யாழ்ப்பாண முஸ்லிம்கள் மனதில், இடம்பிடித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யார்..??
- எம். ஜான் முஹம்மத் -
வாழ்ந்தவர் கோடி மாண்டவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? உண்மைதான் உலகில் பல கோடி மக்கள் வாழ்ந்து மறைந்த போதிலும் ஒரு சிலரையே இன்று மக்கள் ஞாபகத்தில் வைத்துள்ளார்கள். இவர்களில் உலக மக்களால் ஞாபகத்தில் வைக்கப்பட்டுள்ளோர் ஒரு சிலர். பலர் அந்தந்த பிரதேசங்களில் ஞாபகப் படுத்தப் படுவர். ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இன்னொரு இனத்தால் ஞாபகப்படுத்தப் படுவதாக இருந்தால் அவர் ஒரு நேர்மையான செயற்பாடுகளை முன்னெடுத்த ஒருவராகவே இருக்க வாய்ப்புண்டு. மாற்றமாக ஒரு இன மக்களுக்கு இன்னொரு இனத்தைச் சேர்ந்தவர் தன்னலமற்ற சேவைகளைச் செய்யும் போது அவர் அம்மக்களின் மனதில் இடம்பிடிப்பார்.
இவ்வாறு கடந்த நூறு வருடங்களில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் மனதில் இடம்பிடித்த தமிழ் அரசியல் தலைவர்கள் யார் என்றால் அது ஒரு சிலரே.
சுதந்திரத்துக்கு பின்னரான யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரதேசம் பல்வேறு தேவைகளை உடையதாக இருந்தது. இந்தத் தேவைகளில் முஸ்லிம் பெண்களுக்காக தனியாக பெண்கள் பாடசாலை அமைத்தல், ஆண்களுக்கு ஒரு பாடசாலை அமைத்தல், மழைகாலங்களில் வெள்ள நீர் தேங்கும் பொம்மைவெளி பிரதேசத்தை மண்போட்டு நிரப்புதல் போன்ற பல்வேறு தேவைகள் காணப்பட்டன.
தமிழ் அரசியல் தலைவர்களில் முஸ்லிம்களால் நம்பர் வன் முதலிடத்தில் வைத்து இன்றும் ஞாபகப் படுத்தப் படுபவர் தான் அல்பிரட் துரையப்பா. அவர் மக்களுடன் இயல்பாக பழகுவார். பாகுபாடு காட்ட மாட்டார். ஏழைகளுக்கு உதவி செய்வார். யாழ்ப்பாண முஸ்லிம்களை பொருத்த மட்டில் அவர் பிரதி மேயராக முதலில் வருவதற்கு முஸ்லிம்களின் வாக்கு காரணமாக இருந்தது. நன்றிமறவாத துரையப்பா முஸ்லிம் பிரதேசத்தில் சந்திக்கு சந்தி மின்விளக்குகளை பொருத்திக் கொடுத்தார்.
யாழ் நகரத்தில் நவீன சந்தைக் கட்டிடம் அமைக்கப் பட்ட போது பாகுபடின்றி முஸ்லிம்களுக்கும் அவற்றில் ஒரு சிலவற்றை வழங்கினார். ஒஸ்மானியா கல்லூரி உருவாக்கத்தில் அரசியல் ரீதியாக, நிர்வாக ரீதியாக செய்ய வேண்டிய வேலைகளை உடனடியாக செய்து கொடுத்தார். தனது தந்தை இறந்திருந்த போதிலும் கண்ணீருடன் ஒஸ்மானியாவின் திறப்பு விழாவில் பங்கேற்றார்.
இவ்வாறு பல சேவைகளை அவர் செய்ததன் ஊடாக தமிழர்கள் அவரை சோனகத் துரையப்பா என்று கிண்டலடித்தனர். ஆனால் அவரின் நேர்மை, நன்றிமறவாத் தன்மை, பதிலுபகாரம் போன்றவற்றால் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மனதில் நாற்பத்தியைந்து ஆண்டுகளாகியும் மனதில் இடம்பிடித்துள்ளார்.
அடுத்தாக சி.எக்ஸ். மார்டின். இவரிடம் பொம்மைவெளி பிரதேசத்தில் வெள்ளம் தேங்கும் நிலையை மக்கள் சுட்டிக் காட்டிய போது உடனடியாக பல ட்ராக்டர் மண்ணைப் போட்டு அந்த பள்ளங்களை ஓரளவுக்கு நிரப்பிக் கொடுத்தார். முன்னர் அங்கு ஒன்றரை அடிக்கு வெள்ள நீர் தேங்கும் நிலமை காணப்பட்டது.
ஜி.ஜி. பொன்னம்பலம் அவர் சில விடயங்களில் டாக்கு போக்கு காட்டினாலும் ஹதீஜா கல்லூரி அமைப்பதற்கான முயற்சிகளில் ஒத்துழைப்பு வழங்கியதன் ஊடாக முஸ்லிம்களின் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இவர்களுக்குப் பின்னர் பெரிய ஒரு இடைவெளியின் பின்னர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முஸ்லிம்கள் இனச் சுத்திகரிப்பால் இடம்பெயர்ந்து அகதிகளாக புத்தளத்தில் வாழ்ந்த காலத்தில் அகதி மாணவர்களுக்கு சில உதவிகளை வழங்கினார். பின்னர் முஸ்லிம்களுக்கு காணித் தேவை இருப்பதை அறிந்து புத்தளம் தில்லையடியில் ஒரு காணியை வாங்கிக் கொடுத்தார். அது அப்போது தேவாபாத் என பெயரிடப் பட்டிருந்தது. அது தொடர்ந்து அவர் பெயரிலேயே இருக்க வேண்டும் என்பது தான் பதிலுபகாரமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகளை அறிந்து கொள்வதற்காக பவன் என்பவரை புத்தளத்தில் குடியிருத்தியிருந்தார். பவன் அநியாயமாகக் கொல்லப்பட்ட பின்னர் முஸ்லிம்களுடன் டகளஸுக்கு இருந்த தொடர்புகள் குறைந்துவிட்டன.
