Header Ads



தலைமைப் பதவியை கருவிடம் கொடுக்க முடியாது - ரணில் சொன்ன காரணம்



ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இல்லாதமையால் கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவுக்குக் கொடுக்க முடியாது என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சியின் சட்டப்பிரிவுச் செயலாளரும் தெரிவித்திருக்கின்றார்கள். கட்சியின் புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பதையிட்டு ஆராய்வதற்காக கட்சியின் செயற்குழுவின் விஷேட கூட்டம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற போதே அவர்கள் இதனைத் தெரிவித்திருக்கின்றார்கள்.


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள அழைப்பாணை தொடர்பாகவும் ஐ.தே.க.வின் செயற்குழுவில் ஆராயப்பட்டது. செவ்வாய்கிழமை இரவு ஐ.தே.க.வின் தலைமையகமமான சிறிகொத்தாவில் நடைபெற்ற கூட்டத்திலேயே இது குறித்து ஆராயப்பட்டது.


ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக ரணில் விக்கிரமசிங்க சாட்சியமளித்த பின்னர், அடுத்த மாதத்தில் ஐ.தே.க. செயற்குழுவை மீண்டும் கூட்டி கட்சித் தலைமைப் பதவி குறித்து ஆராய்வது எனவும் செயற்குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


கட்சியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்பதற்குத் தான் தயாராக இருப்பதாக, தலைமைக்கு அனுப்பிவைத்த கடிதம் ஒன்றில் கரு ஜயசூரிய தெரியப்படுத்தியிருந்தார். இது தொடர்பாக ஆராயப்பட்டபோது சபாநாயகராகக் கடந்த ஆட்சிக் காலத்தில் கரு ஜயசூரிய பதவி வகித்தமையால் கட்சியின் செயற்குழு உறுப்பினராக அவர் இருக்கவில்லை.


அதனால், கட்சியின் செயற்குழு உறுப்பினராக முதலில் அவர் இணைந்துகொண்ட பின்னரே தலைமைப்பதவியை அவருக்குக் கொடுப்பது தொடர்பில் ஆராயமுடியும் எனவும் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


இருந்த போதிலும் கரு ஜயசூரியவிடம் கட்சித் தலைமைப் பதவியைக் கொடுக்கக்கூடாது என வஜிர அபயவர்த்தன உட்பட கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தினார்கள். “ஐ.தே.க.வின் தலைமைக்குத் துரோகம் செய்துவிட்டு ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் இணைந்து செயற்பட்டவர்தான் கரு ஜயசூரிய” என இவர்கள் குற்றஞ்சாட்டியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த வாதப் பிரதிவாதங்கள் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.


கட்சித் தலைமையை இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவரிடம் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கைதான் செயற்குழுக்கூட்டத்தில் மேலோங்கியிருந்தது. கட்சிக்குத் துரோகம் செய்த ஒருவருக்கு தலைமைப்பதவியைக் கொடுக்கக்கூடாது என்ற கருத்துக்கும் ஆதரவு மேலோங்கியிருந்தது.


இந்த நிலையில், செயற்குழுக் கூட்டம் எந்த முடிவும் இன்றி முடிவுக்கு வந்தது. செப்டம்பர் 1 ஆம் திகதி செயற்குழுவின் அடுத்த கூட்டம் நடைபெறும் எனவும், அதில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.