Header Ads



20 ஆவது திருத்ததில் சர்வாதிகார, ஆட்சிக்கான பாதையே அமைக்கப்பட்டுள்ளது - இம்தியாஸ்


(செ.தேன்மொழி)


நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதும் சர்வாதிகார பண்புகளைக் கொண்டதுமான அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர்மாகார் தெரிவித்தார்.


அரசாங்கம் முறையற்று செயற்படுவதால் சர்வதேசத்தின் மத்தியில் நாட்டுக்கு தலைக்குனிவு ஏற்படுவதுடன் முதலீடுகளுக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இம்தியாஸ் பாகீர்மாகார் மேலும் தெரிவித்தார்.


எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று -09- புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,


20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்திக்கும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. எந்த கட்சி பேதமும் இன்றி அனைவரும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள இந்த அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.


நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் போதிய வருமானம் இன்றி பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் இதனை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் முயற்சிக்காது. எதற்காக அவசரமாக புதியதொரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு முயற்சிக்கின்றது. அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டுவருவதில் தவறு இல்லை. ஆனால் கொண்டுவரப்படும் திருத்தங்கள் தொடர்பில் நாட்டிலுள்ள அனைவரும் தெளிவை ஏற்படுத்திக் கொண்டு கருத்தை தெரிவிக்க சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.


20 ஆவது திருத்தத்திற்கு குறிப்பிட்டவொரு அமைச்சர்களை மாத்திரம் கொண்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். 20 நிறைவேற்றப்பட்டால் பிரதமர் பெயரளவிலான நிர்வாகியாகவே காணப்படுவார். குறுகியகால அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம்.


19 இற்கு ஆதரவளித்தவர்கள் எவ்வாறு 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் ஆதரவளிக்க போகின்றார்கள். அவர்களுக்கென்று கொள்கைதிட்டமொன்று இல்லையா? 17 மற்றும் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வந்ததன் பின்னர் நாட்டில் அனைத்து தேர்தல்களும் முறையாக இடம்பெற்றன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்ததில் சர்வாதிகார ஆட்சிக்கான பாதையே அமைக்கப்பட்டுள்ளது.


புதிய அரசியலமைப்பு திருத்தமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கத்திற்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்திருந்தாலும் ,  தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், சர்வாதிகார பண்புகளை கொண்ட அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவருவதற்கு ஆதரவளிக்கவில்லை.


19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் குறைப்பாடுகள் காணப்பட்டால் அவற்றில் திருத்தங்களை முன்னெடுக்க முடியும். எதிர்கால சந்ததியினருக்கு ஜனநாயக பண்புமிக்க நாடொன்றை ஒப்படைக்க போகின்றோமா? அல்லது சர்வாதிகார பண்புகளைக் கொண்ட ஆட்சியை வழங்கப்போகின்றோமா? என்பது தொடர்பில் சிந்தித்தே 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

1 comment:

  1. INTERDICT PANNAPATTA POLISKAARANUDAIYA
    SHEITHIKALAI, YAARUM KANAKKEDUPPATHARKU
    ILLAI. PAAAAVAM IVAR.!!!!

    ReplyDelete

Powered by Blogger.