எரிப்பதிலும் அநியாயம், வெளிவராத உண்மைகள்
- பேருவளை ஹில்மி -
Corona மரணம் என அடையாளமிடப்படும் ஜனாஸாக்களை தகனம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்பு அவ்விடத்திலேயே அந்த ஜனாஸாவுக்கான தொழுகையும் நடத்தப்படுகின்றது.
ஜனாஸாவுக்கு தொழுகை நடாத்த ஆரம்பிக்கும் முன்பே அங்கே ஜனாஸாவின் உறவினர்களுக்கு, அவசர அவசரமாக உங்கள் மார்க்க சடங்குகளை செய்யும் படி எச்சரிக்கை விடுக்கப்படுகிறார்கள். அதிலும் தொழுகை நடாத்தும் போதும் அவசரமாக அவசரமாக முடிக்கும் படியும் தமக்கு இன்னும் வேறு வேலைகள் இருப்பதாக சத்தமிடுகிறார்கள். அத்தோடு ஜனாஸாவுக்காக பிரார்த்தனை செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதும் இல்லை.
அதற்காக நேரம் வழக்கப்படுவதும் இல்லை. தொழுகை முடிவடைய முன்னரே ஜனாஸாவை எரிக்க எடுத்துச் செல்ல முற்படுகிறார்கள். ஏதோ ஒரு உலக மகா பாவியை சிறை கைதியை எரிக்க கொண்டு வந்ததைப் போல் அந்நேரத்தில் அவர்களின் செயற்பாடு உள்ளது என எரிக்கப்பட்ட கொழும்பு வாழைத்தோட்ட ஜனாஸா ஒன்றுடன் தொடர்புடைய ஒருவர் மிகவும் மன வருத்தோடு தெரிவித்தார்.
ஏற்கனவே மனம் நொந்து நடைப்பிணமாக அவ்விடத்தை நோக்கிச் செல்லும் அந்த ஜனாஸாவின் உறவுகள் என்ன தான் செய்ய? அதையும் மீறி பேசினால் தொழுகை நடாத்தும் வாய்ப்பும் இழந்து போகும் என அவ்விடம் செல்லும் அனைவரும் மிகவும் இடிந்து போன நிலையில் பொறுமையோடு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அவ்விடம் செல்வோர் இனவாத வெறியோடு பழிவாங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இது சம்பந்தமாக கவனம் செலுத்தும் படி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களை தொடர்பு கொண்டு முறையிட்டபோது, அவர் தாமும் இது சம்பந்தமாக சுட்டிக்காட்டியதாகவும் ஆனாலும் அவ்வாறே தொடர்ந்தும் செய்கிறார்கள் எனவும் கவலை தெரிவித்தார்.
ஒரு காலம் வரும் மியன்மாரில் முஸ்லிம்களுக்குஏற்பட்டுள்ள நிலைமை நமக்கும் ஏற்படும் என்று அன்று சொன்னோம். இன்று அவ்வாறான ஒரு நிலைமை வந்து விட்டதா என நினைக்கத் தோன்றுகிறது.
மியன்மாரில் முஸ்லிம்களை கொன்று, அதையும் அடக்கவிடமல் துண்டுகளாக வெட்டி, கழுகுகளுக்கு உணவாக இட்ட ஈவிரக்கமற்ற காட்சியை நாம் காணொளிகளில் கண்டோம். இது போன்றே எரிக்கும் செயலும் அமைந்துள்ளது.
Corona நோய்வாய்ப்பட்ட ஒருவன் உலகில் வாழும் நிலையில், அவனின் மலசலம், அவனின் உமிழ் நீர், அவன் குளிக்கும் தண்ணீர், அவனது கழுவும் ஆடைகள் அனைத்திலுமே கிருமிகள் இருக்கவே செய்கின்றன. இந்நிலையில் அவன் இறக்கும் போது அவனது கிருமிகள் தண்ணீரில் கலக்கின்றது என்பது ஒரு அர்த்தமற்ற வாதமாகும்.
