Header Ads



சில முக்கியஸ்தர்களுடன் மாத்திரம், ஊடகங்களுக்கு அனுமதியின்றி நடந்த ஐ.தே.கவின் 74 ஆவது சம்மேளனம்


(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் 74 ஆவது சம்மேளனம் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை சிறிகொத்தாவில் நடைபெற்றது. மத வழிபாடுகள் மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களை நினைவு கூரல் என்பவற்றுடன் எளிமையான நிகழ்வே ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வஜிர அபேவர்தன , ருவன் விஜேவர்தன , அர்ஜூன ரணதுங்க , ஜோன் அமரதுங்க , தயா கமகே மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரும் ஏனைய சில முக்கியஸ்தர்கள் மாத்திரமே பங்குபற்றியிருந்தனர். இன்று இடம்பெற்ற நிகழ்விற்கு ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நிகழ்வுகள் நிறைவடைந்ததன் பின்னர் ஊடகவியலாளர்களால் எழுப்பப்ட்ட கேள்விகளுக்கு பதிலளித்த முள்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன கூறுகையில் , மத வழிபாடுகளுக்கு முக்கியத்துவமளித்து இன்றைய வைபம் இடம்பெற்றது. கட்சியின் எதிர்காலம் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் தேர்தல் தோல்வி தாக்கம் செலுத்தாது. ஐக்கிய தேசிய கட்சியின் மேம்பாட்டுக்கான தொடர்ந்தும் செயற்பட நான் தயாராகவுள்ளேன் என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில் , கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்பதற்கு நான் தயாராகவுள்ளேன். தற்போது கட்சியை முழுமையாக கட்டியெழுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்கான பணிகளை ஆற்ற நான் தயாராகவுள்ளேன் என்றார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவிக்கையில் , கட்சி தீர்மானிக்குமானால் தலைமைத்துவத்தை ஏற்க நான் தயாராகவுள்ளேன். தலைமைத்துவம் பற்றி எனக்கு சிறந்த அனுபவம் உள்ளது. எனினும் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய குறுகிய காலத்திற்கு கட்சி தலைமைத்துவத்தை ஏற்று செயற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என்றார். 

No comments

Powered by Blogger.