ஜனாதிபதி ஊடகப்பிரிவு போன்று, போலி ஊரடங்கு செய்தி வெளியிட்ட 18 வயது இளைஞன் கைது
(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் படவுள்ளதாக குறிப்பிட்டு , ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்படும் அறிக்கையை போன்று போலி அறிக்கையை தயாரித்து வெளியிட்ட இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மிட்டியாகொட பகுதியில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞனுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை , பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கணிணி குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்படும் அறிக்கையை போன்று போலி அறிக்கையை தயாரித்து , அதில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடுபூராகவும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப் படவுள்ளதாக குறிப்பிட்டு செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. இதன்போது குறித்த அறிக்கை ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது போன்று காண்பிப்பதற்காக ஊடகமொன்றின் இலட்சினையும் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்தவிவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் மிட்டியாகொட பகுதியில் வைத்து சந்தேக நபரான இளைஞனை கைது செய்துள்ளனர். 18 வயதுடைய குறித்த இளைஞனே போலியான இந்த செய்தியை வெளியிட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேக நபரான இளைஞனுக்கு எதிராக தண்டனைச் சட்டக்கோவை , பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் கணிணி குற்றங்கள் தொடர்பான சட்டத்தின் கீழும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய இதுபோன்ற போலிச் செய்திகளை நம்புவதையும் , அவற்றை பகிர்வதையும் தவித்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இதேவேளை இதுபோன்ற போலிச் செய்திகளை தயாரித்து வெளியிடும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment