நெருப்பில் எரித்தாலும், ஈமான் கருப்பதில்லை
- முஹம்மத் பகீஹுத்தீன் -
சீனா தேசத்தின் வுஹான் நகரத்தில் பிறந்த கொரோனா இத்தாலி வழியாக இலங்கை வந்து சேர்ந்தது. இலங்கை மண்ணின் புகழ்பெற்ற ஊடகங்களின் உழைப்பால் மதத்தைப் பற்றிக் கொள்ளப் பார்த்தது. ஈமக்கிரியைகளுக்கான சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ள நிலையில் புதைக்கப்பட வேண்டிய சடலங்கள் சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கை சுதந்திரமாக செய்ய முடியாமல் அங்கும் இங்கும் அலைந்த உள்ளங்கள் மௌனித்து நிற்கின்றன.
இஸ்லாமிய சட்டப் பரப்பில் காலத்தின் தேவையை கருத்திற் கொண்டு நெகிழ்ந்து கொடுக்கும் பண்பு இருப்பதால் சமூகம் வீழ்து விடாமல் பயணிக்கிறது.
கொரோனாவால் கெட்டுவிடும் மேனியை சுட்டுவிடும் நெருப்பு, ஈமானின் அடையாளத்தை மறைக்காது என்பதை புரிந்து கொள்ளும் வகையில் சில செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
உண்மையில் நொந்த மனசை தேற்றிக் கொள்வதற்காக இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றேன். இங்கு கூறப்படும் வரலாற்று நிகழ்வுகள், பற்றியெரியும் ஆன்மாவை தேற்றும் காயகல்பமாக அமையும் என நம்புகிறேன்.
இறந்த உடல்களை அடக்கம் செய்வது பொதுவான உலக வழமை. குறிப்பிட்ட சில சமய வழக்காறுகளை தவிர அதிகளவாக இறந்த பிரேதங்களை புதைக்கும் வழக்கமே தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் முதல் மனிதன் ஆதம் (அலை) அவர்கள் தொட்டு இறந்த உடலை புதைப்பதுதான் வழக்கமாக வந்துள்ளது. உலகத்திற்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் சாதாரண நிலையில் வாழும் ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவனைக் குளிப்பாட்டி, கபனிட்டு (வெண்ணிற ஆடையால் மறைத்து), அவனுக்காக தொழுகை நடாத்திய பின்னர் புதைக்க வேண்டும் என வழிகாட்டியுள்ளார்கள்.
இந்த ஒழுங்கு முறையில் மரணித்த உடலை அடக்கம் செய்வது முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுப் பொறுப்பாகும். அதனை ஒரு சிலர் செய்து விட்டால் ஏனையோர் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிடும்.
இறந்த உடலை புதைப்பது ஒரு மனிதனின் பிறப்புரிமை மட்டுமல்ல அது முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள கூட்டுக் கடமையுமாகும். அவன் பிறக்கும் போதும் கண்ணியமானவன். இறக்கும் போதும் கண்ணியாமானவன். அதைப் பேணுவது இஸ்லாமியர்களின் மரபு மட்டுமல்ல அதற்கு மாற்றம் செய்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் மையித்தை எரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்த சூழ்நிலை காணப்படவில்லை. எனவே பிரேதங்களை எரிப்பது சம்பந்தமாக எந்த மார்க்கத் தீர்ப்பையும் இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் கண்டு கொள்ள முடியாது.
1907ம் ஆண்டுகளில் எகிப்தில் பிணங்கள் எரிக்கும் உலைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஒரு பதிவு உண்டு. அங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்களின் பிரேதத்தை எரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அந்த அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் கூட சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பம் காலம் முதல் பல தடவைகள் தொற்று நோய் பரவல் வந்து போயுள்ளது. ஹிஜ்ரி 18ம் ஆண்டு உமர் (ரழி) அவர்களின் ஆட்சியில் இருக்கும் போது ஷாம் தேசத்தில் நிலை கொண்ட கொள்ளை நோய் பரவல் மிகவும் பிரபல்யமானது. இதில் சுமார் இருபதாயிரம் பேர் மரணத்தை தழுவினார்கள்.
ஈராக், மேற்கு ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகள், சீனா, அறேபிய தீபகற்பம், மேற்கத்திய நாடுகள் என பல பாகங்கிலும் தொற்று நோய்பரவல் பாரிய உயிர்ச் சேதங்களைம் சமூகத்தில் அழியாத வடுக்களையும் ஏற்படுத்தியுள்ளன.
