Header Ads



100 மணித்தியால போராட்டம் - கப்பலின் தீயைக் கட்டுப்படுத்தியமை விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சம் - விமானப்பட

(எம்.மனோசித்ரா)

இலங்கை கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இலங்கை துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அனைவரது ஒத்துழைப்புடனும் விமானப்படையும் இணைந்து சுமார் 100 மணித்தியால போராட்டத்தில் நியு டயமன் கப்பலின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை விமானப்படை வரலாற்றில் முக்கிய அம்சமாகும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விமானப்படை ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சங்கமன்கண்டி கரையிலிருந்து 38 கடல் மைல் தூரத்தில் பனாமா அரச்சிற்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுமங்கல டயஸினுடைய ஆலோசனையின் கீழ் விமானப்படை செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைரஸ் மார்ஷல் ரவி ஜயசிங்கவினுடைய வழிகாட்டலின் கீழ் விமானப்படை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய செயற்பாடு இதுவாகும்.

இது வரையில் (நேற்று வரை) தீப்பற்றிய கப்பலுக்கு 176 தடவைகளில் 440 000 லீற்றர் நீர் ஊற்றப்பட்டுள்ளதோடு 4500 கிலோ உலர் இரசாயன பதார்த்தம் தூவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு இலங்கை கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இந்திய கடற்படை மற்றும் கடற்சூழல் பாதுகாப்பு திணைக்களம் , இலங்கை துறைமுக அதிகார சபை உள்ளிட்ட அனைவரதும் ஒத்துழைப்பும் பாரியளவில் உதவியாக அமைந்தது.

கடந்த 7 தினங்களாக இலங்கை விமானப்படைக்கு சொந்தமான கண்காணிப்பு விமானங்கள் , உலங்கு வானூர்திகள் என்பன சுமார் 100 மணித்தியாலங்கள் இந்த தீயணைப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் விமானப்படை நன்றி தெரிவித்துக் கொள்கிறது. 

No comments

Powered by Blogger.