தற்போது பரவும் கொரோனா, அதீத வீரியம் கொண்டது - விரைந்து பரவும் தன்மையும் உள்ளடக்கியது
(ஆர்.யசி)
நாட்டில் இரண்டாம் அலையாக உருவாகியுள்ள கொவிட் -19 வைரஸ் தொற்றின் வீரியம் அதிகம் என்பதால் மிக வேகமாக சமூகத்தில் பரவும் என தொற்றுநோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிகை விடுத்துள்ளார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றம் பெற்றுள்ளதாக தொடர்சியாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் நாட்டின் நிலைமை குறித்து தெளிவுபடுத்துகையில் அவர் இவற்றை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டில் அதிகளவில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதனால் அது சமூக பரவல் எனவும் கருத வேண்டாம். இது அனைத்துமே பரந்த கொத்தணியாக கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை மினுவாங்கொடை கொத்தணியே பெரிய கொத்தணியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, அதன் அடுத்த உப கொத்தணியாக பேலியகொடை கொத்தணியை அவதானிக்கிறோம். எனவே அனைத்துமே ஒரே தொடர்பை கொண்டதாகும். எனினும் பரிசோதனைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கையாண்டு வருகின்றோம்.
கொத்தணியாக வைரஸ் பரவல் அடையாளம் காணப்பட்டாலும் இது சமூக பரவலாகும் நிலைமை உள்ளது, அதற்கு மக்களின் செயற்பாடுகள் காரணமாகும். சமூகத்தில் மக்களின் செயற்பாடுகள் முழுமையாக சுகாதார வலிகாட்டகளை பின்பற்றும் விதமாக அமைய வேண்டும். கூட்டம் கூடுவது, பொது நிகழ்வுகளை கூட்டுவது என அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டும்.
மக்கள் அவனதானமாக இல்லாது போனால் சமூக பரவல் அதிகரிக்கும். அதேபோல் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாகும். இந்த வைரஸ் செயற்படும் விதம் மாறுபட்டதாகும். விரைந்து பரவும் தன்மை கொண்டுள்ளது.
எனவேதான் அதிகளவில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இன்று நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலமாக கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறும் அச்சுறுத்தல் உள்ளது.
எனினும் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நிலையில் நாம் உள்ளோம். எனவே மக்கள் பொது நிகழ்வுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள், அவசியமான நிகழ்வுகள் என்றால் குறைந்த நபர்களுடன் நிகழ்வுகளை நடத்த முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் அதிக கூட்டமான, சன நெரிசலான இடங்கள் என்றால் வைரஸ் மீண்டும் பரவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்றார்.
Post a Comment