ஜனாஸா அடக்கம், திட்டமிடப்பட்ட ஏமாற்று நாடகம் அரங்கேற்றப்படுகின்றதா..? இம்ரான் Mp
கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தொடந்து கருத்து தெரிவிக்கையில்,
கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை அது குறித்து இன்னும் முடிவு எடுக்கப் படவில்லை என அரசு அறிவித்து விட்டது.
எனவே அரசின் உத்தியோகபூர்வ அறிவித்தல் அல்லது வர்த்தமானி அறிவித்தல் வெளிவரும் வரை வீணான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதில் இருந்து தவிர்ந்துகொள்வது சிறந்தது.
சில அமைப்புகளும் தனி தபர்களும் ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி கிடைத்து விட்டதாக பிழையான தகவல்களைப் பரப்பினர். இதனால் சமுகம் குழம்பிப் போய் இருக்கின்றது.
இலங்கையில் ஜனாஸாவை வைத்து பேரினவாத அரசியல் நடாத்தப்படுவது நாம் யாவரும் அறிந்த விடயமாகும்.
இவ் அரசியல் விளையாட்டிலிருந்து ஜனாஸா அடக்குவதற்கு அனுமதியை பெற ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மற்றும் சிவில் சமூகம் என பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் நிகழ்வுகளை அவதானிக்கும் போது நன்கு திட்டமிடப்பட்ட ஏமாற்று நாடகமொன்று அரங்கேற்றப்படுகின்றதா..? என்ற சந்தேகம் எழுகிறது.
அரசு நினைத்தால் இதற்கான நல்ல தீர்மானத்திற்கு வருவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. உண்மை என்னவென்றால் அரசு இது தொடர்பான விடயத்திற்கு இதுவரை வரவில்லை என்பதுதான் என சுட்டிக்காட்டினார்.
ஆனால் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களும் கூட இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்டது கவலைக்குறிய விடயமாகும்.
ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்ததாக உரிமை கூற முயன்று அவசரமாக ஊடக அறிக்கைகளை வெளியிட்டவர்கள் ஒருபுறம். இருபதுக்கு ஆதரவு அளித்ததால் தான் அனுமதி கிடைத்தாக கூறியவர்கள் இன்னொரு புறம்.
இதன் பின்னால் உள்ள அரசியல் விளையாட்டு இவர்களுக்கு தெரியாமலில்லை.
இருப்பினும் இது தெரிந்தும் சமூகத்தை ஏமாற்றும் நடவடிக்கையையே இவர்கள் முன்னெடுக்கின்றனர்.
சுகாதார துறையின் ஆலோசனைக்கு அமையவே ஜனாஸாவை அடக்கம் செய்யும் அனுமதியை வழங்க முடியும் என கூறும் அரசாங்கம் கொரோனாவை கட்டுப்படுத்த நாட்டை முடக்க வேண்டும் என சுகாதார துறை கூறிய போது அதை நடைமுறைப்படுத்தவில்லை.
ஆகவே இங்கு பிரச்சினை சுகாதார துறை அல்ல என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் ஏமாற்று நடவடிக்கைகளை நம்புவதிலிருந்து விடுபட வேண்டும் என தெரிவித்தார்.
Post a Comment