சடப்பொருளில் எட்டு முதல் பன்னிரண்டு மணித்தியாலங்கள் வரை இந்த வைரஸ் உயிர் வாழும் என ஆராய்ச்சிகள் இருக்கின்ற போதும், மனிதன் உயிரிழந்து சடலமாகிய பின்பு அதன் ஆயுள் சில மணித்தியாலங்களே என ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்ற நிலையில், அவ்வாறானால் அத்தனையும் ஜனாஸா எரிப்பு என்ற பெயரில் பெரும்பான்மையை திருப்திப்படுத்தும் நாடகங்களா இங்கு அரங்கேற்றப்படுகிறது ?
அதாவது நமது ஜனாஸா எரிக்கப்படும் என்று கனவிலும் நாம் நினைக்கவில்லை. அவ்வாறானால் பெரும்பான்மையை திருப்திப்படுத்த நம்மை இனிவரும் காலங்களில் நம்மை உயிருடன் எரித்தாலும் வியப்படைவதற்கில்லை. அவ்வாறான ஒரு நிலையை நாம் மியன்மாரில் கண்டோம். அங்கே அரங்கேறிய அரசியல் வழி முறைகளே இங்கும் படிப்படியாக அரங்கேற்றப்படுகிறதா ?
அதைவிடவும் ஒரு மனிதனின் இறுதிக்கிரியை எவ்வாறாக அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்க பூரண சுதந்திரம் எல்லா நாட்டு அரசியல் யாப்புகளிலும் அவனுக்கு வழங்கப்படடுள்ளது. அது ஒருவரது உரிமை. இவை ஒரு நாட்டில் மீறப்படும் போதே அது தனி மனித உறிமை மீறல் என சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் அடையாளப் படுத்துகின்றது. நமது நாட்டில் முக்கியஸ்தர்களும் இவை தெரியாமல் இல்லை. ஒரு இனத்தை திருப்திப்படுத்த அனைத்தும் ஏற்கனே திட்டமிடப்பட்ட செயலாகவே கருதவேண்டியுள்ளது. இனவாதத்தை தூண்டி அதையும் பறிக்க முயற்சிக்கின்றனர்.
ஒரு சமூகத்தின் உரிமையையும் திருப்தியை சன்மார்க்க கடைமையை விடவும், இன்னெரு சமுகத்தின் ஆதரவே இங்கு கணிக்கப்படுகிறது. அனைத்திலும் பின்னணி அரசியலே.
பறிக்கப்பட்ட உரிமையை கேட்டால் அடிப்படைவாதி என முத்திரை குத்துகின்றனர்.
நமது உரிமைகள் பறிக்கப்படும் போது அதை தட்டிக் கேட்க நமக்கு தாராள உரிமையுண்டு. நாம் கேட்கும் போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஏனைய மத குருக்களுக்கு எந்தவித உரிமையும் இல்லை. அவ்வாறானால் ஒரு நாட்டில் அரசாங்கம் ஒன்று அவசியமில்லை . மத குருக்களை வைத்தே நாட்டை ஆட்சி செய்து விடலாம். நாட்டின் அரசாங்கங்களே இதற்கு பொறுப்புச் சொல்ல வேண்டும்.
செத்த பிணத்தை வைத்து இனவாதமும் அரசியலும் பழிவாங்கலும் நடத்தும் இது போன்ற ஒரு நாடு உலகில் எங்குமே இல்லை.
இது போன்று இன்னும் பல பதிவிகளில் "மியன்மாருடன்" தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது? எதற்காக அவ்வாறு எழுதுகிறார்கள் என்று புரியவில்லை? சமபத்தப்பட்டவர்களை இன்னும் முன்னேறும்படி தூண்டுகிறார்களா? அல்லது அந்த அயோகியத்தைச் சொல்லி முஸ்லிம்களை ஆசுவாசப்படுத்த முனைகிறார்களா? அல்லது இப்படியே சொல்லிச் சொல்லித் தமக்கும் அந்நிலையை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார்களா?
ReplyDeleteஇவ்வாறான அபசகுனமான பதிவுகளை ஏன் கண்ணைப்பொத்த்திக் கொண்டு பிரசுரிக்கிறீர்கள்?