பட்டு, ஒன்லைனில் மட்டுமே வருகின்றது.  அதுபோல் எங்கள் தேசம் பல வருடங்களாக வெளிவந்தது. அதுவும் இன்று மூடப் பட்டிருக்கின்றது. வீரகேசரி நிறுவனம் முஸ்லிம்களுக்காக வெளியிட்ட விடிவெள்ளியும் இன்று அதன் நாளாந்த பாதிப்புகளை நிறுத்திவிட்டு வாராந்த வெளியீடாகத்தான் வெளிவருகின்றது. ஆகவே நான் நினைக்கின்றேன். இந்தப் பின்னணியில் நவமணியை மூடிவிட்டால்  யாராவது இந்தத் துறையில் இனி பிரவேசிப்பார்களா?  இவ்வாறுதான் இலங்கை முஸ்லிம்களுடைய ஊடகப் போக்கை நாங்கள் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. சமூகம் அவ்வளவு இந்தத் துறையிலே அக்கறை இல்லை. குறிப்பாக தனவந்தர்கள் அக்கறை இல்லை. தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஓர் ஊடக நிறுவனத்தை நடத்தும் போது அவருக்கு ஓர் அரசியல்வாதியை விட பெறுமானம் இருக்கின்றது. ஆனால் அதனை எங்கள் சமூகம் உணரவில்லை. அதுதான் துரதிருஷ்டம். அதனை எங்கள் சமூகம் உணர்ந்திருந்தால் ஊடக நிறுவனத்தின் உரிமையாளர் இந்த நாட்டிலே மிகக் கௌரவமாக மதிக்கப்படுபவராக இருப்பார். இந்தப் பின்னணியிலேதான் நாங்கள் இருக்கின்றோம். சமூகத்துடைய அபிப்பிராயங்களை நாங்கள் வரவேற்கின்றோம். இப்பத்திரிகையின் 25 ஆவது அகவையில் நாங்கள் காலெடுத்து வைக்கும் போது சிலர் உணர்ச்சிவசமாகப் பேசினார்கள். அதன்பின் அவர்களிடமிருந்து எதனையுமே காணவில்லை.  முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் சோடாப் போத்தலாகத்தான் இருக்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு நிறைய  நெருக்கடி நிலைமைகள் இருக்கும்போது ஏன் உங்கள் பத்திரிகையை நீங்கள் மூட முற்படுகிறீகள் என்று  ஒரு தமிழ் அன்பர் என்னிடம் கேட்டார். இதிலிருந்து பத்திரிகையின் பெறுமதியை எமது சமூகம் உணர வேண்டும். முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் ஒரு சிங்கள வார இதழ்,  ஓர் ஆங்கில வார இதழைக் கூட  வெளியிட வேண்டும். ஆனால்,  தற்போது ஒரு தமிழ் வார இதழை கூட வெளியிட முடியாத சிக்கலில் இருக்கின்றோம். எங்களுடைய பத்திரிகையிலே சில தவறுகள், குறைபாடுகள் இருக்கலாம். எல்லாம் இந்தப் பொருளாதார நிலையை அடிப்படையாகக் கொண்டவைதான். நாங்கள் வைத்திருந்த திட்டங்களையெல்லாம் முன்னெடுக்க முடியாமல் இதனை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அன்றாட சமாளிப்புகளோடு நாங்கள் இவ்வளவு நாளாக இந்தப் பத்திரிகையை நடாத்துகின்றோம்.

ஆகவே சமூகம் நவமணியை கைதூக்கி விட்டால் சமூகத்தை நவமணி கைதூக்கி விடும். நமது சமூகத்தின் குரலாக நவமணி செயற்படும். நாங்கள் இங்கு இருக்கலாம்.  அல்லது இல்லாமல் இருக்கலாம். ஆனால் எமது சமூகம் நவமணியை நடாத்த வேண்டும். இளையவர்கள் நடாத்த வேண்டும். அதுவேதான் எங்களுடைய பிரார்த்தனை.

நேர்காணல்: அனஸ் அப்பாஸ், மொஹமட் ஸாஹிர்

8 comments:

  1. நிச்சயமாக தனவந்தர்கள்.அரசியல்வாதிகள் உட்பட ஒவ்வொரு முஸ்லிமும் தனது பங்களிப்பை நவமணிக்குச் செய்ய முன்வரவேண்டும்.எனது பங்களிப்பை நல்குவற்கு ஆவலாய் உள்ளேன்.

    ReplyDelete
  2. Here are my suggestions
    1. Can sell some shares
    2. You can introduce membership span specially who ever in abroad
    3. There is an opinion Nawamani speeds Shiaim....Try to
    Clear this

    ReplyDelete
  3. ஒரு நிதி சேகரிப்பு பிரச்சாரத்தை சட்ட்டபூர்வமாக உருவாக்கி மக்களிடம் நிதி சேகரித்து தற்போதாய நிலைமையை சமாளிக்க முடியாதா?

    ReplyDelete
  4. It is important to have a voice for the muslim community. The closure of print newspapers is a problem in the US as well. You will not be able to reverse this tide. Here's my suggestion.
    Please go fully digital. Create an app. Post free content as well as premium content. Charge a small free for subscribers for premium content. Generate revenue through online adds. Content is king so, make sure you source original content from the community. Drive traffic to the website through social media. Optionally create more revenue by introducing a market place for goods and services. Inshallah, this will make Navamani survive and thrive. Will be happy to advice free fee sabeelillah.

    ReplyDelete
  5. Why can't u give your Bank A/C number to the public and request them to contribute even there ability to share ultimate contribution definitely they will do

    ReplyDelete
  6. இலங்கையில் முஸ்லீம் ஊடக நிறுவனங்களை வழி நடத்துபவர்களிடம் அந்த நிறுவனங்களை மக்கள் மத்தியில் promote செய்யும் யுக்திகள் காணப்படவில்லை .இதட்கு பொருத்தமானவர்கள் இந்த பகுதிக்கு நியமிக்க படவேண்டும் .

    ReplyDelete
  7. Many articles have tamil spelling mistakes and most of the writers should write the artcles to attract the readers.

    ReplyDelete
  8. The news items and article must be attractive to the readers for the good circulation. To achieve this eminent intellectuals,writers and rich people must give a helping hand for the revival of this mews paper.Awareness about a news media for our Muslim community should be made among our society. Niyas Ibrahim.

    ReplyDelete

Powered by Blogger.