அந்த வரிசையில் நவீக காலத்தில் எபோலா, சார்ஸ், மேர்ஸ், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் என பல தொற்று நோய்கள் மத்திய கிழக்கு நாடுகளையும் சீனாவையும் பதம் பார்த்துள்ளன.
2019 டிசம்பரில் சீனாவின் வுஹான் பகுதியில் ஆரம்பித்த கொரோனா தொற்று இதுவரை பாரிய உயிர்ச் சேதங்களையும் பொருளாதார சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. கோவிட் 19 என்பது கொரோனா குடும்பத்தின் புதிய வைரஸ் என்பதால் அதன் விளைவுகள் விட்டுச் செல்லும் தாக்கங்கள் மதிப்பிட முடியாதுள்ளது. அதன் பிடியில் இருந்து விடுதலை பெறுவதற்காக உலகம் பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது.
காலத்திற்கு காலம் வந்த தொற்று நோய் வரலாற்றில், முஸ்லிம்களின் மரணித்த உடல்களை புதைப்பதே மரபு வழியாக இருந்து வந்துள்ளது. தற்போது பரவியுள்ள கொரோனோ கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக மரணித்தவர்களையும் சுட்டெரிக்கலாம் அல்லது அடக்கம் செய்யலாம் என்றே உலக சுகாதார அமைப்பு வழிகாட்டியுள்ளது.
இலங்கையிலும் அதே ஒழுங்குதான் சட்டத்தில் இருந்தாலும் முஸ்லிம் புத்திஜீவிகளின் முயற்சியால் ஜனாஸாக்களை புதைப்பதற்கு மாத்திரம் வழிவகை செய்யப்பட்டது. ஆனால் அந்த சுற்றுநிருபம் மாற்றப்பட்டுள்ளதாகவே கடைசியாக வந்த செய்திகள் அன்று உறுதி செய்தன.
இறந்த மனிதனின் பிரதேத்திற்கு உயிருள்ள மனிதனுக்கு உள்ள அதே கண்ணியமும் கௌரவும் கொடுக்க வேண்டும் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். மனிதன் என்பவன் உலக படைப்பினங்களில் சிரேஷ்டமானவன். அவன் உயிருள்ள நிலையிலும் இறந்த நிலையிலும் கண்ணியமாகவே நடத்தப்பட வேண்டும் என இஸ்லாம் வழிகாட்டுகிறது.
'மரணித்த ஒரு மனிதனின் எலும்பை முறிப்பது, அவன் உயிருடன் இருக்கும் நிலையில் அவனது எலும்பை முறிப்பதற்கு சமனாகும்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
பிரேதத்தை பாடையில் சுமந்து செல்லும் போது கூட குழுங்காமல் அதிராமல் சுமந்து செல்ல வேண்டும் என நபிகாளார் வழிகாட்டியுள்ளார்கள்.
ஒரு யூதனின் மையித் போகும் போது கூட எழுந்து மரியாதை செய்த நபியவர்கள் அதுவும் ஒரு ஆத்மா தானே என்றார்கள்.
எனவே மையித்தை எரிப்பது அதற்கு செய்யும் இழிவாகும். மனிதன் மரணித்த பிறகும் கூட அவனது பிரேதம் காயப்படவோ, நோய்வினை செய்யப்படவோ அல்லது அவமானப்படுத்தப்படவோ கூடாது என இஸ்லாம் போதிக்கிறது.
மரணித்த உடலை அடக்கம் செய்ய வேண்டும் எனவ இஸ்லாம் கூறுவதற்கான பிரதான நோக்கம் இறந்த உடம்புக்குக் கூட கௌரவம் வழங்க வேண்டும் என்பதனால் தான்.
இந்த வகையில் முஸ்லிம்கள் மையித்தை முறையாக அடக்குவதையே விரும்புகிறார்கள். இஸ்லாமிய வழிகாட்டலை பின்பற்றி அடக்குவது முஸ்லிம்கள் மீதுள்ள கூட்டுப் பொறுப்பும் கூட. மரணித்த பின்பும் உடலை நோய்வினை செய்வதை அவர்களது மார்க்கம் தடுக்கிறது. சுட்டெரிப்பதை மார்க்கம் தடை செய்துள்ளது. எனவே இறைவனின் ஆன்மா வாழ்ந்த கூட்டை மரியாதையாக கையாள்வதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
இங்கு நாம் இன்னொரு உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய வரலாற்றில் மரணித்த முஸ்லிம்களின் பிரேதங்கள் சித்திரவதை செய்யப்பட்டு இழிவுபடுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு. தொற்று நோய் காலப்பிரிவில் பல இறந்த உடல்கள் உரிய முறையில் பரிபாலனம் செய்ய முடியாமல் கவனிப்பாரற்று சூழல் மாசடைந்த நிகழ்வுகளும் காணப்படுகின்றன.
