மஸ்ஜித் ஹரம் ஷரீஃப் கட்டமைப்பை வடிவமைத்த, நவீன கலைச்சிற்பி Dr முஹம்மது கமால் அவர்களின் நினைவுநாள்
கண்ணியம் பொருந்திய மக்கா மாநகரின் சங்கை பொருந்திய மஸ்ஜித் ஹரம் ஷரீஃப். இதன் கட்டமைப்பை வடிவமைத்த நவீன கலைச் சிற்பி டாக்டர் முஹம்மது கமால் இஸ்மாயில் அவர்களின் நினைவு நாள்.
100 ஆண்டுகள் வாழ்ந்தவர்.
----------------
எகிப்து நாட்டின் முதல் வடிவமைப்பு பொறியாளர் (ஆர்கிடெக்ட்) இவர். இளவயதிலேயே ஐரோப்பிய நாடுகளுக்கு உயர்கல்விக்காகச் சென்று இஸ்லாமிய பாரம்பரிய வடிவமைப்புக் கலையில் மூன்று உயர்நிலை முனைவர் பட்டங்களைப் பெற்றவர்; எகிப்து நாட்டின் உயரிய விருதான 'நைல்' பட்டயத்தை இளவயதில் பெற்ற பொறியாளர் இவர் என பன்னோக்குச் சிறப்புகளைப் பெற்றவர் டாக்டர் முஹம்மது கமால் இஸ்மாயில்.
13/09/1908 அன்று பிறந்து, மிகச்சரியாக நூறு ஆண்டு வயதை அடைந்து, 02/08/2008 அன்று இவ்வுலகை விட்டும் பிரிந்தார். அவர் வாழ்ந்த காலத்தில் வேறு எவருக்கும் கிடைத்திராத மக்கமா நகரின் புனிதமிக்க மஸ்ஜித் ஹரம் ஷரீஃபின் வடிவமைக்கும் பாக்கியத்தைப் பெற்று தனது இறுதி மூச்சுவரை மக்காவிலும் மதீனாவிலும் சதா இறைவழியில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
02/08/2020.
அவரின் நினைவு நாள்.
புனித மக்கா, மதீனா நகரங்களின் இரு மகுடங்களாக நிமிர்ந்து நிற்பவை "மஸ்ஜித் ஹரம் ஷரீஃப்". இவை இரண்டும் கட்டப்பட்ட தொடக்க காலத்திலிருந்து அவ்வப்போதுள்ள காலத்தேவைகளுக்கேற்ப சில விரிவாக்கப் பணிகளைப் பெற்றிருந்தாலும், கடந்த 14 நூற்றாண்டுகளுக்குப் பிறகு நவீன முறையிலான விரிவாக்கம் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டது அண்மை காலத்தில்தான். 1948 க்குப் பிறகு பல கட்ட நேர்காணல்கள் பலருடன் நடைபெற்று நிறைவாக சவுதி மன்னர் ஃபஹத் அவர்கள் புதிய நவீன கலை நுட்பத்தோடு விரிவாக்கம் செய்திட வேண்டும் என முடிவெடுத்து, வடிவமைப்புத் துறையில் தனித்துவ ஆற்றலராய் விளங்கிய டாக்டர் முஹம்மது கமால் இஸ்மாயில் அவர்களைத் தேர்வு செய்து நியமனம் செய்தார். அவருடைய அரும் பணிக்காக சவூதி மன்னர் அவருக்கு முன்பணமாக மில்லியன் கணக்கில் டாலராக செக் ஒன்றை எழுதிக் கொடுத்தார். அப்போது உடனடியாக மறுத்துச் சொன்னாராம் இப்படி. "புனிதமான இவ்விரண்டு மஸ்ஜிதுகளையும் நவீன வடிவமைப்புச் செய்ய உங்களிடத்திலிருந்து இந்த செக்கைப் பெற்று விட்டால் மறுமையில் அல்லாஹ்வின் முன்னால் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு நிற்பேன்? அந்தோ பரிதாபம்! வேண்டாம் இந்த பணம்; என் பணியை செவ்வனே நிறைவேற்ற வல்ல இறைவன் துணை நிற்கவும், உங்களின் ஒத்துழைப்பு நல்கிடவுமே வல்ல இறைவனின் அருள் வேண்டி நிற்கிறேன்"என்று. இந்த பதிலுரையைக் கேட்டதும் மன்னர் ஃபஹத் மற்றும் அவரின் அமைச்சரவை சகாக்களும் திகைத்துப்போனார்களாம். இந்நிகழ்வை புனித ஹரம் ஷரீஃபின் வரலாற்று நூல் அழகுபட சித்தரித்துக் காட்டுகிறது. (Author: Dr. Zaglool Al Najjar).
அவரின் தொடர் பணிகளுக்கிடையில் மன்னர் ஃபஹதிலிருந்து, மன்னர் அப்துல்லாஹ், மன்னர் அப்துல் அஜீஸ், மன்னர் சல்மான் என மன்னர்களின் வரிசைப் பட்டியலில் அனைத்து மன்னர்களின் ஆட்சிக் காலங்களிலும் அவரின் நெருக்கம் மன்னர்களுடன் மிக அணுக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் எவரிடமிருந்தும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே தனது அரிய பணிகளில் இடைவிடாது கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.
இஸ்லாமிய கலை நுட்பத்தில் ஆழ்ந்து ஆய்வு செய்து மூன்று முறை டாக்டர் பட்டம் பெற்ற பொறியாளர் முஹம்மது கமால் இஸ்மாயில், மஸ்ஜித் ஹரம் ஷரீஃபின் நவீன தோற்றத்தைப் பல வடிவங்களில் வரைந்து அதில் சிறு சிறு மாற்றங்களை ஆழ்ந்த ஆய்வுக்குப் பிறகு உருவாக்கி, மீண்டும் மீண்டும் ஆய்வு செய்து உரிய மாற்றங்களைக் கொணர்ந்து நிறைவாக தனது 44வது வயதில்தான் ஒரு முடிவான வடிவமைப்பை நிலைநாட்டி இருக்கிறார். அதனைத்தான் இன்று நாம் பார்த்து வருகிறோம். அதுவரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல் முழுநேரமும் மஸ்ஜித் ஹரம் ஷரீஃபிலேயே தனது கால நேரத்தைக் கழித்து வந்த அவர், அதன்பிறகுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
திருமணம் முடிந்து ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி இறந்து போய்விடவே, எஞ்சிய தமது வாழ்வில் மறுபடி திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் தன் வாழ்நாளை முழுவதுமாக மக்காவிலும் மதீனாவிலும் புனித ஹரம் ஷரீஃபிலேயே கழிக்கலானார். உலகின் பல நாடுகளிலிருந்தும் மிக உயரிய நிறுவனங்களில் பணிபுரிய அவருக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. அவர் எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் இறுதி மூச்சுவரை ஹரம் ஷரீஃபிலேயே லயித்துப் போயிருந்தார்.
புனித கஃபாவை தவாஃப் செய்கிறபோது எவ்வளவு கடும் வெயிலாக இருந்தாலும் கால் பாதங்களுக்கு சூடு தெரியாது. நடக்கும்போது கால்களுக்கு இதமாகவே இருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
அதன் ரகசியமும் அற்புதமும் என்ன? அதில் பொறியாளர் முஹம்மது கமால் இஸ்மாயில் அவர்களின் பங்கு என்ன?
இன்ஷா அல்லாஹ், நாளை பார்ப்போம்.
----------------
M. அப்துல் ரஹ்மான்
மாநில முதன்மை துணைத் தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
Post a Comment