கொரோனா கொத்தணி உருவாகக்கூடிய, இடங்கள் தொடர்பில் அவதானம்: ஜனாதிபதி வலியுறுத்து
மருத்துவத் துறையிலும் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளக் கூடிய புதிய செயலி (APP) மேல் மாகாண சுகாதார சேவைகள் அலுவலகத்தினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு அறிமுகம்செய்து வைக்கப்பட்டது.
கொவிட் நோய்த் தொற்றாளர்கள், தொடர்புடையவர்கள், தனிமைப்படுத்தல், பீசீஆர் பரிசோதனை சேவைகள், கண்காணிப்பு, தீர்மானங்களை மேற்கொள்தல், நோய்த்தொற்றாளர்களுக்கு கிட்டிய பிரதேசங்களுடன் தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட தேவையான பல தரவுகளை இந்த புதிய செயலியின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் தினமும் சந்திக்கும் கொவிட் ஒழிப்பு செயலணி இன்று முற்பகல் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்தில் மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி தம்மிக ஜயலத் தலைமையிலான குழுவினால் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய அபிவிருத்திகள் தொடர்பான தகவல்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிந்துகொள்ளக் கூடிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளின் எண்ணிக்கை 350 ஆகும். அவற்றில் 28 பிரிவுகளில் கொவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுவதை தவிர்ப்பதற்கு முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக செயலணி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்கு முதலாவது, இரண்டாவது தொற்றாளர்கள் உட்பட 41000 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் எழுமாறாக பீ சீ ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பல சந்தர்ப்பங்களில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கு காரணமான விடயங்களை சரியாக அறிந்து மீண்டும் அவ்வாறு இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது. கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் தொடர்ச்சியாக எழுமாறான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எதிர்பாராத விதமாக பேலியகொடை மீன் சந்தை மற்றும் மினுவன்கொடையை அண்டிய பிரதேசங்களில் கொவிட் கொத்தணி உருவானது.
பொருட்கள் பகிர்ந்தளிக்கும் வலயமைப்பின் ஊடாக வைரஸ் ஏனைய பிரதேசங்களுக்கும் பரவுவதை தவிர்ப்பதற்கு அனைத்து தரப்பினரதும் உதவி தேவையானதாகும். சுகாதார துறையின் வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவது அனைவரினதும் சமூக பொறுப்பாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தம்புள்ளை உள்ளிட்ட பொருளாதார மத்திய நிலையங்களை அண்மித்த பிரதேசங்களில் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கொவிட் கொத்தணி உருவாகக் கூடிய இடங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்று நள்ல்லிரவு முதல் மேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். எந்தவொரு பொலிஸ் நிலையத்தினாலும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது. எனினும் மிகவும் அவசரமான சந்தர்ப்பங்களின் போது அதற்கு இடமளிக்கப்படும்.
இடர் வலயங்களுக்குள் மக்கள் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும். மேல் மாகாணத்தில் திருமணங்கள் மற்றும் சமய நிகழ்வுகள் உள்ளிட்ட மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
Post a Comment