Header Ads



சர்வதேசத்திடம் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை, TNA யினரை 50 சதவீத தமிழர்கள் நிராகரித்து விட்டார்கள்


பெரும்பான்மைப் பலத்துடன் - வரலாற்று வெற்றியுடன் புதிய அரசு ஆட்சிப்பீடம் ஏறியுள்ளது. இந்த அரசு அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் நேசக்கரம் நீட்டுகின்றது. ஆனால், எந்தவொரு நாடுகளிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அடிபணிந்து செயற்படத் தயாரில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசின் புதிய அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் புதிய அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. எனவே, தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டு வளமான எதிர்காலத்தை நோக்கி எமது பயணத்தைத் தொடர்வோம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எம்முடன் விதண்டாவாதம் பேசாமல் அமைதியாக இருப்பதே நல்லது. கூட்டமைப்பினரை 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் நிராகரித்துள்ளார்கள். எனவே, கூட்டமைப்பினரின் கருத்துக்களைக் கேட்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. நாம் தமிழ் மக்களின் கருத்துக்களையே கேட்போம்.

தமிழ் மக்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்று பல பொய்களைக் கூறி சர்வதேசத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இனிமேல் அழைக்க முடியாது.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு இராணுவமே முழுப் பாதுகாப்பு. எம்மை நம்பிய தமிழ் மக்கள் மீது நாம் அதிக கவனம் செலுத்துவோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் இலங்கையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நல்லாட்சி அரசு வழங்கிய இணை அனுசரணை வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதனால் ஐ.நா. தீர்மானங்களும் செல்லுபடியற்றதாகி விட்டன.

இந்தப் புதிய அரசில் இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் எந்தத் தீர்மானங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.