ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை, ஒப்படைப்பதற்கு UNP செயற்குழு தீர்மானம்
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, தேசிய ரீதியில் மக்களின் தேவைப்பாடுகளைப் புரிந்துகொண்ட ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைப்பதற்குக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கிறது.
2020 ஆகஸ்ட் 5 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மிகப்பாரிய பின்னடைவிற்கு முகங்கொடுக்க நேர்ந்ததையடுத்து கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து கட்சிக்குள் வலுத்தது. எனினும் கட்சியின் தலைவர் பதவியைத் துறப்பதில் ரணில் விக்கிரமசிங்க நாட்டம் காட்டாத நிலையில், தொடர்ந்து இரண்டு செயற்குழுக்கூட்டங்களில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்நிலையில் இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை -14- கட்சித்தலைமையகமான சிறிகொத்தாவில் கூடியது. இக்கூட்டத்தின்போது நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது கட்சிக்குப் புதிய தலைவரொருவரை நியமிப்பது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படும் அபிப்பிராயங்கள், கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, அதற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று பலராலும் வலியுறுத்தப்பட்டது.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கவிரும்பும் அனைவரும் அதற்கு முன்வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் விருப்பிற்கு முக்கியத்துவமளித்து, தேசிய ரீதியான தேவைப்பாடுகளைப் புரிந்துகொண்ட ஒரு இளம் தலைவரைத் தெரிவுசெய்வதற்கு செயற்குழுக்கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
ஆகவே கட்சியின் தலைமைத்துவப் பதவியைப் பொறுப்பேற்றுக்கொள்ளும் தகுதியை உடையவர்கள் என்ற அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட்டிருப்பவர்கள் மற்றும் சுயவிருப்பின் அடிப்படையில் முன்வந்தவர்களுக்கு மத்தியில் நாட்டிற்கும் கட்சிக்கும் பொருத்தமான இளம் தலைவரொருவரைத் தெரிவுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன் முதற்கட்டமாக ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய தலைவர்களுக்குப் புதிய பொறுப்புக்களை ஒப்படைப்பதன் ஊடாக அவற்றைத் திறம்படக் கையாண்டு முறையான நிர்வாகத்தை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்ற, தமது பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றுகின்ற, கட்சி ஆதரவாளர்களுடன் நெருக்கிச்செயற்பட்டு அவர்களின் மனங்களை வென்றெடுக்கின்ற ஒரு இளம் தலைவரிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
காலம்கடந்த ஞானம்.
ReplyDeleteஇனி எழும்புமா யூஎன்பி.