Header Ads



சபாநாயகர் கையொப்பமிட்டதும் 20 சட்டமாகும், 4 வருடங்களுக்கு அரசு அதற்கேற்ப செயற்படும்


அரசாங்கம் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டதால் 2/3 பெரும்பான்மையுடன் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு அரசாங்கம் அதற்கேற்பவே செயற்படும் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாடு அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது. இங்கு மேலும் தெரிவித்த அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்,

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்து சபாநாயகர் அதற்கு கையொப்பமிடும் விடயம் இடம்பெறும். இந்த வாரத்தில் அதில் அவர் கையொப்பமிட்டதும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் சட்டமாக்கப்படும்.

அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை. உச்ச நீதிமன்றம் முன்வைத்த நான்கு திருத்தங்கள் பாராளுமன்றத்தில் குழுநிலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் எந்தவொரு அழுத்தமுமின்றி அமைச்சரவை முன்வைத்த மூன்று திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அரசாங்கத்தின் ஒற்றுமை தெளிவாகப் புலப்படுகிறது. அதுதொடர்பில் பல்வேறு பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்திலுள்ள சிலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.இறுதியில் அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலுள்ள அனைவரும் ஒரே சிந்தனையில் செயற்பட்டு கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு 2/3 பெரும்பான்மையுடன் 20 வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு அரசாங்கம் அதற்கேற்பவே செயற்படும்.

கொரோனா வைரஸ் தடுப்பு, அரசியலமைப்பை தயாரிப்பது, ஜெனீவா எமக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு நாம் முகங்கொடுக்கவேண்டியுள்ளது. நாம் நாடு என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்து இதற்கு முகங்கொடுப்போம்.

பலதரப்புக்களாலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பே. எனினும், அதன்மூலம் அரசாங்கம் பலம்பெற்றதே தவிர பலவீனமடையவில்லை.

எதிர்க்கட்சியே பலவீனமடைந்துள்ளது. எதிர்க்கட்சியில் சில உறுப்பினர்களும் கூட அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்ததை இங்கு குறிப்பிடவேண்டும்.

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் மக்களுக்கு பல நன்மைகளை கொண்டுவந்துள்ளது. அதில் முக்கியமாக நீதிமன்றத்துறையில் மக்களுக்கு கிடைத்துள்ள நிவாரணங்களை குறிப்பிடலாம். உச்சநீதிமன்றத்தின் 4,000 வழக்குகளும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4,000 வழங்குகளும் உள்ளன. பல வருடங்களாக அதுதொடர்பான சிக்கல்கள் தொடர்கின்றன. மாதக் கணக்கில் வழக்குகள் ஒத்திப்போடப்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டுமென்றால் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.

1978 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை. எனினும் வழக்குகள் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளன. அதனால் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் உச்ச நீதிமன்றங்களின் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

1 comment:

  1. Why should the Govt. follow the 20th Amendment for the next 4 years? Does it mean the Govt. is going to forget about the New Constitution which was promised within One year?

    ReplyDelete

Powered by Blogger.