இருந்தாலும் இடம்பெயர்ந்தவர்களுக்கு காணி வாங்கிக் கொடுத்ததன் ஊடாக டக்லஸ் மக்கள் மனதில் நிற்கின்றார். தற்போதும் அவர அமைச்சராக இருக்கின்றார். அவரை அனுகினால் மீள்குடியேற்ற விடயத்தில் நிறைய உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
டக்லஸ் தேவானந்தாவுக்கு பின்னர் சுமார் இருபது வருட காலத்தின் பின்னர் தற்போதைய மேயர் ஆர்னோல்ட் பல்வேறு சேவைகளை யாழ்ப்பாண முஸ்லிம்களுக்குச் செய்து வருகின்றார். முஸ்லிம் வணக்கஸ்தலங்களுக்கான நிதியொதுக்கீடு, ஜின்னா மைதானத்தை மண்ணிட்டு சமப்படுத்தல், சின்ன குளம், பெரிய குளம் என்பவற்றை தூர்வாரி செப்பனிடுவதற்கான நிதியொதுக்கீடு என்பவற்றின் மூலம் அல்பிரட் துரையப்பாவுக்கு பின்னர் அடுத்த நிலையில் உள்ளார்.
இன்னும் இவருக்கு காலங்களும் நேரங்களும் இருப்பதால் இவர் எத்தனையோ வேலைத்திட்டங்களை சோனகத் தெருவில் முன்னெடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் இவரைப் போன்றவர்கள் மாகாணசபை முதலமைச்சராக வந்தால் தான் அந்த சபை ஒரு செயற்பாடு மிக்கதாக திகழும். மேலும் இவர் போன்ற கொள்கையுடையவர்கள் தான் மதங்களுக்கு அப்பால் மனிதர்களை மதிக்கும் பண்பைப் பெற்றிருப்பர்.
very good remembrance, its everyone's duty to support these good personals to continue in people service
ReplyDeleteஇரண்டு மாதத்திற்குள் நான் கொழும்பில் ஒரு தங்கும் இடத்தில் இருந்தபோது ஆறு முஸ்லிம் நபர்கள் ஒன்று சேரப் பேசிக் கொண்டு இருந்தார்கள். கதையின் இடையில் ஒருவர் "யாரடா மச்சான் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு அதிகமான சேவை செய்த தமிழ்த் தலைவரகள் என்று கேட்டார் அதற்கு இப்படியான பதில் வரக்கூடிய விதமாகத்தான் அங்கே இருந்தவரகள் கலந்துரையாடினர். அரசியல்வாதிகளைப் பொறுத்தளவில் பலருடைய பெயர்களும் சொல்லப்பட்டன. ஆனால் பொது வாழ்க்கையில் உள்ள பல தமிழ்ப் பெரியார்களின் பெயர்களும் அங்கு நன்முறையில் உச்சரிக்கப்பட்டன. புத்தளத்திலும் மன்னாரிலும் ஏன் யாழிலும் வாழ்ந்த; வாழும் பல தமிழ்ப் பெரியார்கள் இன்றும் கூட யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு தனிப்பட்டரீதியிலும் சமூகரீதியிலும் பலவேறு வகையான உதவிகளைப் புரிந்து வந்தவண்ணமே இருக்கின்றனர். இங்கே குறிப்பிடப்பட்ட அல்பிரட் துரையப்பா, மாட்டின், பொன்னம்பலம், டக்லஸ அவரகளோடு தற்போதைய நகரபிதா ஆர்னோல்ட் அவரகளைப்பற்றியும் அவரகளது சேவைகளைப் பற்றியும் மிக நல்ல முறையில் உயர்வாக அவரகள் பிரஸ்தாபித்துப் பேசிக் கொண்டார்கள். அவரகளுடைய இருக்கைகள் எனக்கு மிக அருகிலேயே இருந்தமையால் ஆர்னோல்ட் அவரகளைப்பற்றி விசாரித்தேன். அவரகள் என்னிடம் சொன்னார்கள் "இந்தக் காலத்தில் ஒவ்வொரு தமிழ்த் தலைவரகளும் தம் வாக்கிற்காக தம் இனத்தை மாத்திரமே கவனிக்கும் போது ஆர்னோலட் ஐயா முஸ்லிம்களுக்காகவும் தன்னலமிக்க பல சேவைகளையும் ஆற்றி வருகின்றார் என்றவாறு பேசிக் கொண்டனர். இதுவரை ஏனைய உறுப்பினர்கள் பெரிய தடைகள் எதனையும் போடவில்லையாயினும் சற்று முன்னர் மாகாண சபை உயிர்ப்புடன் இருந்த காலத்திலோ அன்றேல் யாழ்ப்பாணத் தொகுதியினை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரோ முஸ்லிம்களுக்கு குறிப்பிடக்கூடிய உதவிகள் எதனையும் செய்யவில்லை என்பதைத்தான் அவரகள் பேச்சிலிருந்து அறியக்கூடியதாக இருந்தது.
ReplyDeleteNobody can’t replace late Mayor Alfred Thangarasa Duraiyapah
ReplyDelete