பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன், இருக்க பழகிக்கொள்ள வேண்டும் - லக்ஷ்மன் கிரியெல்ல
பாராளுமன்றத்தின் நற்பெயரயும் கெளரவத்தையும் பாதுகாத்துக்கொள்ளும்வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவேண்டும். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிக்கவேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இருக்கும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுகான திசைமுகப்படுத்தல் செயலமர்வு இன்று பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
1989இல் நான் ஆரம்பமாக பாராளுமன்றத்துக்கு தெரிவானபோது இவ்வாறானதொரு கருத்தரங்கு எங்களுக்கும் நடத்தப்பட்டது. அந்த நடைமுறைக்கமைய தற்போதும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான கருத்தரங்குகள் புதிய உறுப்பினர்களுக்கு மிக முக்கியமானதாகும்.
அத்துடன் கடந்த காலங்களில் ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை மற்றும் பேச்சுக்களால் பாராளுமன்றத்தின் கெளரவம் மற்றும் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அவ்வாறான சம்பவங்கள் இரண்டு தரப்பில் இருந்தும் ஏற்பட்டிருக்கின்றன.அதனால் இந்த பாராளுமன்றத்துக்கு விசேட பொறுப்புக்கள் இருக்கின்றன. கடந்த காலங்களில் ஏற்பட்ட, அனுமதிக்க முடியாத சம்பவங்கள் இடம்பெறாமல், பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாமல் அதனை மாற்றியமைக்கும் பொறுப்பு புதிய உறுப்பினர்களுக்கு இருக்கின்றது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுமையுடன் இருக்க பழகிக்கொள்ளவேண்டும். சபையில் எமக்கு எதிராக கருத்துக்கள் தெரிவிக்கப்படும் போது அதனை அமைதியாக கேட்டுவிட்டு, பின்னர் சபாநாயகரின் அனுமதியை பெற்றுக்கொண்டு எமது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் சபாநாயகர் எப்போதும் உறுப்பினர்களின் பக்கமே இருப்பார். கடந்த காலங்களில் இருந்த சபாநாயகர்களும் அவ்வாறே செயற்பட்டிருக்கின்றனர்.
அதனால் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக நன்கு விளங்கிக்கொண்டு, பாராளுமன்றத்தின் நற்பெயரை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும் என்றார்.
Post a Comment