Header Ads



ஊரடங்கிற்கு முன் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் ஆபத்து – GMOA


மேல்மாகாணத்திலிருந்து ஊரடங்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் பொதுசுகாதார பரிசோதகர்களையும் மருத்துவ சுகாதார அதிகாரிகளையும் ஈடுபடுத்தியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுசெயலாளர் வைத்தியர் ஹரிதா அல்துகே தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்திலிருந்து ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் வெளியேறியவர்களால் நாட்டிற்கு பெரும் ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் என தெரிவித்துள்ள அவர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமைக்காக தனிமைப்படுத்தல் சட்டங்களின் கீழ் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கிற்கு முன்னர் நான் கொட்டாவையில் பெருமளவு வாகனங்களை பார்த்தேன் என தெரிவித்துள்ள வைத்தியர் ஹரிதா அல்துகே மக்கள் தங்கள் பொறுப்புணர்வுகளை உணரவில்லை, தாங்கள் மற்றவர்களின் உயிர்களிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதையும் இவர்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தற்காலிக நடவடிக்கையாகவே மேல்மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணத்திற்குள்ளேயே இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதிலும் அவர்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர் அவர்களை கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் பல நோயாளிகள் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை இதன் காரணமாக அவர்களை கண்டுபிடிப்பதற்கு நேரமெடுக்கும் இதன் காரணமாகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.