இலங்கையில் தேடப்பட்ட, கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது
சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பகுதியில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தேடப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கான்ஸ்டபிள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராமேஷ்வரம் – தனுஷ்கோடியில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமிழகக் கடலோர காவற்படையினரால் இராமேஸ்வரத்தின் தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், பிரவீன் குமார பண்டார எனும் பெயரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேகநபருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் தொடர்பு காணப்படுகின்றதா எனும் கோணத்தில் இந்திய மத்திய மாநில உளவுப் பிரிவு மற்றும் தமிழகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஹெய்யந்துடுவ பகுதியில் கடந்த 02 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது 23 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
மீகஹவத்த பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
தளபாட வேலைத்தளமொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பில் முதலில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவரைத் தவிர ஏற்கனவே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரின் ஊடாக இந்த ஹெரோயின் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்த நிலையில், குறித்த கான்ஸ்டபிள் தலைமறைவாகியிருந்தார்.
இந்த நிலையில், கான்ஸ்டபிள் கடல் வழியாக மன்னார் – பேசாலையிலிருந்து இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நாட்டிற்கு அழைத்துவந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திய பின்னர் பொலிஸில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment