முஸ்லிம் Mp க்களும் அதிக, எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட வேண்டும் - மனோ கணேசன்
“மக்கள் நினைத்தால் மூன்று தமிழ் எம்பீக்கள் கூட கொழும்பில் தெரிவு செய்யப்படலாம். பிரதிநிதித்துவம் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. தெரிவு செய்யப்படுவோர், நேர்மை, அர்ப்பணிப்பு, துணிச்சல், தூரப்பார்வை கொண்டோராக, விலை போகாதவராக இருக்க வேண்டும்” என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
தினக்குரலுக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில்லேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அவரது நேர்காணலின் விபரம்;
கேள்வி ; ஏன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றீர்கள்?
இந்நாட்டின் பிரதமர் பதவிக்கு நானோ, சம்பந்தனோ, ரவுப் ஹக்கீமோ போட்டியிடவில்லையே? ஜனாதிபதி, பிரதமர் பதவிகளுக்கு இலங்கையில் ஒரு சிங்கள பெளத்தரே நியமனம் பெறுவார் என்பது சட்டம் அல்ல. ஆனால், அது எழுதப்படாத விதி அல்லவா? ஆகவே போட்டியில் இருப்பவர்களில் ஒருவரைத்தான் நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி நாம் தெரிவு செய்பவர், எமக்கு முழுமையான திருப்தியை தரக்கூடியவராகவும், எமது எதிர்பார்ப்புகள் அனைத்தையும் நிறைவேற்றக்கூடியவராகவும் இருப்பார் எனவும் நாம் எதிர்பார்க்கமுடியாது.
இது போட்டியில் இருக்கின்றவர்களை ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு செய்ய வேண்டிய தெரிவுதான். இந்த அரசியல் யதார்த்தத்தை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படி பார்த்தால், இன்று களத்தில் இருக்கும், மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, அனுர திசாநாயக்க, சஜித் பிரமதாச என்ற பெயர் வரிசையில் சஜித் என்ற அரசியல்வாதிதான் எமது எதிர்பார்ப்பு நோக்கில் முன்னிலை வகிக்கின்றார்.
உண்மையில் அனுர திசாநாயக்க மீது எனக்கு விருப்பு இருக்கிறது. ஆனால், அவரால் இந்த தருணத்தில் இந்த இடத்திற்கு வெற்றி பெற்று வர முடியாது என்பது இன்னொரு அரசியல் யதார்த்தம்.
கேள்வி; ஏன் ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்றீர்கள்?
மேலே சொன்ன பதில் இதற்கும் பெரும்பாலும் பொருந்தும். ஐக்கிய தேசிய கட்சியுடன் எமக்கு இருந்த கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணி இப்போது கிடையாது. ஏனென்றால், அங்கே இருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற மூன்று சிறுபான்மை பங்காளி கட்சிகளும் இப்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளேயே இருக்கின்றன.
ஒரு சிறுபான்மை கட்சிகூட முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் தங்கவில்லை. ஆகவே இன்று தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் ஏக தெரிவு, ஐக்கிய மக்கள் சக்திதான்.
கேள்வி; நீங்கள் எல்லோரும் போய் விட்டதால், இப்போது ஐக்கிய தேசிய கட்சி சுத்தமாகி விட்டது என ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க மற்றும் அங்குள்ள சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகிறார்களே?
இயன்றவரை எம்மில் ஒரு சிறுபான்மை கட்சியையாவது, சஜித்துடன் போகாமல் நிறுத்திக்கொள்ள இவர்கள் கடும் முயற்சி எடுத்தார்கள். கெஞ்சி பார்த்தார்கள். சன்மானம் தர பார்த்தார்கள். இப்போது இப்படி கூறுகிறார்கள். இது, “கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்ற கதைதான். அல்லது “சீச்சீ, இந்த பழம் புளிக்கும்” என்ற கதைதான்.
இதில் இந்த நவீன் திசாநாயக்க யார்? ஐதேகவை விட்டு விலகி போய், 2015ம் ஆண்டு வரை மஹிந்த ஆட்சியில் ஒட்டிக்கொண்டு இருந்தவர். ரவி கருணாநாயக்கவை, “சஜித் போபியா” என்ற நோய் பிடித்து ஆட்டுகிறது. ஏனைய சில இன்றைய ஐதேக தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் யார்? நேற்றுவரை எங்கெங்கோ இருந்துவிட்டு, இன்று இவர்கள் டி. எஸ். சேனநாயக்கவின் கொள்ளுப்பேரர்களைபோல் பேசுகிறார்கள். ஏதோ பிறப்பில் இருந்தே ஐதேககாரர்களை போன்று பேசுகிறார்கள். இவர்களை பார்த்தால் சிரிப்புதான் வருகிறது. நாம் அங்கேயே இருந்திருந்தால், இவர்கள் எவருக்கும் அங்கே இடம் இருந்திருக்காது. இங்கே வந்து ஒட்டிக்கொண்டு இதேபோல் சஜித் புராணம் பாடி இருப்பார்கள். இவர்கள் நல்ல நகைச்சுவை நடிகர்கள். இவர்களை எல்லாம் கணக்கில் எடுக்க முடியாது. சிரித்துவிட்டு விட வேண்டியதுதான்.
உண்மையில் இப்போது ஐக்கிய தேசிய கட்சி ஒன்றும் சுத்தமாகவில்லை. இப்போது அங்கே அழுக்கு மட்டும்தான் எஞ்சி உள்ளது. வெளியே இருந்த பல அழுக்குகளும் இப்போது, அழுக்கு அழுக்குடன்தான் சேரும் என்பதாக அங்கே போய் ஒட்டிக்கொண்டு விட்டன. உண்மையில் அங்கே இப்போது அழுக்கு கூடி விட்டது. இதுதான் உண்மை கதை.
கேள்வி; கொழும்பில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா? எத்தனை தமிழ் எம்பீக்கள் வெல்வீர்கள்? சின்னங்களையும், பெயர்களையும் தவிர்த்துவிட்டு கூறுங்கள்.
ஆம். இது விளம்பரம் அல்ல. எனது செவ்வி. ஆகவே சின்னங்களையும், பெயர்களையும் தவிர்க்கிறேன்.
மக்கள் நினைத்தால் மூன்று தமிழ் எம்பீக்கள் கூட கொழும்பில் தெரிவு செய்யப்படலாம். இங்கே மட்டுமல்ல நாடு முழுக்க, அதுவும் தமிழ் மட்டுமல்ல, முஸ்லிம் எம்பீக்களும் அதிக எண்ணிக்கையில் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்பவை வேறு. முதலில் எம் பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் உறுதி செய்யப்பட வேண்டும்.
அதேவேளை பிரதிநிதித்துவம் என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல. தெரிவு செய்யப்படுவோர், நேர்மை, அர்ப்பணிப்பு, துணிச்சல், தூரப்பார்வை கொண்டோராக, விலை போகாதவராக இருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிவள அறிவு என்பது மேலதிக தகைமையாக இருக்க வேண்டும். இது நாடு முழுக்க பல்வேறு கட்சிகளில் போட்டியிடும் அனைத்து தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களின் பொதுவான “தகைமை”களாக இருக்க வேண்டும்.
Post a Comment