பசில் ராஜபக்ஷ திறமையான ஒரு நிர்வாகி, அவர் அமைச்சராகுவதில் எந்த எதிர்ப்பும் இல்லை
ஹட்டன் டிக்கோயா நகர சபை மண்டபத்தில் 2019 ஆம் ஆண்டு தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வை கிழக்கு மாகாணத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் கல்வி அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வு மன்றத்தின் செயலாளர் முன்சீர் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இலியாஸ் மேற்கொண்டிருந்தார். பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், இந்த நாட்டில் வடகிழக்கு தமிழர்கள் மலையக தமிழர்கள் என இரண்டு விதமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினை வெவ்வேறானது. வடகிழக்கு மக்களுடைய பிரச்சினை வேறு மலையக தமிழர்களுடைய பிரச்சினை வேறு.
எனவே இவை இரண்டையும் தனித்தனியாக கையாள வேண்டும். மலையக மக்களுடைய பிரச்சினைகளை அடையாளப்படுத்த வேண்டுமாக இருந்தால் அவர்களுடைய பிரதிநிதித்துவம் கட்டாயமானதாகும்.இதனை அரசாங்கம் புரிந்து கொண்டு மலையக மக்களின் பிரதிநிதி ஒருவரையும் நியமிக்க வேண்டும்.
இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பசில் ராஜபக்ச அமைச்சராக வந்தாலும் அல்லது வேறு ஒரு இரட்டை பிரஜா உரிமை உள்ளவர் அமைச்சராக இருந்தாலும் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை.எங்களுடைய நோக்கம் இந்த நாட்டை அபிவிருத்தி செய்து அனைத்து மக்களும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய ஒரு நிலைமையை அரசாங்கம் உருவாக்குமானால் அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம்.
இன்று புதிதாக கொண்டுவரப்பட்டுகின்ற 20 ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் இரட்டை பிரஜா உரிமை தொடர்பாக பேசப்படுகின்றது. என்னை பொறுத்த அளவில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக திறமையானவர்களை இணைத்துக் கொள்ள வேண்டும். நாம் திறமையானவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு இந்த நாட்டை அபிவிருத்தி செய்யமுடியாது.
என்னை பொறுத்த அளவில் பசில் ராஜபக்ஷ திறமையான ஒரு நிர்வாகி அவர் ஒரு அமைச்சராக வருவாராக இருந்தால் அதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. காரணம் அவர் திறமையாக செயற்படக்கூடிய ஒரு நிர்வாகி கடந்த காலத்தில் அதனை அவர் நிரூபித்திருக்கின்றார்.
எனவே இந்த நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டுமாக இருந்தால் திறமையானவர்களை ஒன்றிணைத்து நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும். இன்று உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொவிட் தொற்று காரணமாக எல்லா நாடுகளிலும் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே இருக்கின்றது.அதற்காக அனைவரையும் இணைத்துக் கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-மலையக நிருபர் கிரிஷாந்தன்-
Post a Comment