Header Ads



புதிய அமைச்சர்கள் 79 பேருக்கு தலா 3 கோடி ரூபா பெறுமதியான தீர்வை வரியற்ற வாகனங்கள்



அரிசி, தேங்காய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், புதிய அமைச்சர்கள் 79 பேருக்கு தலா 3 கோடி ரூபா பெறுமதியான தீர்வை வரியற்ற வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கத் தயாராவது தொடர்பாக விவாதிக்கப்படுகிறது.


இது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் எழுதியுள்ள ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவங்ஸ தேரர், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள தருணத்தில் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது சிறந்ததா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தேங்காயை 100 ரூபா கொடுத்து வாங்க முடியாத மக்கள், பாதித் தேங்காயை வாங்கிச் செல்வதாக அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரிசி, பருப்பு போன்ற உலர் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஜனாதிபதி அறியாத விடயமல்ல என்றும் பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக மக்களுக்கு குறுகிய கால நிவாரணமளிக்க முடியாதென அரசாங்கத்தின் சில அமைச்சரவை அமைச்சர்கள் கூறியுள்ளதாகவும் புதுகல ஜினவங்ஸ தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


கொரோனா நிலைமைக்கு மத்தியில் சுமார் 3 இலட்சம் பேர் தொழிலை இழந்துள்ள அதேவேளை, பல தொழிற்சாலைகள் ஊழியர்களுக்கு பாதி சம்பளத்தை வழங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதென தேரர் தெரிவித்துள்ளார்.


இத்தகைய பின்புலத்தில் உறுப்பினர்களின் சொகுசை விட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பயணிக்குமாறு ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதியிடம் கோருகின்றது.


இந்த வருடம், உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியையேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களுக்கு மக்கள் சார்பாக ஏதேனுமொரு நிவாரணத்தை திட்டமிடும் இயலுமை ஏற்படும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


இதேவேளை, தற்போது வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி கூறினார்.

No comments

Powered by Blogger.