நபிகளாரின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரழி) அவர்கள் கொலை செய்யபட்டு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இத்தகைய கசப்பான வேதனைக்குரிய நிகழ்வுகளுக்கு வரலாறு சான்றாகும்.
அப்துல்லா இப்னு துபைர் ரழி அவர்கள் கொலை செய்யப்பட்ட பின்னர் அவருடைய உடல் பல நாட்களாக சிலுவையில் ஏற்றப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டது. அவரை குளிப்பாட்டும் போது ஒவ்வொரு அங்கமாக கழண்டு கழண்டு வந்தது. பிரிந்து வந்த அங்கங்களை ஒன்று சேர்த்தே கபன் செய்யப்பட்ட நிகழ்வை வரலாறு பதிவு செய்துள்ளது.
ஷாமில் ஏற்பட்ட தொற்று நோயின் போது மரணித்த உடலை வேட்டை மிருகங்கள் பதம் பார்த்ததையும் வராறு கூறுகிறது.
அப்போது ஷாமின் குறிப்பிட்ட பிராந்திய கவனர்களாக மூத்த ஸஹாபர்க்கள் இருந்துள்ளார்கள். இது தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மையித்துகளுக்கு ஏற்படும் அவமான நிலையாகும்.
உயிர்க் கொல்லியான கொள்ளை நோயின் கொடூரம் கட்டுப்பாட்டை மீறிய போது மரணித்த உடல்கள் சிதைவடைந்து மிருகங்களுக்கு இரையாகவும் மாறின.
அந்தக்கால சூழ்நிலை காரணமாக இத்தகைய அவலங்களை சகித்துக் கொள்ளவதை தவிர வேறு வழியிருக்க வில்லை. அறிஞர் முஹம்மத் அலி ஸல்லாபி அவர்கள் குறிப்பிடும் இந்த காட்சிகளை வாசிக்கும் போது கண்கள் குளமாகின்றன.
தொற்று நோயுள்ள காலத்தில் இறந்த சடலங்கலை ஒன்றோ எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் அல்லது ரசாயன கலவைகள் கொண்டு கரைக்கலாம். இதில் புதைப்பதே முஸ்லிம்களின் தேர்வாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதல்லாத ஒரு முடிவை தெரிவு செய்வதற்கு அவர்கள் மார்க்கம் அனுமதிப்பதில்லை.
இதே தேர்வைத்தான் கிறிஸ்தவர்களும் யூதர்களும் எடுப்பார்கள். காரணம் அவர்களும் அன்று முதல் இன்று வரை இறந்த உடலை அடக்கம் செய்வதையே வழமையாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் துறை சர்ந்தோர் தொற்று நோயின் வகையை பொருத்து இதனை எரிக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறினால் அதற்கு இஸ்லாமிய சட்டப்பரப்பு நெகிழ்ந்து கொடுக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் இப்படியான அசாதாரண சூழ்நிலையில் சட்டப்பரப்பில் உள்ள சலுகைக்கான அடிப்படைகள் காலத்திற்கு பொருத்தமான தீர்வுகளைப் பெறுவதில் வழிகாட்டுகின்றன. உதாரணமாக நோய் தொற்றும் என்ற பயம் காரணமாக பள்ளிவாசல்களுக்கு போவதை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதைப் போல.
அவ்வாறே நிர்ப்பந்த சூழலில் ஹராமானவை ஆகுமாக்கப்படும். உதராணமாக பட்டினி காரணமாக சாகும் தருவாயில் இருப்பவன் பன்றியிறைச்சி சாப்பிடுவது போல. இதற்கான ஆதராத்தை சூரா மாஇதா மூன்றாவது வசனம் தெளிவாகவே விளக்குகிறது.
அவ்வாறே மரணித்த உடம்பை அடக்கம் செய்வதால் உயிருள்ள ஒருவருக்கு ஆபத்து நேரலாம் என்றிருந்தால் உயிர்களை பாதுகாப்பது முதன்மைப்படுத்தப்படும். அதனால் அடக்கம் செய்தல் என்ற சமூகக் கடமை முஸ்லிம்களின் பொறுப்பிலிருந்து நீங்கிவிடும்.
எனவே நவீன காலத்தில் பயங்கர தொற்று நோய் காரணமாக மரணித்த உடல்களை எரிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் வந்தால் இஸ்லாமிய சட்டம் நெகிழந்து கொடுக்கும். அதற்கு அல்குர்ஆன் சட்ட வசனங்களும், ஹதீஸ்களும், இஸ்லாமிய சட்டவிதிகளும் மிகத் தெளிவாகவே துணை நிற்கின்றன.
மேலே குறிப்பிட்ட வடிவத்தில் பிரேதத்தை எரிப்பதற்கு சட்டம் விரிந்து கொடுக்கும் என்ற புரிதலையும் நாம் மனங்கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் காரணமாக இப்படி ஒரு நிர்ப்பந்தம் காணப்படவில்லை. மரணித்தவரை புதைக்கவும் முடியும் என்றே உலக சுகாதரா அமைப்பு வழிகாட்டியுள்ளது.
மறாக அடக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ள கொலரா, குருதிப்போக்குக் காய்ச்சல் போன்ற தொற்று நோய் காரணமாக இறந்த உடலை எரிப்பதே பாதுகாப்பான வழி என உலக சுகாதரா அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
துரதிர்ஷ்டவசமாக நிர்ப்பந்த நிலையொன்று வந்தால் சட்டம் இடம் கொடுக்கும் வகையில் உள்ளது என்ற புரிதல் தான் இங்கு முக்கியமானது. இதனை சீரணிப்பது மனதிற்கு கஷ்டமானது தான்.
இருந்தாலும் இறந்த உடம்பிலிருந்து உயிருள்ள ஒரு வருக்கு ஒரு பயங்கர நோய் தொற்றும் என்பது துறை சார்ந்தவர்களின் கூட்டு முடிவாக இருந்தால் அதனை யாரும் மறுப்பதற்கில்லை. இஸ்லாமிய சட்டம் இத்தகைய மனித நலன்கள் சார்ந்த கூட்டுத் தீர்மானங்களை அங்கீகரிக்கிறது.
காரணம் அனைத்து இஸ்லாமிய ஷரீஆ சட்டங்களும் மனித நலன்களை பெற்றுக் கொடுப்பதற்கும் தீமைகளை தடுப்பதற்காகவுமே இயற்றப்பட்டுள்ளன.
நலன்கள் மீது எழுந்துள்ள இஸ்லாமிய சட்டங்கள் நீதியானதும் அருள் நிறைந்ததுமாகும்.
கொரோனா காரணமாக இறந்தவரின் உடலை எரிப்பது தான் பாதுகாப்பானது என நாட்டின் துறை சார்ந்த அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிமகளை ஒரு நிர்ப்பந்த சூழ்நிலைக்கு தள்ளியுள்ளது. உண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்மானம் அப்படியல்ல. இந்த நிலையில் முடியுமான எல்லா வழிகளிலும் முஸ்லிம்களின் மரணித்த உடலை அடக்குவதற்காக அனுமதியை தரும் வரை ஓயாமல் உழைக்க வேண்டும்.
மதங்களின் புனிதங்களை மீறி சுட்டெரிப்பது முடிந்த முடிவாக மாறினால் பொறுமையை கடைப்பிடிப்பதே எமக்கு முன்னால் உள்ள ஒரே வழியாகும்.
நாடு ஒரு பேரிடரை எதிர் நோக்கியுள்ளது. பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வைத்தியர்களும் தாதிமார்களும் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்கிறார்கள். இந்த நிலையில் எரிப்பதை தவிர்ப்பதற்கான உச்சபட்ச முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதையும் அறிகின்றோம். இதற்கு பிறகு படைத்தவனிடம் பொறுப்புச் சாட்டுவதுதான் எமது பணியாகும்.
அவ்வாறே இறைவன் மன்னிப்பை யாசிப்பதுடன் இந்த நிலை மிக அவசரமாக நீங்குவதற்கு எல்லாம் வல்ல இறைவனை அழுது தொழுது கெஞ்சிக் கேட்பதுவே மார்க்கம் காட்டித்தந்துள்ள வழியாகும்.
கிடங்கு வாசிகள் கதை இங்கு சிறந்த ஒரு பாடத்தை எமக்கு கற்றுத் தருகிறது. அவர்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்பட்டார்கள். அந்த கல்நெஞ்சக்காரர்கள் உயிரோடு நெருப்பில் துடிக்கும் அப்பாவிகளின் வேதனையைப் சுற்றி இருந்து பார்த்து ரசித்தார்கள். அப்போது ஒரு தாய் நெருப்புக் கிடங்கில் விழுவதற்கு தயங்கிவிட்டாள். அவளுடன் இருந்த குழந்தை தன் தாயைப் பார்த்து 'தயங்காதீர்கள் தாயே! நீங்கள் சத்தியத்தில் இருக்கின்றீர்கள்' என்று கூறி தன் தாய்கு தைரியத்தை கொடுத்தது. (ஆதராம் முஸ்லிம்)
இதனூடாக நெருப்பில் எரித்ததனால் ஈமான் கருக்காது என்ற யதார்த்தத்தையே நபி (ஸல்) கற்றுத்தருகின்றார்கள். அந்த குழந்தையின் வார்த்தை தான் எமது குறிக்கோள் வார்த்தையாக இருக்க வேண்டும். சமூகமே பொறுமையாக இருந்து கொள். எரிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு மிகப் பெரிய வெற்றி வெகுமதியாக வழங்கப்படும் " சூரா புரூஜ் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விட்டு, நெருப்பில் எரிந்தவர்களைப் பற்றி 'அதுதான் பெரிய வெற்றியாகும்' என்று சிலாகித்து கூறுகிறது.
எனவே இஸ்லாத்தின் தீர்க்கமான நிலைப்பாடு மரணித்த உடலை எரிக்கக்க கூடாது என்பதே. அந்தத் தீர்மானத்திற்கு உடந்தையாகவும் இருக்கக் கூடாது. ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ற வகையிலும் மத ரீதியான கடப்பாடு என்ற வகையிலும் கொரோனோ தொற்றியதன் காரணமாக இறந்த உடலை அடக்கம் செய்வதால் நோய் தொற்றாது என சர்வதேச சட்டம் கூறுவதாலும் முஸ்லிம்களின் இறந்த உடலை அடக்கம் செய்ய அனுமதி பெறுவதற்கான முழுமையன முயற்சியை தொடர்வது நமது கடமையாகும்.
இத்தகைய முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னரும் அடக்கம் செய்வது கைகூட வில்லையாயின் ஜனாஸாவிற்குரிய சமூகப் பொறுப்பு நீங்கிவிடுகிறது.
அதன் பின்னர் ஏற்கனவே சொன்ன நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்படுகின்றோம். இத்தகைய சூழலில் பற்றி எரியும் ஆன்மாவை தேற்றிக் கொள்ளவே வரலாறு நெடுகிலும் மரணங்களுக்கு நடந்த அவமானங்களை எடுத்துக் கூறினோம்.
2013ல் எகிப்தின் ராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக ராபிஆவில் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸீஸீயின் ராணுவம் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான குடிமக்களை பகிரங்கமாக படுகொலை செய்தது. இறந்த சடங்களை சுட்டெரித்து விட்டு கழிவுப் பொருட்கள் அகற்றுவது போல் சவலால் அள்ளி வீசிய காட்சிகள் கண்களிலிருந்து இன்னும் மறையவில்லை. அப்போதும் கூட பொறுமைதான் அருமை மருந்தாக இருந்தது.
பலவீர்னகளுக்கு அவர்களின் எஜமான் அல்லாஹ் இருக்கின்றான். நடப்பது யாவும் இறை நாட்டத்தோடு தான் நடைபெறுகின்றது. நிச்சயமாக கஷ்டத்துடன் இலகு இருக்கின்றது.
அந்தச் சிறுவன் தாய்க்கு கூறியது போல "தயங்காதீர்கள் நெருப்பில் எரிந்தவர்கள் சத்தியத்தில் இருக்கின்றார்கள். எனவே பொறுமை காத்துக் கொள்ளுங்கள்" என்பதே எமது சுலோகமாக அமைய வேண்டும். கொரோனாவால் கெட்டுவிடும் மேனியை சுட்டுவிடும் நெருப்பு ஒரு அவமானம் அல்ல. அது ஈமானின் வெற்றிக்கான அடையாளமாகும்.
யா அல்லாஹ்! எரிக்கப்பட்ட அடியார்களின் பாவங்களை மன்னிதருள் வாயாக! அவர்களுக்கு ஷஹீதுடைய அந்தஸ்தை கொடுத்து உயர்ந்த சுவனத்தில் குடியிருத்தாட்டுவாயாக! ஆமீன்.
Ameen.
ReplyDelete