இவ்வளவுதான் வாழ்க்கை
சகோதரர் ரப்பானி சவுதி அரேபியாவில் உள்ள ரியாதில் வீட்டு டிரைவராக பணிபுரிந்தவர் 24-10-2020 அன்று காலை வபாத்தானார்கள். இன்று 27-10-2020 லுஹர் தொழுகைக்கு பிறகு சவுதி ரியாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது அவரின் மறுமை வாழ்விறகாக துவா செய்யவும்
உனது மரணத்திற்கு யாரெல்லாம் வருவார்கள்? " என்னுடைய புத்தகம் வெளியிட்டு ஒருவாரத்தில் நடந்த இந்த நிகழ்வில் , அந்த தலைப்புதான் ஞாபகத்திற்கு வந்தது , ரியாத்தில் 2 நாட்களுக்கு முன்பு இறந்த, எனது ஊரைச் சார்ந்த சகோதரர் ரப்பானி அவர்களின் பிணத்தை சுமந்து செல்லும், அந்த ஆம்புலன்சை ரியாத் அசீசியாவின் பாலைவனச் சாலையில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது.
எப்படி கொண்டாட்டத்துடன் ஊருக்கு சென்றிருக்க வேண்டியவர்? 🙁
ஊருக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே போன் செய்து சொல்லி , பத்தாவில் வந்து குடும்பத்திற்கு தேவையான சாக்லேட் பாதாம் அத்தர் சோப்பு விளையாட்டு பொம்மைகள் என்று தேவையானவற்றை வாங்கி வந்து ,
வார விடுமுறைக்கு முந்தைய இரவில் நண்பர்கள் புடை சூழ பெட்டி கட்டி - நண்பர்கள் அவரவர் வீட்டுக்கு கொடுக்க வேண்டிய பார்சல்களை எல்லாம் எடுத்து வைத்து - சில நண்பர்களின் பார்சலை , எடை அதிகமானதால் வாங்க முடியவில்லை என்கிற மனக்கசப்பு நீங்க, தான் வாங்கி வந்ததை எடுத்து வைத்துவிட்டு, நண்பர்களின் பார்சலை பெட்டியில் திணித்து, மெயின் லக்கேஜ் ஹேண்ட் லக்கேஜ் என்று எடைபோட்டு ,
நண்பர்களின் காரில் விமான நிலையம் சென்று இறங்கி, ஏர்போர்ட்டுக்கு வருவதை குடும்பத்தினருக்கு போன் செய்து சொல்லி ,
4 மணி நேர தொலைவை குழந்தைகளின் குடும்பத்தின் முகம் காணப்போகிறோம் என்கிற கனவுடன்,
நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்ம ஊர் எப்படியிருக்கும்? என்னவெல்லாம் மாறியிருக்கும் ? தெருமுனையில் உள்ள வேப்ப மரத்தை வெட்டி விட்டார்களே , இப்போது மரமில்லாமல் நம் தெரு எப்படியிருக்கும் ? என்றெல்லாம் கற்பனை செய்து ,
விமான நிலையத்தின் வெளியே குழந்தைகள் உறவினர்கள் கைகாட்டியபடி , மண்ணின் வாசனை உணர்ந்து , மரத்தின் வாசனை உணர்ந்து,
மழை நீர் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருக்கும் ஒரு கார்காலத்தில் ஊருக்கு வந்திறங்கியிருக்க வேண்டியவர் - அவர் பிணமான காரை நாங்கள் பின் தொடரும் காலமாய் மாறிப்போகுமென அவர் நினைத்திருக்கவே மாட்டார். 🙁
அமைதியாய் அந்த ஆம்புலன்சில் உறங்கியபடி ரியாத் பாலைவனத்தில் அவர் சென்று கொண்டிருக்கிறார். உலக வாழ்வின் பைனல் எக்ஸிட்.
உறவினர்கள் முகம் பார்க்க முடியாமல் எங்கோ ஓர் தேசத்தில் கனவாய் மறைந்து விட்டார்.
பிழைக்க வந்த இடத்தில் அநாதையாய் இறந்து, யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டுவிடக்கூடாது என்று அவருடன் வேலை பார்த்த மேலப்பாளைய நண்பர்கள் மற்றும் எஸ்டிபிஐ நண்பர்கள் எல்லாம் இணைந்து அவரை அசீசியா பள்ளியில் வைத்து குளிப்பாட்டி, அங்குள் மைய வாடியில் புதைத்தோம்.
அவரது முகத்தை நண்பர் திறந்து காட்ட முற்பட்டபோது நான் தடுத்திருக்கவேண்டும். அவ்வளவு வலி. எனக்கு அவரது குடும்பம் அந்த முகத்தை அந்த கோலத்தில் பார்த்தால் எவ்வளவு வேதனையடையக்கூடும் என்று நினைத்தேன். அவரது முகத்தை புகைப்படம் எடுக்க நினைத்தேன். ஆனால் அவரது குடும்பத்தினர் அந்த முகத்தை பார்த்தால் வேதனையடையக்கூடும் - சவுதிக்கு அனுப்பும்போது மனைவி குழந்தைகள் சூழ எவ்வளவு ஒரு அழகான நினைவுகளாக அவரது முகத்தை ஞாபகத்தில் வைத்திருப்பார்கள் ?இப்போது இந்த முகம் , இறந்து இரண்டு நாட்கள் கடந்து வாடிய இந்த முகம் , தவிர்க்க நினைத்தேன் , ஆனாலும் சில நண்பர்கள் வேறொரு பதிவில் பகிர்ந்திருக்கின்றனர்.
இறந்து போனவரின் கஃபீல் ( முதலாளி ) மையவாடிக்கு வந்து - இறந்தவரின் குழியில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்தார். மிகவும் நல்ல மனிதர். காரில் தனக்கு பக்கத்தில் சில மீட்டர் இடைவெளியில் உயிரோடு உட்கார்ந்திருந்தவர் இப்போது குழிக்குள் மரக்கட்டையாக இருக்கிறாரே என்கிற தொனியில் , குழிக்குள் அவரது பாடியை இறக்கும்போது அவர் வெறுமையாய் உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தார்.
அவரது கபர்ஸ்தானில் மண் அள்ளிப்போடும் போது அவ்வளவு இறுக்கமாக இருந்தது மனம். என்னதான் மரணம் பற்றி சமாதானம் சொல்லிக்கொண்டாலும், அந்த நிகழ்வுகள் கண்ணுக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும்போது, ஒருவித வலி அந்த வெயிலின் சூட்டைத் தாண்டியும் உணர வைத்தது.
அங்குள்ள மையவாடியில் வரிசையாக குழி தோண்டி வைக்கப்பட்டிருக்கிறது. கொஞ்சம் எட்டிப்பார்த்தேன் 6 அடியில் சிறிய பள்ளம் அவ்வளவுதான் , எந்த வசதியும் எதிர்பார்க்க முடியாது. நீ எவ்வளவு ஏக்கர் வைத்திருந்தாலும் இடம் வாங்கிப் போட்டிருந்தாலும் அதுதான் உனக்கு சொந்தமாகப் போகின்ற இடம்.
சொந்தமாக ஒரு வீடு கட்டி , விசா முடிந்தவுடன் ஊருக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தார் , ஆனால் ரியாத் பாலைவனத்தில் ஒரு ஆறடியைத்தான் அவரால் சொந்தமாக்க முடிந்திருக்கிறது.
நான் அந்த மையவாடியை நிறைய குழிகளை கடந்து திரும்பி வந்து கொண்டிருக்கின்றேன்.
சின்ன பிள்ளைகளின் குழிகள் , பிறந்த குழந்தைகளின் குழிகள் எல்லாம் மனதை ஏதோ செய்தது. எல்லாருமே வாழலாம் என்று வந்தவர்கள்தான்.
Gnaniyar zubir
மரணத்திடம் மண்டியிட்டே ஆகவேண்டும் என்பதை மனிதன் மறந்துவிடுகிறான்.
ReplyDelete