ரணில் விக்ரமசிங்கவும் அவரை சுற்றி இருந்த சகாக்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் அழிவுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
வலுவான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் இருந்து தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கும்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்களே நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சி.
அரசாங்கம் மேற்கொள்ளும் சிறந்த பணிகளுக்கு உதவுவோம். தவறான வேலைகளை கடுமையாக எதிர்ப்போம்.
தற்போது எமக்கு சிறந்த எதிர்காலம் இருக்கின்றது. எமக்கு முலுகெலும்புள்ள வலுவான தலைவர் இருக்கின்றார்.
எதிர்காலத்தில் எமது கட்சியின் தலைவரே நாட்டின் தலைவராக வருவார் என்பது உறுதியானது.
ஐக்கிய தேசியக் கட்சி அழிந்து விட்டது. ரணில் விக்ரமசிங்கவும் அவரை சுற்றி இருப்பவர்களுமே இதற்கு காரணம்.
புதிய இளம் தலைவரிடம் கட்சியை ஒப்படைப்பதாக கூறினாலும் ரணில் விக்ரமசிங்கவே தொடர்ந்தும் தலைவராக இருப்பார்.
அனைத்து தேர்தல்களிலும் தோல்வியடைந்த பின்னர் இளம் தலைவரிடம் கட்சியை ஒப்படைப்பதாக அவர் கூறுவது வழக்கம்.
முழு நாட்டிலும் அவர் கேலிக்குரியவராக மாறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க கூறுவதை யாரும் தற்போது பொருட்படுத்துவதில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி அழிந்து கரைந்து போகும் வரை அதன் தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருப்பார்.
இதனால், கட்சியில் இருக்கும் இளைஞர்களை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
எமது கட்சியுடன் இருந்தால், அவர்களுக்கு எதிர்காலம் இருக்கும். தற்போது எமது கட்சிக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment